புகழ் பெற்ற பத்திரிகையாளரும் 'சித்திரா' எனும் நூல் வெளீயிட்டு நிறுவனத்தின் தலைவரும் இயக்குனருமான பி.வி.சீத்தாராம் தம் மனைவியுடன் உடுப்பி மாவட்டத்தில் தம் காரில் வந்து கொண்டிருந்த போது காவல்துறையைச் சேர்ந்த ஆறு வேன்களால் வழிமறிக்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சீத்தாராம் காரிலிருந்து இறங்கி வெளியே வந்த போது காவல்துறையினர் அவரைச்சுற்றி வளைத்துக் கைது செய்தனர். வேடிக்கை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு பொய் வழக்குத்தான் இந்தக்கைதுக்குக் காரணமாம். அதுமட்டுமல்ல, கைது செய்வதற்கான வாரண்டும் காவல்துறையினர் கொண்டுவரவில்லை. அடுத்த நாள் உடுப்பி மாவட்ட நீதிபதியிடம் இவரைக் கொண்டு செல்லும் போது இவருடைய கைகளுக்கு விலங்கிட்டு இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். இயந்திரத் துப்பாக்கிகளுடன் காவலர்களின் ஒரு படையே அவரைச் சுற்றி இருந்தது.
சித்திரா நிறுவனத்தின் கீழ் மூன்று பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் 'கரவலிஅலெ' மிக முக்கியமான இதழாகும். 40,000 பிரதிகள் விற்பனையாகின்றன. இரண்டு இலட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமக்கு எதிராகப் பொய் வழக்கு போட்ட சங்பரிவாரங்களுடன் காவல்துறையும் பா.ஜ.க அரசாங்கமும் சேர்ந்து செயல்படுவதால் தம் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்ட சீத்தாரம் உடுப்பியில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யாமல் மைசூரில் இருந்து தான் ஜாமினில் வெளிவந்தார்.
இவர் கைது செய்யப்பட்டபின் இவருடைய அலுவலகம் சங்பரிவாரங்களால் பலமுறை சூறையாடப்பட்டது. 2008 நவம்பர் 17_ம் நாள் மங்களூரில் உள்ள இவருடைய பத்திரிகை அலுவலகமும் தாக்கப்பட்டது. இவருடைய பத்திரிகைகளை விற்கும் கடைகளையும் பாசிசக் கும்பல் வேட்டையாடியது. பத்திரிகைக் கட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை வழிமறித்து ஆயிரக்கணக்கான இதழ்களை எரித்து நாசமாக்கினார்கள்.
இந்த அளவுக்கு இவர் மீதும் இவருடைய பத்திரிகை மீதும் பாசிசக்கும்பல் பாய்வதற்குக் காரணம் என்ன?
"2008 ம் ஆண்டு மங்களூரில் பஜ்ரங்தள தொண்டர்களால் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டதைக் கண்டித்து செய்திகள் வெளியிட்டதும், சங்பரிவாரின் மதவெறித்தனத்தைக் கடுமையாகச் சாடி எழுதியதுமே காரணம்" என்கிறார் சீத்தாராம்.
தெற்கு கன்னட மாவட்டத்தின் பஜ்ரங்தள் தலைவர் வினய் ஷெட்டி தெகல்காவுக்கு அளித்த நேர்காணலில் தங்களின் சட்டவிரோத செயல்களை நியாயப்படுத்திப் பேசினார், எங்களை வெறுப்பேற்றினானால் சும்மா விடுவோமா? என்றார்.சீத்தாரம் சங்பரிவாரின் துன்புறுத்தல்களுக்குப் பலமுறை ஆளாகியுள்ளார். ஆயினும் அச்சமின்றி தீமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். இதனாலேயே அவர் பல பொய் வழக்குகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
2007- ம் ஆண்டு முக்கிய ஜைன மத குரு ஒருவர் பொது நிகழ்ச்சியில் அம்மணமாய்க் காட்சி அளித்ததை கண்டித்துத் தம் பத்திரிகையில் எழுதியிருந்தார்.இது நம் இந்தியப் பண்பாட்டிற்கும் மரபுக்கும் எதிரானது என்றும், சமயக் கோட்பாடுகளைப் பேணும்போது ஒழுக்கம் சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுதினார். உடனே ஜைன சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டார்.
கர்னாடக பா.ஜ.க. அரசு சீத்தாராமுக்குக் கைவிலங்கு போட்டு இரும்புச் சங்கிலியால் பிணைத்து பொது மக்கள் முன்னிலையில் தெருவழியால அவரை இழுத்துச் சென்றது. காவல் நிலையத்திலும் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு பத்திரிகையாளரை இழிவு படுத்திய இந்த நிகழ்வு கர்னாடக அளவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(இன்டர் நேஷனல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட்), இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா), தில்லி பத்திரிகையாளர் சங்கம் எனப் பல அமைப்புகளும் இதழியல் சுதந்திரத்தை நசுக்கும் இந்தச் செயலுக்கு எதிராகக் குரல் கொடுத்துதிருப்பதுடன் மானில பா.ஜ.க. அரசையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
கர்னாடக மானில பா.ஜ.க. அரசு மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தீய சக்திகளுக்கு வெளிப்படையாகவே துணை போய்க்கொண்டிருக்கிறது. சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக பெரும்பான்மை இந்துக்களை தூண்டிவிடும் வகையில் "விஜய கர்னாடகா" எனும் நாளிதழில் அதன் ஆசிரியர் பைரப்பாவும், பத்தி எழுத்தாளர் பிரதப் சிம்ஹாவும் எழுதி வருகிறார்கள். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக நல அமைப்புகளும் சேவை அமைப்புகளும் பல தடவை முறையிட்டும் கூட கர்னாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
தெஹல்கா (24.01.09)
நன்றி: சமரசம் மாதமிருமுறை