Friday, January 30, 2009

ஹிந்துத்துவப் பயங்கரவாதத்தின் முதல் பலி!

மகாத்மாவை கொன்றவர்களை நினைவில் வைப்போம்!-எஸ். கண்ணன்
Thanks to "rootsredindia.blogspot.com"

“மறந்து கொண்டேஇருப்பது மக்களின் இயல்பு நினைவூட்டிக் கொண்டேஇருப்பது வரலாற்றாசிரியரின் கடமை”

உலகப் புகழ் பெற்ற இடதுசாரி வரலாற்று ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்வாம் சொன்னதை மக்கள் இயக்கங்கள் சிரமேற்கொண்டு செய்ய வேண்டியுள்ளது. குஜராத் இனப்படுகொலை துவங்கி, கும்பகோணம் குழந்தைகள் சாவு வரை, மிகச் சாதாரண செய்தியாக வாசிக்கப்படுகிறது. இரண்டு மூன்று நாள்கள் உரையாடி வலியை குறைத்துக் கொள்வோராக பொது மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.


ஜன-30 மீண்டும் மீண்டும் நினைக்கப்பட வேண்டிய நாள். மகாத்மா காந்தியின் நினைவு நாள் என்று சொல்லப்படுவதை விட, மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் என்பதை நினைத்துப் பார்ப்பதே சரியானது. பழி உணர்ச்சியுடன் அல்ல, மீண்டும் கொடூரங்கள் நடந்து விடாமல் இருக்க. மகாத்மாவை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கொலை செய்வதற்கு காரணமாக இருந்தது. அவர் கடைப்பிடித்த, பிரச்சாரம் செய்த “மதச்சார்பின்மை” கொள்கை ஆகும்.


மதச்சார்பின்மை என்ற வார்த்தை மதவெறி அமைப்புகளுக்கு எட்டிக்காயை விட கசப்பானதாக இன்றைக்கும் இருக்கிறது. “நம்முடைய கோழைத்தனத்தாலும், பயத்தாலும்தான் நாம் பிறரோடு மோதுகிறோம். நாம் நம்முடைய நிழலைக் கண்டு அஞ்சம் நிலைக்குத் தாழ்ந்து விட்டோமா? நம்முடைய மதத்தில் உண்மையான நம்பிக்கை வைத்திருந்தால் மற்ற மதத் தினர் நம் மதத்தை அழித்து விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை!” என்று காந்தியடிகள் இந்து மதத்தின் சார்பில் கலவரத்தை தூண்டி யவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.


இன்று வரை இந்துத்துவா அமைப்பினரின் பேச்சு காந்தி வருத்தப்பட்டதைப் போல்தான் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும், வெறியேற்றும் பிரச்சாரம் அது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராக எல். கே. அத்வானியில் இருந்து கீழ்மட்டத் தலைவர்கள் அனைவரும் பேசுவது சமீபத்திய உதாரணம். 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்ததாலும், காந்தி, நேரு போன்றோர் உறுதியாக இருந்ததாலும் மேற்படி இஸ்லாமியர்கள் மீதான அவதூறு பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு உடனடியாக கைகூடவில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறும் தேர்தலில் அவதூறு பிரச்சாரம் கைகொடுத்துள்ளது. விளைவு ஆய்வுக் கூடங்களை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


குஜராத் மாநிலம் டங்ஸ் மாவட்டத்தில் கிருத்துவர்கள் மீதான தாக்குதலைத் தொடுத்தனர். அதே வடிவத்தை இப்போது ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் அரங்கேற்றி, “ஒரிசா எங்களது அடுத்த ஆய்வுக்கூடம்” என ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளனர். ஒப்புதல் புதிதல்ல குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது, வழக்கறிஞர் சிராபுதீனை என் கௌண்டரில் கொல்லச் சொன்னது உண்மை, என்று நரேந்திர மோடி பகிரங்கமாக பொதுக் கூட்டங்களில் பேசினார். 2007, அக்டோபர் இறுதியில், தெஹல்கா வீடியோ பத்திரிக்கை, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. பா.ஜ.க, போன்ற இந்துத்துவா அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஒப்புதல் வாக்கு மூலத்தை பதிவு செய்து வெளியிட்டது. வெறி கலந்த மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தனர்.. திட்டமிட்டோம், அரசு அதிகாரத்தை, அதிகாரிகளைப் பயன்படுத்தினோம், கொலை செய்தோம், பாலியல் கொடுமைகளை களிப்புடன் நடத்தினோம்,” என பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.


