Tuesday, September 25, 2012

கண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்


ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு இந்தியனாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தானே வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார்.
14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.
அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.
அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
ஆனால், விவாத முடிவில் இந்தியை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, வாக்குககுள் இருதரப்புக்கும் சரிசமமாகப் பிரிந்த நிலையில், அவைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தனது ஒரு வாக்கை இந்திக்கு சாதகமாக அளித்ததால் இந்தி அரியணை ஏறியது.
ஆட்சி மொழி பற்றிய விவாதம் மக்களவையில் வரும்போதெல்லாம், காயிதே மில்லத் இந்திக்கு எதிரான தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிடத் தயங்கியதே இல்லை. 26.4.63 அன்று மக்களவையில் அவர் உரைத்தார்:
“மொழி என்பது உணர்ச்சிபூர்வமானது. ஒருவன் வாழ்க்கை முழுவதிலும் அது பிரதிபலிக்கிறது. தொட்டு நிற்கிறது. எனவே இதுகுறித்து விளையாட்டாகவோ மேம்போக்காகவோ பேசிவிட்டு நிறுத்திவிட முடியாது.
ஒரு மொழியை மட்டும் மத்திய அரசு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் அந்த மொழியைப் பேசுகிறவர்கள் மட்டும் ஆட்சியாளர்களாகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆளப்படுபவர்களா ஆகி விடுவார்கள்.
ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக வேண்டுமா? அல்லது இந்நாட்டின் ஒற்றுமை முக்கியமா? இதுதான் இன்று கேள்வி. எனவே நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின் விருப்பங்களையும், அச்சங்களையும் மதித்து சரியானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைமையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.”
தமிழ் மொழிக்காக மட்டுமல்ல. மாநிலப் பிரிவினையின்போது தமிழன் இழந்த மண்ணுக்காகவும் காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் வாதிட்டார். தேவிகுளம், பீர்மேடு தமிழனிடமிருந்து பறிபோனபோது, குளமாவது மேடாவது என்று காமராசர் குதர்க்கம் பேசினார். ஆனால் 24.12. 1955 அன்று நாடாளுமன்ற மேலவையில் மாநில எல்லைகள் சீரமைப்புக் கமிஷன் அறிக்கை மீது நடந்த விவாதத்தின் போது தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதிகள் என காயிதே மில்லத் வாதிட்டார். திராவிடச் சிக்கல், இந்தியச் சிக்கல் எதுவும் இன்றி தமிழர் பக்கம் நின்று கச்சிதமாக வாதிட்டார் இந்த தென்பாண்டித் தமிழ் மறவர்.
“நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதேபோல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை. அப்பகுதியில் தமிழ் மொழி பேசுபவர்களே பெரும்பான்மை. ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது. தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்துபோகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள். கடந்த தேர்தலின்போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்துபோகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி. தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது. தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்” 

