Tuesday, July 20, 2010

மதச்சார்பின்மையை உடைக்கும் இந்துத்துவ அரசியல்! --அமீர் அப்பாஸ்

"மாதா கோயிலில் மணியடிக்கிறது.

புறாக்கள் பறக்கிறது...!

மாரியம்மன் கோயிலில் போய் உட்கார்ந்து கொள்கிறது..!

மாரியம்மன் கோயிலில் மணியடிக்கிறது...!புறாக்கள் பறக்கிறது...!

மசூதியில் போய் உட்கார்ந்து கொள்கிறது..!

புறாக்களுக்கு இருக்கிற புத்திக் கூட..சில மனிதர்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது..?”

என்று தொடங்கும் ஒரு அற்புதமான கவிதை படித்தேன். அது முன்பொரு நாள் படித்த கல்கத்தா நகரின் சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்தியது.
கல்கத்தா நகரின் நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலை ஒன்றில் காளி கோயில் பூசாரி ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்தார். போவோரும் வருவோரும் வேடிக்கை பார்க்க ஒருவரும் உதவ முன்வரவில்லை. ரத்த பெருக்கில் நினைவிழந்தார். நினைவு மீண்ட போது அவர் மருத்துவமனையில் இருநதார். தன்னை இங்கு வந்து சேர்த்தது யார்? என அறிய விரும்பினார். அப்போது ஒரு வயதான அம்மாவை அறிமுகம் செய்து வைத்தர்கள். "அன்னை தெரசா” என்று..!

அந்த காளி கோயில் பூசாரி சொன்னார்.” நான் முப்பது வருடங்களாக காளியை பூசை செய்து வருகிறேன். அப்போது எல்லாம் என் கண்களுக்கு காட்சி தராத காளி அன்னை தெரசாவின் வடிவத்தில் எனக்கு காட்சி தருகிறாள்”. இது தான் இந்திய தேசத்தின் மதச் சார்பின்மை.


இதை கெடுக்க நினைக்கும் தீய சக்திகளின் வரலாறு நீண்ட நெடியது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான கொடுமை இன்னும் தொடரும் அவலம் நீள்கிறது. இந்திய திருநாட்டில் சுதந்தரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இந்துத்துவம் ஓங்கி வளர்ந்து இருந்தது.



"காங்கிரஸ்காரர்களுக்கு கதர் உடுத்தவும் அகிம்சையாக வாழவும் அறிவுறுத்தவும் செய்கிற நீங்கள் ஏன் தீண்டாமையை மறுக்க கற்றுத் தரவில்லை?” என காந்தியைப் பார்த்து அண்ணல் அம்பேத்கர் கேட்டார்.
இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட காந்தியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆனாலும், அவர் பிற மதத்தின் மீதும், அதன் உயரிய கருத்துக்கள் மீது மரியாதை கொண்டிருந்தார். தான் நம்பிய மதத்தாலும் தேசத்தாலும் அவருக்கு மரணம் நிகழ்ந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லவாய் பட்டேல் நான் சொல்வதையே கேட்பதில்லை. காந்தி படுகொலைக் குறித்த விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று பிரதமர் நேருவின் வாக்குமூலம் பதிவாகி இருக்கிறது.


பெரும்பான்மை மக்கள் வன்முறையில் ஈடுபடும் போது அது தேச பக்தியாக பார்க்கப்படுவதும், சிறுபான்மை மக்கள் திருப்பித் தாக்கினால் அது தீவிரவாதம் என்பதும் மிகவும் ஆபத்தான் மனப்போக்கு” என்று நேரு குறிப்பிட்டது, இன்று வரையிலும் தொடர்கிறது.



காந்திக்கு நேர் எதிரான ஆளாக ஜின்னா இருந்தார். அய்ரோப்பிய கலாச்சாரத்தில் மூழ்கி குடியும் கும்மாளமாக வாழ்ந்தவர். காங்கிரஸ் இருக்கும் போது எதற்கு முஸ்லிம் லீக்? என வினவியவர். தொழுகை போன்ற இஸ்லாமியக் கொள்கையை மறுத்தவர். முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றிக்கறியை விரும்பி உண்டவர். காலப்போக்கில் அவரையே திசை மாற வைத்து, தனி நாடு கேட்க வைத்த பெருமை இந்துத்துவவாதிகளுக்கே போய் சேரும்.