“நான் நாதுராம் விநாயக் கோட்ஸே பேசுகிறேன்” என்ற நாடகத்தின் மூலம், காந்தியைக் கொன்றது நியாயமானதே, என்ற பிரச்சாரத்தை 1993, நவ-15 கோட்ஸேயின் நினைவு நாளில், திட்டமிட்டு செய்தனர். குஜராத் மாநில பாடப்புத்தகத்தில் காந்தி இந்து மதத்திற்கு எதிராக இருந்ததால், கோட்ஸே கொன்றார் என எழுதி வைத்துள்ளனர். கோபால் கோட்ஸே 1995ம் ஆண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நாது ராம் கோட்ஸே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவன், ஆர்.எஸ்.எஸ். இயக் கத்தினால் திட்டமிட்டு தான் காந்தி கொலை செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.


கோட்ஸேக்கும் எங்களுக்கும், சம்பந்தமில்லை என்று பசப்பு வார்த்தைகள் பேசி வந்த ஆர்.எஸ்.எஸ் திடீரென்று 1990க்குப்பின் திட்டமிட்டு காந்தியின் கொலையை நியாயப்படுத்துவது எதனால்? காரணம் காந்தி கொல்லப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அப்போது தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று “ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார இயக்கம்” என்று நீதி மன்றமே சொல்கிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்ற்கும், அதன் அமைப்பு களுக்கும் ஒப்புக்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. காந்தியைக் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கிய இடத்தில், காவிப்பல் காட்டி நீதி வழங்கும் நீதிபதிகளும் வந்து விட்டனர்.


ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க வேண்டும் என்பதற்காக அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் “அரசியலைத் துறந்து வெறும் கலாச்சாரப் பணியை மட்டுமே செய்வோம்”, என அன்றைய ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் எழுதிக் கொடுத்தனர். ஆனால் அரசியல் இயக்கங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்புகளிலும், நிர்வாகங்களிலும் பங்கேற்றனர்.1961 முதல் 70க்குள் மிகப் பெரிய மதக் கலவரங்களை நடத்தினர். இதன் காரணமாக கட்சி சார்பற்ற ஒரு குழு, பாராளுமன்ற உறுப் பினராக இருந்த திருமதி. சுபத்ரா ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்த இளைஞர்கள் அனைவருமே, “ஆர்.எஸ்.எஸ். பலாத்கார பாசிச மதவெறி சங்கம் தான்” என்று ஒப்புக் கொண்டனர். “சிறுபான்மை மதங்களை வெறுக்கவும், தூஷிக்கவும் கற்றுத் தருவதே, இவர்களுக்கான முதல் வேலை”, என குறிப்பிட்டனர். இப்படி தொடர்ந்து ஒப்புக் கொள்வதன் மூலம் அச்சத்தை நிலை நாட்ட முயற்சிக்கின்றனர்.


1948 ஜன-30-ல் காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ், தனது கொலை வெறியை நிறுத்திக் கொள்ளவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பசுவதைத் தடைச் சட்டம் கோரி ஆர்.எஸ்.எஸ்.இந்து சாமியார்கள் நடத்தப் போகும் ஆர்ப்பாட்டதைக் கண்டித்ததோடு, இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் இந்து பாசிசவாதிகளால் இந்திய அரசின் மதச்சார்பற்ற கொள்கைக்கே பங்கம் வந்து சேரும் என்பதை விவரித்து கண்டித்துள்ளார். இதற்காக 1966 நவம்பர் 7ம்தேதி, சூலாயுதம், வேலாயுதம், குண்டாந்தடி, கத்தி போன்ற ஆயுதங்களுடன், காமராஜரின் வீட்டை அடித்து தீ வைத்து கொளுத்தினர். காமராஜரின் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அவரை பின்புற வாசல் வழியாக தப்பிச் செல்ல வைத்தனர். அதே 1966-ல் இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் துணை அமைப்புகள் வெளியிட்ட கருத்துக்கள் சகிக்க முடியாத கொடுமையாகும்.