இங்கே நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காயிதே மில்லத் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர். எல்லா மாநிலங்களிலும் அவர் அரசியல் செய்தாக வேண்டும். குறிப்பாக தமிழக முஸ்லிம்களை விடவும், கேரளா முஸ்லிம்கள் அவரது வாக்கைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுபவர்கள். அப்படியிருந்தும் தேவிகுளம், பீர்மேடு பகுதியை கேரளாவுடன் இணைக்கக் கூடாது என்று ஒரு தமிழனாய் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
தமிழ் மொழிக்காகவும், மண்ணுக்காகவும் நாடாளுமன்றத்தில் வாதிட்டவர், தமிழ் அகதிகளுக்காகவும் 22.8.63 அன்று வாதிட்டார்.
“அகதிகள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பகுதியிலிருந்து வந்த அகதிகள் உரிய முறையில் கவனிக்கப்படுகிறவர்கள். ஆனால் இலங்கை, பர்மா, மலாயா போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகள் நாதியற்றவர்களாய்த் தத்தளிக்கிறார்கள். சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களது அவலக் குரல் டெல்லியில் கேட்பதே இல்லை”
மேலும் இலங்கை மலையகத் தமிழர்கள்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றிய விவாதத்தின்போது சட்டசபையில் 25.10.78 அன்று அவர்களுக்கு ஆதரவாக வாதிட்டார்.
“இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்கள்தான் அந்நாட்டை வளப்படுத்தினார்கள். செழிப்புள்ளதாக்கினார்கள். நமது மக்களின் உழைப்பின் பலனாகவே இலங்கை வளம் மிக்கதானது. நாலைந்து தலைமுறையாக நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அத்தீவில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள். 1947 ஆம் ஆண்டில்கூட அன்றைய இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேன நாயகா, இலங்கை வாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் குடியுரிமை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். குடியுரிமை பெற விரும்புவோர் மீது அநாவசியமான நிபந்தனைகளை விதிக்காமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.”
ஒரு தமிழனாகத் தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் அரசியல் தளத்தில் நின்று அவர் ஆற்றிய கடமையை மேலே கண்டோம். அதே நேரத்தில் ஒரு முஸ்லீமாக, விடுதலை பெற்ற இந்தியாவில், மேற்கு, கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றதுபோக, எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களை அரவணைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் அவர் செவ்வனே நிறைவேற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது. வேறு யாருடைய பங்களிப்புக்கும் குறைவில்லாதது. மாவீரர் குஞ்சாலி, மைசூர்ப் புலி திப்பு சுல்தான், மாமன்னர் பகதூர்ஷா, என்னிரு கைகளாய் விளங்கும் இரு சிங்கங்கள் காந்தியே போற்றிய மாவீரர்கள் அலி சகோதரர்கள், நேதாஜியின் ஐ,என்.ஏ., வில் பணியாற்றிய முஸ்லிம் வீரப் பெருமக்கள் இவர்களுடைய வரலாறுகளைப் படித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். ஆனால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்து முஸ்லிம் இரு தரப்பாருமே இரையாகி விட்டிருந்த நேரம் அது.
நாடு இரண்டாக உடைந்ததற்குக் காரணம் யார்? ஜின்னாவா? நேருவா? நடுநிலையாளர்கள் அறிவார்கள். விடுதலை பெறப்போகும் இந்தியாவில் ஜின்னாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து விடுங்கள். நாடு உடையாமல் காப்பாற்றுங்கள் என காந்தியார் முன்வைத்த கடைசி நேர சமரசத்தை நிராகரித்தது யார்? சகாக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனச் சாக்குச் சொல்லி, கடைசி நேர வாய்ப்பையும் கைகழுவி, இந்தியா இரண்டாக உடையக் காரணமாக இருந்தது நேருபிரான் அல்லவா?
நேரு அரசியலில் தனது போட்டியாளர்களாகக் கருதியது இருவரைத்தான். ஒருவர் நேதாஜி. மற்றவர் ஜின்னா. ஒன்று நேருவுக்கு தலைவலி. மற்றது திருகுவலி. இந்தியா விடுதலைப் பெறப் போகிறது. நேதாஜி இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை. ஜின்னாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து இந்தியா உடையாமல் காப்பாற்றல்லாம். ஆனால் தனது திருகுவலி நிரந்தரமாகிவிடும். சிறந்த சட்ட மேதையான ஜின்னா அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவியை செயல் அதிகாரமுள்ள பதவியாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டால்? தட்டிக் கேட்பார். யாருமின்றி இந்தியாவைத் தன்னால் ஆள முடியாதே? நேருவின் இந்த சர்வாதிகார மனோபாவத்தால்தான் நாடு பிளவுண்டது.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதைப் போல இந்தியாவில் எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களும்தான் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் காங்கிரசாரால் தூற்றப்பட்டார்கள்.