”தப்பிப்பதற்கான..எல்லா வாசலையும் அடைத்து விட்டு..பூனையை எதிர்கொள்..!அங்கே புலியைக் காண்பாய்..!”
என்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். ஜின்னாவிற்கு நிகழ்ந்தது அது தான். பாகிஸ்தானை அவர் ஒரு மத சார்பற்ற நாடாகவே அவர் உருவாக்கினார். பிற்காலத்தில் அதுவும் மதவாதிகளால் மாற்றப்பட்டது.



இந்து மத வழிபாட்டிற்கு எதிரானவர்கள் அனைவரும் அன்னியர்கள் என்பது திலகர் போன்றவர்களின் கோட்பாடு. அதனால் தான் ஆங்கிலேயனை அச்சுறுத்த தொடங்கப்பட்ட விநாயகர் ஊர்வலம் இன்றும் இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுகிறது.


விநாயகப்பெருமான் யாருக்குமே கிடைக்காத ஞானப்பழம் வேண்டும் என்கிற சூழலில் கூட வெளியில் ஊர்சுற்ற விரும்பாதவர். அவரை வைத்து கொண்டு அரசியல் உள்நோக்க ஊர்வலமா? என கேட்கிறார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ஒரு அரசியல் தலைவன் எப்படி இருக்க வேண்டுமென அவரே குறிப்பிடுகிறார்.


காந்தியார் ராமராஜ்யம் வர வேண்டும் என சொன்னதைப்போலவே, அது கலீபா உமர் அவர்களின் ஆட்சியைப் போலவே, அது நேர்மையாக இருக்க வேண்டும்” என்றார்.



உமர் அரபு தேசத்தின் அதிபராக இருக்கும் போது கிறிஸ்துவ நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். ஜெருசலேம் தேவாலயத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.தொழுகைக்கான் நேரம் வந்தது. உமர் தொழுகை செய்ய இடம் தேடினார். பாதிரியார்கள் அன்போடு சொன்னார்கள், எங்கள் தேவாலயத்தின் ஒரு பகுதியிலேயே தொழுகை செய்து கொள்ளுங்கள் என்று. உமர் மறுத்தார் வெட்ட வெளியில் வந்து தொழுகை செய்தார். பிறகு விருந்து நிகழ்ந்தது. எங்கள் தேவாலயம் என்ன உங்கள் தொழுகைக்கு தீட்டா? என பாதிரியார்கள் வினவினர். உமர் பொறுமையாக பதில் சொன்னார். “நான் தொழுகை செய்து விட்டு சென்றால் வரலாற்றில் உமர் தொழுகை செய்த இடம் என குறிப்பிடப்படும். ”நீங்களும் நானும் மறைந்து விடுவோம்.அடுத்த தலைமுறை வரும். உமர் தொழுகை செய்த இடம் ஒரு போதும் தேவாலயமாக இருக்க முடியாது. மசூதியாக மட்டுமே இருக்க முடியும்.. என்று கடப்பாரையோடு இடிக்க காட்டுமிராண்டித்தனமாக திரளக் கூடும். ஒரு அரசியல் தலைவன் அடுத்த தலைமுறையின் அமைதிக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.” என்றார்.


உமரின் அறிவு நாணயம், அரசியல் நேர்மை, நம்ம அரசியல்வாதிகளுக்கு வந்து விட்டால் சமூக நல்லிணக்கதிற்கு ஆபத்து நேராது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை குண்டுவெடிப்புக்கு தேசம் ஆளாகி இருக்காது. மத வெறியற்ற சமூக நல்லிணக்கம் காப்பதில் தான் உண்மையான தேசபக்தி இருக்கிறது. நாம் தேசம் காப்போம்.

அமீர் அப்பாஸ்
israthjahan.ameer@gmail.com

நன்றி.கீற்று இணைய தளம்

2 comments:

ராஜவம்சம் said...

சிறப்பானப்பதிவு வாழ்த்துக்கள்.
ஜின்னாவைப்பற்றி சொன்னது
எந்தலவுக்கு உண்மை என்று தெரியவில்லை படிக்கவேண்டும்.

உதயம் said...

ராஜவம்சம்,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லும் அதே வேளை, இக்கட்டுரை எழுதிவருக்கே உங்கள் பாராட்டு பொருந்தும். அவர் மெயிலுக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கலாம். மேலும் ஜின்னாவைப் பற்றி அறிய...https://www.nhm.in/shop/978-81-8368-827-7.html