ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, 'டை' கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.சாதியின் பெயரால்... மனுநீதியின் பெயரால்... ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.
இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். "இந்துவாகச் சாகமாட்டேன்" என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.
அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுக்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.
இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடி வருகின்றார்.இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை 'தொப்புள்கொடி உறவு' என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.
இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப் பெற்றுத் தொடர்கிறது.தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.
தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது.
அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் மென்று விழுங்கிவிட்டது.தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்ததுவிட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு.2009, நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி உடன்பாடு கண்ட பின்னர், பச்சைத் துரோகம் புரிந்துவிட்டு, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த கிருஷ்ணசாமி போல் அல்லாமல் பா.ஜ.க.வின் பக்கமே செல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரமாக இயங்கி வருபவர், தொல். திருமாவளவன்.
பா.ஜ.க.வின் நேரடிப் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களைத் தவிர, ஏனைய அனைவரும் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டனர். தி.மு.க., ஆ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் மட்டுமன்றி, நேற்று முளைத்த நடிகர் சரத்குமாரின் ச.ம.க.முதல் நடிகர் கார்த்திக்கின் நா.ம.க. வரை எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வைத் தழுவிய கட்சிகள்தான்.மாற்றத்தை நிகழ்த்தப் புறப்பட்டிருக்கும் தே.மு.தி.க.வின் விஜயகாந்தும் பா.ஜ.க.வுடன் பெரும் பேரம் நடத்தியவர்தான்.அரசியலில் பல நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டபோதும் தடுமாறிவிடாமல், பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்துவிடாமல் கொள்கை உறுதி காப்பவராக திருமாவளவன் விளங்குகின்றார்.
1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார் என்றாலும், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.
1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்."எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி" என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிப்பாளர்.
தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.இப்படியாக... தமது ஒவ்வொரு அசைவுகளாலும் முஸ்லிம்களுடனான உறவை உறுதிப்படுத்தி வந்த திருமாவளவன், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஒரு தீவிரப் போக்கை கையாண்டு வருகின்றார்.
"மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்" என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.
முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார். அரசுக்கு உரைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில் காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.
தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை முகமது யூசுப் என்ற முஸ்லிமுக்கு தந்ததோடு, ஏராளமான முஸ்லிம்களைக் கட்சி நிர்வாகிகளாக்கினார்.நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.
பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது எல்லா பெரியாரிஸ்டுகளும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார், திருமாவளவன்.
இவ்வாறு, தொடர்ச்சியாக... அதிரடிமேல் அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, திருமாவளவன் இவ்வளவு தீவிரமாக இயங்கி வருவது தமிழக அரசியல் சமூகக் களத்தில் அதிவலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துகின்றாரே என்ற வெறுப்பில் இந்துத்துவ சக்திகளும்...நாம் பேசி வருவதை எல்லாம் இவரும் பேச ஆரம்பித்துவிட்டாரே என்ற பதற்றத்தில் சில இஸ்லாமிய அமைப்புகளும்...முஸ்லிம்களுக்காகப் பொதுத் திளத்தில் நின்று போராடி நமக்கும் நெருக்கடி தருகின்றாரே என்ற படபடப்பில் அரசியல் கட்சிகளும்...'தலைவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை' என்ற புறக்கணிப்பில் சில விடுதலைச் சிறுத்தைகளுமாக அந்த அதிர்வுகள் வேறுபடுகின்றன.
இவர்களைத் தாண்டி, பொதுவான இஸ்லாமிய மக்களிடம் திருமாவின் செயல்பாடுகள் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.'பொதுதளத்தில் நமக்காக வீரியமாக குரல் எழுப்புகின்றாரே' என்ற நன்றி உணர்வும், 'இஸ்லாம் மார்க்கம் குறித்து இவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றாரே' என்ற வியப்பும் திருமா மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.எனினும், நன்றி உணர்வும், வியப்பும் இருக்கின்ற அளவுக்கு ஒரு வித தயக்கமும் முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
"என்னதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பினாலும், இஸ்லாத்தைப் பற்றி மேடை தோறும் முழங்கினாலும், அடிப்படையில் திருமா ஓர் அரசியல்வாதி ஆயிற்றே! அவரை எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பி எந்த எல்லை வரை செல்லலாம்? என்று மனதுக்குள் எழுகின்ற கேள்விகளே முஸ்லிம்களிடம் தயக்கமாக வெளிப்படுகிறது.
முஸ்லிம்களின் இத்தகைய மனநிலையைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், திருமாவை நம்பலாமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கம், திருமா மீதான அவ நம்பிக்கையினால் ஏற்பட்டது அல்ல.அது, காலங்காலமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வடு. வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடு. எல்லோராலும் ஏமாற்றப்பட்டதனால் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை உணர்வு.தங்களை நோக்கி வரும் அரசியல்வாதிகளைக் கண்டு முஸ்லிம்கள் என்று அச்சப்படுகின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு புதைந்திருக்கிறது.
ஒருவரை நம்புவதும், நம்பிய பின் கழற்றி விடப்படுவதும், களமிறங்கிய பின் கவிழ்க்கப்படுவதுமாக முஸ்லிம்கள் சந்தித்துவரும் துரோக வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்குகிறது.ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களை இலக்காக கொண்டு 1906 ஆம் ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீகை தொடங்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களே.காங்கிரசின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதும் முஸ்லிம்களின் நலன் காக்க தனியொரு அமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
காங்கிரஸ் முன்னொடியான முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மூலம்தான் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும் என்று விடாப்பிடியாக நம்பினார். இறுதியில் அவருக்கும் அவநம்பிக்கையே பரிசாகக் கிடைத்தது. தீவிட மதச்சார்பற்றவாதியாக தன்னை முன்னுறுத்திய அவர், காங்கிரசின் வகுப்புவாதத்தினால், முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைவராக உயரும் நிலை வந்தது.
1906-ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட்போதும், 1938ல் தான் தமிழகத்தில் அவ்வியக்கம் வேரூன்றியது. அதுவரை இங்குள்ள முஸ்லிம்கள் காங்கிரசே கதி என நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைத்தது காங்கிரஸ் கட்சி.
தென்னகத்தில் வணிகப் பெரு வள்ளலாகவும், காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய தலைவராகவும் விளங்கிய ஜமால் முஹம்மது சாஹிப், 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசில் மேலோங்கி இருந்த வகுப்புவாதமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் ஜமால் முஹம்மது சாஹிபை தோற்கடிக்கச் செய்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிபெற வைத்தது.
காங்கிடசின் இத்தகைய நயவஞ்சகத்தனத்தால் நிலைகுலைந்தார் ஜமால் முஹம்மது சாஹிப் ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீகிலிணைவது குறித்து, அதுவரைச் சிந்தித்துக் கூட பார்த்திடாத அவர், உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி, முஸ்லிம் லீகில் இணைந்தார்.ஜமால் முஹம்மது சாஹிபுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தீவிர காங்கிரஸ்வாதியான அவரது உறவுக்காரர் ஒருவரின் உள்ளத்தை உலுக்கியது. காங்கிரசின் நம்பிக்கைத் துரோகத்தை உணர்ந்து தெளிந்த அவரும் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக்கொண்டார். அவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.
காங்கிரகை நம்பி முஸ்லிம்கள் இழந்தவற்றைப் பட்டியலிட்டால் அது எதற்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்லும். பாகிஸ்தான் பிரிவினை முதல் பாபர் மஸ்ஜித் பிரச்சினை வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப்பெரும் இழப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நேர்ந்தவையே.முஸ்லிம்களுக்கு எப்போதுமே எதிரியைத் தீர்மானிப்பதில் பிரச்சினை இருந்ததில்லை. பா.ஜ.க.வை நம்பி அவர்கள் மோசம் போனதாக வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை. அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் நண்பர்களை நம்பியதிதான் இருக்கிறது.
காங்கிரசின் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்டோரின் உரிமை அரசியலை முன்னெடுத்து தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட அச்சாணியாய் இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.
காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியும், கேரளாவில் இடதுசாரி ஆட்சியும் ஏற்பட வழிவகுத்தவர் அவர். அப்படிப்பட்ட காயிதே மில்லத்தும் கடைசியில் ஏமாற்றப்பட்டார்தமிழகத்தில் நமது அணி வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்று கரம் பற்றிச் சொன்னவர்கள், வென்ற பின்னர் காலை வாரினார்கள். பதவி ஏற்றபின் வந்து கரம் கூப்பினார்கள்.
500 ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம் லீகை அழிக்க முடியாது என்று சூளுரைத்தார் காயிதே மில்லத். அந்த மகத்தான தலைவர் உயிர் கொடுத்து வளர்த்த அந்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பின் நிர்மூலமாக்கிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும்.முஸ்லிம் லீகின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழு அரசியலை உருவாக்கி, ஈகோவை கூர்தீட்டி, ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை உருக்குலைத்தன திராவிடக்கட்சிகள்.எந்த திராவிடக் கட்சியை காயிதே மில்லத் நண்பன் என்று நம்பினாரோ அந்த திராவிடக் கட்சிதான் அவரது மறைவுக்குப் பின் தனது சுயநலனுக்காக முஸ்லிம் லீகை சூறையாடியது.
இது ஒருபுறமென்றால், தமது கட்சிக்காக காலமெல்லாம் உழைத்த முஸ்லிம்களைத் திராவிடக் கட்சிகள் கைவிடும் அவலம் மறுபுறம் தொடர்கிறது.தி.மு.க தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுக்குக் களம் தந்தவர்கள் முஸ்லிம்கள். 'நபிகள் நாயகம் பிறந்த தின விழா' என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்ட 'மீலாது விழா'க்கள் தான் தி.மு.க.வின் பிரச்சாரக்களம்.