“ஒரு பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் விதவையான இந்திரா காந்தி பிரதமராகி உள்ளது, இந்து கொள்கைக்கும், மரபுக்கும் இசைந்ததல்ல”, என்று ஆர்கனைசர் ஏட்டின் 03-06-1966, தேதிய இதழ் குறிப்பிடுகிறது. 33 சத இடஒதுக்கீடு குறித்து எப்போதாவது பேசுகிற ஜெயலலிதாவுக்கு இது புரிய, தெரியவில்லை.


காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவரைக் கொன்றவர் முஸ்லீம் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து கலவரத் தீ நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் சில நகரங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். உடமை அழிப்பிற்கும் ஆளானார்கள். பின்னர் அரசு, வானொலி மூலம், “காந்தியாரை சுட்டுக் கொன்றது முஸ்லீம் அல்ல, இந்து பிராமணன் என்று தொடர்ந்து அறிவிப்பு செய்து கலவரத்தை அடங்கியுள்ளனர். பெரியார் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். மதச்சார் பின்மையை பாதுகாக்கும் தமிழகத்தின் இத்தகைய பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது.


ஹிட்லர் பாணி பிரச்சாரம் இந்தியாவில் சில இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்கிற தவறைப் பயன்படுத்தி, மொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கிற செயலை, திட்டுமிட்டு இந்துத்துவா அமைப்புகள் செய்து வருகின்றன. தீவிரவாதத்தின் வேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும், என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஒரு நபரின் தீவிரவாதச் செயல், பல அப்பாவிகளின் சாவுக்கு துணை போகிறது.


கோட்ஸே என்கிற இந்து மத தீவிரவாதி காந்தியைக் கொன்றதற்கும், இஸ்லாமிய அடையாளம் கொண்ட தீவிரவாதி வைத்த வெடிகுண்டில் மனித உயிர்கள் பலியான சம்பவத்திற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே மன்னிப்பை கடந்த குற்றம். இத்தகைய சம்பவங்களை இந்து மதவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்-சும் தங்களுக்கு சாதக மாக்கிக் கொள்ள முனைகின்றன. எனவே “மத வெறி கொண்ட எதேச்சதிகாரமான ஒரு பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.” என்று காந்தி குறிப்பிட்டதை நினைவு கூர்வோம்.


மதவெறி மாய்ப்போம்! தீவிரவாதம் ஒழிப்போம்!





Saturday, January 24, 2009

"புனிதப் போர்" தொடுக்க தயாராகும் ஹிந்துத்துவாக்கள். சதிகள் அம்பலம்.

இந்துராஷ்ட்ரம் அமைக்க அரசமைப்புச் சட்டம் உருவாக்கம்
ஆர்.எஸ்.எஸ். - குண்டுவெடிப்புச் சூத்திரதாரி புரோகித்
திரைமறைவில் போட்ட சதித் திட்டங்கள் அம்பலம்!


மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரக்கும்பல் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் தலைமையில் செயல்பட்டுப் பலரின் உயிரைக் குடித்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் இந்து மத அரசை நிறுவிடச் சதிச் செயல்களில் ஈடுபட்ட நாட்டு விரோதக் கும்பலும் ஆகும் எனும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

அவர்களுடைய திட்டமான இந்துராஷ்ட்ரம் பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவைபற்றி ஆலோசித்ததோடு மட்டுமின்றி, மாநில அரசுகள் இல்லாத ஒரே நாடு, மக்களுக்கு மதப் பயிற்சி அளித்தல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்துதல் என ஒரு நாட்டின் பல்வேறு அம்சங்களையும் கொண்டதாகத் திட்டம் இடப்பட்டுள்ளது.


இதுபற்றிய சதிக் கூட்டத்தில், தன் இந்துராஷ்ட்ரத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பத்திகளை புரோகித் படித்துக் காட்டியபோது, வேதங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது போன்ற பாரதக் கலாச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.பி. சிங் கலந்துகொண்டார். அபிநவ் பாரத்தின் உறுப்பினர்கள் அரசியல் சட்டம்பற்றி விவாதித்தது உள்பட எல்லா விவரங்களும் புரோகித்தின் மடிக்கணினியில் பதிவாகியுள்ளது.


அரசமைப்புச் சட்டத்தின் சில கூறுகள்:
பொருளாதாரம்
தற்சார்புள்ள வேளாண் வளர்ச்சியைக் கண்ணோட்டத்தில் நாட்டின் கலாச்சா ரத்தைக் கட்டமைத்தல், சட்டங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தல், பாரதீய வழி முறைகளின்படி பாரத் சேனையை அமைத்தல்; வெளி நாட்டுப் படையெடுப்பை எதிர்த்தல்.

பாதுகாப்பு
இதுபற்றிப் பேசும்போது, புரோகித் தற்போதுள்ள 14 லட்சம் போர் வீரர்களை ஒரு கோடியாக உயர்த்துதல், பாதுகாப்பு அமைச்சர் இனிமேல் போர் அமைச்சர் என்று அழைக்கப்படவேண்டும். போலி சங்கராச்சாரி பாண்டே பேசும்போது, பாகிஸ்தான் என்று குறிப்பிடக்கூடாது என்றும், அந்நாடு தனி நாடல்ல என்றும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதிதான் என்றும் கூறியுள்ளார்.

கொடி
தங்க நிற ஓரம் கொண்ட காவிக்கொடிதான் இந்து ராஷ்ட்ரத்தின் கொடியாம். இரண்டு பங்கு நீளமும் (அதில் பாதி) ஒரு பங்கு அகலமும் கொண்ட கொடியின் நடுவில் பழங்கால பொன்னிறத் தீவட்டி இடம்பெற்றிருக்குமாம்.

பொருளாதாரம்
கூட்டு விவசாயத்தை வளர்த்து, விற்பன்னர்களைக் கொண்டு விவசாயத்தில் பயிற்சி அளிக்கவேண்டும். தன்னிறைவுடன் கூடிய வேளாண்மையே முதுகெலும்பு போன்றது. தரிசு நிலங்களில் மட்டுமே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படவேண்டும், விவசாய நிலங்களைக் கையகப் படுத்தக்கூடாது. தனியார் நிறுவனங்களும் தாராளமான முதலீடுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டுக் கொள்கை
நேபாள், தாய்லாந்து, கம்போடியா இணைந்த இந்து நாடு உருவாக்கப்படவேண்டும். இந்து, புத்த மதத்தவர் நாடுகள் ஒன்றாக்கப்பட்டு, கிறித்துவ, இசுலாமிய நாடுகளை எதிர்க்க வேண்டும்.
அபிநவ் பாரத் அமைப்பின் உறுப்பினர் கட்டணம் ரூ.30. எல்லா இந்துக்களும் இதன் கவுரவ உறுப்பினர்களே. எல்லா உறுப்பினர்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படும். ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி தரப்படும்.
மதவெறியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கிட, பாசிச பாணியில் திட்டம் தீட்டிச் சதியில் ஈடுபட்டவர்களை நாட்டுத் துரோகக் குற்றம் இழைத்துள்ளார்கள். இவர்கள்மீது வெறும் கிரிமினல் குற்றங்கள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளன. அரசுத் துரோகக் குற்றத்திற்கான நடவடிக்கை கிடையாதா? என நாடு கேள்வி கேட்கிறது

நன்றி: விடுதலை ஏடு


பல்வேறு சமூகங்கள் வாழும் நம் நாட்டில் நீதித் துறையில் காட்டப்படும் பாரபட்சம் தான் பயங்கரவாதத்தின் ஆணிவேர். நீதி மறுக்கப்படும் சமூகத்தில் எப்படியும் அமைதியை கொண்டு வர முடியாது. தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, எந்த மதத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும் அரசு பாரபட்சம் காட்டாமல் நசுக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பில் இந்திய அரசு மெத்தனமாக இருந்ததன் விளைவு தான் தொடரும் தீவிரவாதம். அதற்குப் பிறகாவது அரசு நீதமாக நடந்ததா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை. மசூதி இடிப்பின் முதல் குற்றவாளியாக அறியப்பட்டவர் அரசு பாதுகாப்புடன் பவனி வர முடிவதும், கலவர காரணகர்த்தாக்கள் கதா நாயகர்களாக உலா வர முடிவதும், வகுப்புவாதிகளின் மேல் அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவதும், பயங்கரவாதம் இன்னும் நீளுமோ என்ற அச்சத்தைத் தான் தோற்றுவிக்கின்றன. இதற்கு மறைமுகமாகவும் தெரிந்தோ தெரியாமலோ அரசு துணை போவது தான் பெரும் துயரம்.

குமுதம் அரசு பதில்களில்... 28.01.2009
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டியதில்லை என்கிறீர்களே, அப்படி என்றால் வேறு என்னதான் தீர்வு?

நாம் தொடுக்க வேண்டிய போர் உள்ளூரில் இருக்கிறது. அமைதியும் சகோதரத்துவமும் நிரம்பியிருந்த நமது நாட்டில் தீவிரவாதமும் வன்முறையும் கட்டற்றுப் பெருகியதற்கு ஆரம்பமே பாபர் மசூதி இடிப்புதான். மதவெறி, அது எந்தப் பக்கம் இருந்தாலும் சரி, போரிட வேண்டியது அந்த துவேஷத்தின் மீது தான்.




Monday, January 19, 2009

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிகாத் என்றால் என்ன? என்ற கேள்வியோடு நண்பர்கள் சிலரை வினவிய போது, "தன் மதத்தைப் பரப்ப மற்ற மதத்தினரை அழித்தொழிப்பது தான் ஜிகாத்" என்றவர் ஒரு இந்து நண்பர். "இஸ்லாத்தை அழிக்க வரும் எதிரிகளிடம் போரிடுவது தான் ஜிகாத்" என்று சொன்ன என் முஸ்லிம் நண்பரின் இஸ்லாமிய அறிவில் நான் குறை கண்டதால் மேற்கொண்டு கேட்பதைத் தவிர்ப்பதே நலம் என்றெண்ணினேன். ஆக..

ஜிகாத் என்ற பதம் சரியாக புரிந்துக்கொள்ளப்படாததாக அல்லது தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பலவிதமான பிரச்சினைகளின் மையப்புள்ளியே தவறான புரிதல் தானே. ஜிகாத் என்றால் என்ன? என்ற கேள்வியை கூகுலிடம்(google) கேட்டபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தான் இந்தப் பதிவே.


திண்ணையில் திரு. இப்னுபஷிர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து...

ஜிஹாத் என்றால் என்ன?
இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.
'முயற்சித்தல்' எனப் பொருள்படும் 'ஜஹத' எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் 'ஜிஹாத்' எனும் பதம். இச்சொல்லுக்கு 'அயராத போராட்டம்', 'விடா முயற்சி', 'கடின உழைப்பு' என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் 'ஜிஹாத்' என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.
2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.
3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்
4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.

இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.
மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்.

'உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்' (60:7)

'மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்'. (60:8)

'நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்'. (60:9)

அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், 'ஜிஹாத்' என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், "உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?" என்றார்கள். அதற்கு அம்மனிதர் "ஆம்!" என்றார். "பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு" என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!" (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது " பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்" எனறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: "உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்". (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

"பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு". என்று விளக்கமளிக்கிறார்.

ஆகவே ஜிகாத் என்பதின் பொருளை அதன் வேர்ச்சொல்லில் இருந்து புரிந்துக்கொண்டோம். மேலும் ஜிகாத் என்றால் "புனிதப் போர்" என்றும் ஊடகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதே அதெல்லாம் கட்டுக்கதையா?


ஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும்(இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை?

இன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த "ஜிஹாத்".

ஜிஹாத் என்றால் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? எங்கே அது செய்யப்பட வேண்டும்? யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாக எழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்திருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் "புனிதப்போர்" என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபி வார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக்காலகட்டத்தில் இரு வல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக்ப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்கால கட்டத்திற்குப் பின்னரே உலகில் "இஸ்லாம்" பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த "ஜிஹாத்" என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக்காலகட்டத்திற்குப் பின்னரே "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்ற சொல் உலகில் பிரபலப்படுத்தப்பட்டதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

1980களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒருபக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த "ஜிஹாத்" என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (இப்னு ஆதம். நன்றி: சத்தியமார்க்கம் .காம்)

ஆக... ஜிகாத் என்றால் என்னவென்று தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்துக்கொண்டேன். என்னைப் போலவே நீங்களும் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.