இந்தச் சூழலில்தான் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. 1906 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் அது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக இந்தியா பிரிந்துவிட்ட நிலையில் கட்சியைக் கலைத்து விடுவதர்காகக் கூடிய கூட்டம் அது.
கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலிகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக நமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழனின் தோள்களில், நம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது.
நமது காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்றே, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார். எவ்வாறு?
கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்றார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்,
“நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறித்துவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!”எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது!
இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீகைச் செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. செத்த பாம்பை  எடுத்து ஆட்டிக் காட்டுகிறார் பேட்டை இஸ்மாயில் என காயிதே மில்லத் அவர்களைக் கேலி செய்தார்கள் காங்கிரசார். ஒரு படி மேலே போய், பிரிந்து போய்விட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியிடம், கோடிக்கணக்கில் பணமும் சொத்துக்களும் உள்ளன. இந்தியாவில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கி நடத்தினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பாகிஸ்தானியர் சொன்னதாலேயே காசுக்கு ஆசைப்பட்டு காயிதே மில்லத் கட்சி தொடங்கியிருப்பதாக பட்டேல் குற்றம் சாட்டினார்.
அப்போது கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி, காயிதே மில்லத்தை நேரில் அழைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொத்துக்கள், பணப் பரிமாற்றம் ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறி ஆழம் பார்த்தார். வேற்று நாட்டிலிருந்து தங்கள் கட்சிக்கு எந்த உதவியும் தேவை இல்லை என ராஜாஜியிடம் காயிதே மில்லத் தெரிவித்து விட்டார்.
நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற காயிதே மில்லத் ஒருமுறை மக்கா சென்றிருந்தபோது கடுமையாக நோய்வாய்பட்டு விட்டார். மக்காவில் பாகிஸ்தான் அரசின் மருத்துவமனை சிறந்த மருத்துவமனை. சவூதி அரேபியா நடத்தும் மருத்துவமனை சிறந்த மருத்துவமனை, அங்கே போகலாம், இங்கே போகலாம் என உடனிருந்த தோழர்கள் ஆலோசனைகள் சொன்னார்கள். காயிதே மில்லத் அவர்கள் அங்கெல்லாம் என்னைக் கொண்டு சேர்க்கக் கூடாது. இந்திய அரசின் மருத்துவமனை ஒன்றில்தான் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியாகக் கூறிவிட்டு, உடனே மயங்கி விட்டார்கள். மக்காவில் இருந்த இந்தியத் தூதர் உடனே வந்து, தனது வீட்டிற்கே கொண்டு சென்று, இந்திய மருத்துவர்களை வரவழைத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்தார். காயிதே மில்லத் பிழைத்துக் கொண்டார்.
பிறகு காயிதே மில்லத் தன் பிடிவாதத்திற்கான காரணத்தை விளக்கிச் சொன்னார்.“நோயின் கடுமையினால் நான் இறந்துபடவும் கூடும் என நினைத்தேன். நான் இறந்தால் இந்திய மண்ணில்தான் இறக்க வேண்டும் என விரும்பினேன். அந்நிய நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதர் அலுவலகம், தூதர் வீடு இவை இந்திய மண்ணிற்குச் சமம். இது சர்வதேச மரபொழுக்கம். எனவே இந்திய இந்தியத் தூதர் வீட்டில் சிகிச்சை பெறச் சம்மதித்தேன். இறந்திருந்தால் இந்திய மண்ணில்தான் இறந்தேன் என்ற நிம்மதியோடு இறந்திருப்பேன் அல்லவா?”
இந்தியா பாகிஸ்தானுடன், சீனாவுடன் மேற்கொண்ட போர்களின் போதெல்லாம் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உளப்பூர்வமாக இந்தியாவின் பக்கம் நிற்கச் செய்தார். சீன யுத்தத்தில் தன் மகனையே யுத்த களத்திற்கு அனுப்பத் தயார் எனப் பிரதமருக்கு கடிதம் எழுதினார். வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற நாட்டு நலன் சார்ந்த நடவடிக்கைகளில் இந்திராவை உறுதியாக ஆதரித்தார்.
நாட்டுப் பற்று ஈமானின் ஒரு பகுதி என்ற நபிகள் நாயகத்தின் வாக்கின்படியே வாழ்ந்து காட்டினார்.
இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்ற காயிதே மில்லத் அவர்கள், ஒரு உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் நின்று தொடர்ந்து மூன்று முறை வென்று காட்டினார். ஒருமுறை கூட தேர்தலின் போது மஞ்சேரி தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் செல்லவே இல்லை.
தமிழகத் தேர்தல்களில் திருமங்கலம் தில்லுமுல்லுகளையும் சங்கரன்கோயில் திகிடுத்தங்களையும் அறிமுகப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காயிதே மில்லத் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று வணக்கம் செய்ய தவறுவதில்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் காயிதே மில்லத் கடைப்பிடித்த தேர்தல் நெறிமுறைகளை அடக்கம் செய்யவும் தவறுவதில்லை.
காயிதே மில்லத் அவர்களின் வாழ்நாள் சாதனைகள் பலவற்றுள் மிக முக்கியமானது காங்கிரசை தமிழ் மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியதுதான்.
1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுவில் காயிதே மில்லத் அவர்கள் ஒரு முடிவினை எடுத்து அறிவித்தார்.
“கொள்கை கோட்பாடுகள் எத்தகையவைகளாக இருந்தாலும் அவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பொதுவாக, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் மூலம் எல்லா எதிர்க் கட்சிகளும் ஒன்றுபட்டு காங்கிரசை எதிர்த்து முறியடிக்க வேண்டும்” இதுவே அவர் அறிவித்த முடிவு. இதற்காக கம்யூனிஸ்டுகள், ஜனசங்கம் இவற்றோடும் கூட்டு சேரலாம் எனவும் தெரிவித்தார்.
அவர் திட்டம் வேலை செய்யத் தொடங்கியது. அவர் திட்டத்தில் அண்ணா சேர்ந்தார். ராஜாஜி சேர்ந்தார். ம.பொ.சி. சேர்ந்தார். ஆதித்தனார் சேர்ந்தார். இடது கம்யூனிஸ்டு சேர்ந்தது. பார்வர்டு ப்ளாக் கட்சி சேர்ந்தது. ஏழு கட்சிக் கூட்டணி அமைந்தது. 1967-ல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டது.
இந்தச் செயலைச் செய்து முடிக்க காயிதே மில்லத் அவர்கள் பொறுமையுடன் இருபதாண்டுகள் காத்திருந்தார். “காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்” என்ற குறளுக்கேற்ப இருபதாண்டுகள் கலங்காது காத்திருந்தார்.
முஸ்லிம் லீக்கை 1947 ஆம் ஆண்டு செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. 1967-ல் இருபதாண்டுகள் கழித்து, தமிழகத்தில் காங்கிரசை செத்த பாம்பாக்கினார் காயிதே மில்லத்.
வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் தமிழினத்தை எழுச்சிபெறச் செய்யத் துடிக்கும் இளந்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவற்றுள் பலவும் புயலைத் தனக்குள் பொத்தி வைத்திருந்த தென்றலாம் காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குள் புதைந்துகிடக்கின்றன.

பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க  போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல்  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயித்தேக்களைத்தான் காணவே யில்லை. புதிய தலைமுறைத் தமிழர்களுக்குத் தலைமை தாங்க முனைபவர்கள் காயிதே மில்லத்தின் தடம் பற்றி நடப்பார்களாக!

சீதையின் மைந்தன் 

http://siragu.com/?p=3534


 காய்தே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் பேட்டி.






 மீலாது விழா மேடையில், திராவிட இயக்கத்தை சார்ந்த ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார். அடுத்து பேச வேண்டிய காயிதே மில்லத் அவர்கள் அவருடைய பேச்சை உற்றுக்கவனித்து வருகிறார். அந்த பேச்சாளரோ பேச்சின் நடுவே பிள்ளையாரின் பிறப்பை கேலி செய்து பேச, காயிதே மில்லத் அவர்கள் தன் அருகிலிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த பேச்சாளரின் உரை உடனடியாக முடிக்கப்படுகிறது.

அடுத்து பேசிய காயிதே மில்லத், இது மீலாது மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி பேசுவது தான் நாகரிகமாக இருக்கும். பிற மதத்து கடவுளை கேலி பேசுவதற்கு உகந்த மேடை இதுவல்ல. இஸ்லாம், பிற மத கடவுள்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள் என்று முஸ்லிம்களுக்கு சொல்லியுள்ளது. எனவே இது போன்ற செயல்களை இந்த மேடையில் அனுமதிக்க முடியாது என்றார்.





No comments: