Sunday, January 27, 2008

ஹிட்லர்,சாவர்க்கர்,மோடி







விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லக் கட்டாயப்படுத்திய குஜராத் அரசை எதிர்த்து இப்படிக் கூறினார். ''எனக்கு நீரிழிவு நோய் மட்டும் இல்லையென்றால் இந்தத் தள்ளாத வயதில், ''மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணமடையவே விரும்புவேன்'' என்று கொடூரங்கள் அரங்கேறிய 2002லில் அகமதாபாத்தில் துணிச்சலாகக் கூறினார்.


இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள், தங்கள் கண்டனங்களையும், குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை அல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இவை யாவும் அன்றைய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு பரப்பட்ட இஸ்லாமிய விரோத அரசியலாலும், அதனால் உந்தப்பட்ட பெரும்பான்மை உயர்சாதி ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது நடுநிலையார்கள் அறிந்ததுதான்


அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம்... அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.... கோத்ராவில் ராமபக்தர்களை, இஸ்லாமியர்கள் ரயில்பெட்டிக்குள் அடைத்து தீ வைத்து கொன்றதால் ஏற்பட்ட இந்துக்களின் பதில் தாக்குதல்தான் என்று, திரும்பத் திரும்ப எழுதினார்கள். பேசினார்கள். ஆனால் இதே, ஆக்ஷன் ரீ-ஆக்ஷன் வாதத்தை, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கோ, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கோ இவர்கள் கூறவில்லை. இதை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை.


எட்டு நூற்றாண்டுகள் சிறுபான்மையினரான முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டு வந்தபோது, எதிர்த்துக் கலவரம் செய்யாத இந்துக்கள், இந்துக்களே ஆட்சி செய்யும் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டத்தில் இசுலாமியர்களைத் திட்டமிட்டு அழிக்க வேண்டிய நோக்கமென்ன? 14 சதவீதமான இஸ்லாமியர்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்று இந்துத்துவவாதிகள் பரப்பும் கருத்துக்கு உண்மைத் தன்மை உள்ளதா?

மதம் மாற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் 80 சதவீத இந்துக்கள் வாழும் நாடு என்றும் பேசி வரும் சங் பரிவார்களின் திட்டம்தான் என்ன?
ஆர்.எஸ்.எஸ். தலைமை நாக்பூரில் இருந்தாலும், அதன் தத்துவ பரிசோதனையை மிகப் பெரிய அளவில் செய்து பார்த்த சோதனைக்கூடம் குஜராத். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் ஐயாயிரத்துக்கும் மேல், சொத்துக்களை இழந்தவர்கள் ஏழாயிரம்பேர். நிம்மதியை இழந்தவர்கள் ஒட்டு மொத்த குஜராத் வாழ் அப்பாவிகள். குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில், இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து இந்துக்களோடு இணைந்து வாழ வேண்டுமென்று, தனது ஆட்சியில் புதுப்புது சட்டங்களை கொண்டு வந்தார் மோடி.


தங்களது மத, கலாச்சார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாத இஸ்லாமியர்கள், தங்களது தனித்தன்மையை விட்டு கொடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு வந்த துணிச்சலுக்கு காரணம், இந்திய அரசியல் சட்டம்தாதன் என நம்பினார்கள். ஆனால், இந்தியாவில் செயல்படுத்தப்படும் மதச்சார்பற்ற சட்டங்கள், தான் ஆட்சி செய்யும் குஜராத்திற்குள் நுழைய முடியாது என்பதற்கு, உதாரணம் காட்டுவதற்குதான் 'கோத்ரா' என்ற ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம், சங் பரிவார் கற்றுக் கொடுத்த இன அழித்தொழிப்பு பரிசோதனையை செய்து பார்த்தார். அதில் வெற்றியும் பெற்றார்.ஆனால், திரை மறைவில் நடந்த விஷயங்களை மறைத்து, ஆக்ஷன் ரீ ஆக்ஷன் என்ற கருத்து பொதிந்த சென்டிமென்டான நாடகத்தை அரங்கேற்றி, சங்பரிவார் அமைப்புக்குள் ஹீரோவாகவும், பொதுமக்களின் பார்வையில் அப்பாவியாகவும் காட்சி தந்தார் மோடி. குஜராத் கலவரத்தில் தலைமை தாங்கி நர வேட்டையாடியதே மோடிதான் என்பதை எத்தனையோ நடுநிலையாளர்கள் எடுத்துக் காட்டியும் பெரும்பாலனவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.


ஹிட்லரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட சாவர்க்கரின் கொள்கைகளை அடியொற்றுகிற, தீண்டாமையை கட்டிக் காக்கின்ற, உழைப்பாளி மக்களை சுரண்டுகின்ற, இனக்குழுக்கள் அனைத்தையும் இந்து என்கின்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வர நினைக்கின்ற, விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிற ஒரு அமைப்பின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.குஜராத் கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க..வை குற்றம் சாட்டியபோது, 1984ல் டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியது பா.ஜ.க..சமீபத்தில் யமுனா ராஜேந்திரன் என்ற ஆய்வு எழுத்தாளர் எழுதிய கட்டுரையொன்றில் குஜராத் சம்பவம் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விவரித்திருந்தார்.

அதில், "கலவரம் துவங்குவதற்கு முன்பாகவே இந்துக்களின் வீடுகளில் காவிக்கொடி அடையாளம் வைத்து, இஸ்லாமியர் வீடுகளை விலக்கி வைத்து காட்டினார்கள் பஜ்ரங்தள் தொண்டர்கள். சபர்மதி எக்ஸ்பிரஸ் தாக்குதல் சம்பவம் வருவதற்கு முன் இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு ரெடியாகிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.


பல உண்மை அறியும் குழுக்களும், வாக்காளர் பட்டியல், ரேஷன்கடை அட்டவணை இவைகளைப் பார்த்து தெரிந்து கொண்ட பின்புதான், இஸ்லாமியர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொன்றார்கள். இதற்கு குஜராத் அரசிலுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டன.பல இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்கள் இஸலாமியப் பெயரில் இல்லாமல், பொதுவான பெயர்களிலும், இந்துப் பெயர்களில் செயல்பட்டு வந்தாலும், அதைச் சரியாகக் கண்டு பிடித்து சங்பரிவார் தொண்டர்கள் அழித்தார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். எவ்வளவு தெளிவான திட்டம்.அரசும், காவல்துறையும், இன அழித்தொழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட அமைப்புகளும் இணைந்து நடத்திய குஜராத் வெறியாட்டத்தில் மொத்தம் இறந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மூவாயிரம் என சில அமைப்புகள் கணக்கு சொன்னாலும், வெளியில் வராமல் அமுங்கிப் போன உண்மைகள் ஏராளம்.


இன மோதல், அல்லது இன அழித்தொழிப்பு இவைகளை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டுமென்ற கான்சப்டில்தான், 'ஷாகா' கற்றுக்கொடுக்கும் அமைப்பாக இருந்த சங் பரிவார், பா.ஜ.க. என்ற அரசியல் பிரிவை 1980ல் துவங்கியது. வி.ஹெச்.பி. பஜ்ரங்தள் ஆகியவை கலவரங்களை உருவாக்கும். ஆர்.எஸ்.எஸ். நேரடி களப்பணியில் இறங்கும். அதற்கு பின் பா.ஜ.க. அதை வைத்து அரசியல் செய்யும். 1990ல் ரத யாத்திரையை சோமநாதபுரத்தில் துவங்கி வட இந்தியா முழுவதும் சென்றார் அத்வானி. ரதம் கடந்து சென்ற பாதையெங்கும் இஸ்லாமியப் பிணங்களாக விழுந்தன. அதன் உச்சபட்சமாக 1992ல் அயோத்யாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே நாளில் மகராஷ்டிராவில் பா.ஜ.க. சிவசேனா, போலீஸ் கூட்டணியால் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.


இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. இதிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனால் கோபமுற்று, பீதியடைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தங்களைப் பார்த்து சங்பரிவார அமைப்புகள் அச்சப்படவும், பாகிஸ்தான் உதவியோடு குண்டுவெடிப்பை மும்பையில் நிகழ்த்தினார்கள். இதில் சம்மந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வழங்கு நடந்து, சமீபத்தில் தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பல அப்பாவிகளும் அடக்கம் என்பது ஒரு பக்கமிருந்தாலும், இதுபோன்ற வழக்கு, கைது, விசாரணை, தண்டனை எதுவும், மும்பையில் இஸ்லாமியர்களை கொன்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது இன்றுவரை நிதர்சனமான உண்மை.


கோவையிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை போலீஸ்தான் துவக்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏற்கனவே பா.ஜ.க.வின் ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க தலைவர்கள் பணம் வாங்கிய விவகாரத்தை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய தெஹல்காதான், இன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்களைக் கொலை செய்யச் சொன்னது மோடிதான் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இதை மறுக்க முடியாத பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர், தெஹல்கா எப்போதும் பா.ஜ.க.வை மட்டுமே புலனாய்வு செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை புலனாய்வு செய்வதில்லை என்று தன் தரப்பை மறுக்க முடியாமல், மற்ற கட்சியிலும் தவறுகள் நடப்பதுபோல் குற்றம்சாட்டியுள்ளார். நீயும் செஞ்சே, நானும் செஞ்சேன் என்பதுபோல்.