முஸ்லிம்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்த தி.மு.க.வில் முன்னணி தலைவராக இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர், துனைப் பொதுச்செயலாள்ர்கள் என நீளும் தலைமை நிர்வாகிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. சமூக நீதியை வலியிறுத்தும் தி.மு.க.வின் நிர்வாக அமைப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
ஆயிரம் விளக்கு உசேன், தி.மு.க. முன்னொடிகளில் ஒருவர். மு.க.ஸ்டாலினை அரசியலில் ஒளிரச் செய்வதற்காக தன்னையே உருக்கிக்கொண்ட மெழுகுவர்த்தி அவர். நெருக்கடி நிலை கால சிறைவாசிகளில் ஒருவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த சிறப்புக்குரியவர்.அப்படிப்பட்ட உசேனுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அவரது தொகுதியான திருவல்லிக்கேணியில் கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.உசேனுக்கு நேர்ந்த இந்த அவலம், தி.மு.க.வின் வேறு எந்த தலைவருக்காவது நேர்ந்திருக்குமா?
வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க.வுக்குத் துணிவு வருமா?
காட்பாடியில் துரைமுருகனுக்குப் பதிலாக, துறைமுகம் காஜாவுக்கு சீட் தருமா?
திருவல்லிக்கேணியில் உசேனை மறுத்து, நாகநாதனை நிறுத்துகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?
எனினும், முஸ்லிம்கள் முன்புபோல் இல்லாமல் தெளிவாக முடிவு எடுத்து நாகநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லிம் வேட்பாளர் பதர் சயீதை வெற்றிபெற வைத்தார்கள். தம்மை வஞ்சிப்பவர்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி தந்தார்கள். தாங்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.
தி.மு.க.வில் இத்தகைய நிலை என்றால், அ.தி.மு.க. பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம்தராமல் புதிய வரலாறு படைத்தார் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பாசிசப் போக்கை விவரிக்க முடியாத அளவுக்கு அது நீளமானது; ஆழமானது.
தமிழக அரசியல் களத்தில் சமூகப் நீதிப் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியாய் பரிணமித்த பாட்டாளி மக்கள் கட்சியாலும் முஸ்லிம்களுக்குப் படிப்பினைகளே அதிகம். பா.ம.க.வின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் அலைந்து மேடைகள் தோறும் முழங்கியவர் போராளி பழனிபாபா."டாக்டர் இராமதாசை நம்பினால் கைவிடப்பட மாட்டோம்" என்று சொல்லி முஸ்லிம்களிடம் நம்பிக்கை விதைகளைத் தூவியவர் அவர்.
இறுதியில் அவரே அவநம்பிக்கை அடையும் அளவுக்கு இராமதாசின் சுயமுகம் வெளிப்பட்டது.தி.மு.க.வின் முன்னணிப் பொறுப்புகலில் முஸ்லிம்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க அளவுக்கு இராமதாஸ் மோசமானவரில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவர் சமூக நீதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுவார். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் வாய்ப்பளித்ததில்லை.
இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் லீகை மதவாதக் கட்சி என்றும் சொல்வார்கள். அதே முஸ்லிம் லீக்கோடு கூட்டணியும் வைத்துக் கொள்வார்கள்.
கேரளாவில் இளம்தலைமுறை தலைவரான அப்துல் நாசர் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியோடு 2009 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தனர். தேர்தலில் தோல்வியடைந்த உடன், தமது கூட்டணி சகாவான மதானியைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் மலிவான அரசியலை கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்தனர். பொய் வழக்குப் போட்டு மதானியின் மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அரசின் பழிவாங்கும் போக்கை அம்பலப்படுத்தி மதானியின் மனைவியை விடுதலை செய்தது.
கம்யூனிஸ்டுகளை நம்பிய மதானி ரணப்பட்டார்.
பா.ம.க.வை நம்பிய பழனிபாபா மனம் புண்பட்டார்.
தி.மு.க.வை நம்பிய காயிதே மில்லத் ஏமாற்றப்பட்டார்.
காங்கிரஸை நம்பிய ஜமால் முஹம்மது சாஹிப் தோற்கடிக்கப்பட்டார்.
நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.
திருமாவிடம் விடை இருக்கிறதா?
நன்றி. ஆளூர்ஷாநவாஸ்
சமநிலைச் சமுதாயம் ஜூலை 2010
பழனி பாபா வலைத்தளம்
சமநிலைச் சமுதாயம் ஜூலை 2010
பழனி பாபா வலைத்தளம்
1 comment:
"நாசியில் சுவாசமுள்ள எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவநல்ல என்பது பைபிள் சொல்லும் குறிப்பு! இது திருமாவுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்!
Post a Comment