வருணதர்மத்தை, எந்த ஆட்சி நடந்தாலும் கட்டிக்காக்கும் உயர்சாதி அரசு அதிகாரிகளைக் கொண்ட மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த பல ஆண்டுகளாக காவல்துறை பதவிகளிலிருந்து, சிவில் நிறுவனப்பதவிகள், முடிவெடுக்கும் அதிகார மையங்களில் இஸ்லாமிய, தலித் அதிகாரிகளும், அறிவாளிகளும் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்ட அமெரிக்காவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் தாக்குதல் பீதியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும்கூட, அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு சகல உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் இது மிகவும் குறைவு.


தெஹல்கா வார இதழின் நிருபர் ஆஷிஸ் கேத்தான் ஆறு மாத காலம் குஜராத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகளோடு ஒன்றி கோத்ராவில் இந்துக்களை எரித்தது, இந்து வெறியர்கள் என்பதை பல்வேறு விதமான வாக்குமூலங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.இந்தியாவிலுள்ள நடுநிலையாளர்களும் மனிதாபிமானமிக்கவர்களும், பல்வேறு உண்மை அறியும் குழுக்களும் கடந்த ஐந்து வருடங்களில் உரத்துக் கூறிய விஷயங்களை, மோடியின் சிஷ்யர்கள் வாக்குமூலமாகக் கொடுத்ததை வீடியோவில் பதிவு செய்து மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது தெஹல்கா. இதை ஜந்து வருடங்களுக்கு முன்பே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முழுக்க முழுக்க மோடியின் ஆலோசனைகளின் பேரில் வி.ஹெச்.பியும், பஜ்ரங்தள்ளும் செய்த சதி என்பதும் அதை வைத்து மூன்று நாட்களில் எவ்வளவு இஸ்லாமியர்களை கொல்ல முடியுமோ கொல்லுங்கள் என்று அரசு உத்தரவிட்டதின் வெளிப்பாடுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக பெங்களுரைச் சேர்ந்த ரூத்மனோரமா, டெல்லியைச் சேர்ந்த ஷயதா ஹமீது, அகமதாபாத் பராக் நத்வி, ஷீபா ஜார்ஜ், மாரிதெக்காரா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் 10 நாட்கள் குஜராத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள்.


அதில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எந்தவொரு காட்டுமிராண்டி தேசத்திலும் நடந்திராதது என்று குறிப்பிட்டார்கள்.அகமதாபாத், கோத்ரா, வதோத்ரா, சபர்காந்த், பாஞ்ச் மகால் ஆகிய நகரம், கிராமம் சார்ந்த பகுதிகளில் நடந்த கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிறுவர் சிறுமிகளிடமும் கொடூரங்களைப் புரிவதற்கு உதவிய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காவல்துறையினரிடம், அடியாட்களாக பயன்படுத்தபட்ட பழங்குடி மக்களின் தலைவர்களிடம் பேசி கருத்துக்களை பதிவு செய்தனர். இந்தக் குழுவினர் 100 பக்கமுள்ள அவர்களுடைய அறிக்கையில் சுருக்கமாக சொல்லப்பட்ட காரணிகள், வன்முறைகள் தனனெழுச்சியாக நடந்ததாகத் தெரியவில்லை.

யாரைத் தாக்குவது என்பது முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கு அழுத்தமான ஆதாரங்கள் உள்ளன. இவை மிகவும் குறைவாக வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இவற்றின் அளவும் விரிவும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் ஏகமாக நடந்துள்ளன. நிவாரண முகாம்களிலும் அடைக்கலமாயிருக்கும் பெண்களும், சிறு மற்றும் பெரும் கூட்டத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். மிருகத்தனமாகக் கற்பழிப்பு செய்யப்பட்ட பெண்கள் கடைசியில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். பெண்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் அரசும், போலீசும் பகிரங்கமாகத் துணை போயிருக்கின்றன.

குஜராத்தி மொழி பத்திரிக்கைகள் சிலவும் உண்மைகளை மறைத்து, இஸ்லாமியர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கு ஏதுவாக செய்திகளை வெளியிட்டார்கள். இது முழுக்கவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தனர் இந்த பெண்கள் குழுவினர். அதை அந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க அரசுக்கு பயந்து கொண்டு எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை.நடந்துவிட்ட கொடூரத்தின் உண்மையை எத்தனை முறை நிரூபிக்க வேண்டியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இந்து முனனணித் தலைவர் ராம கோபாலன், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட, "முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்தா"? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.அதில் இந்தியாவில் இந்து ஆட்சி அமைய ஸ்பெயின் நாட்டில் எப்படி கிறிஸ்தவர்களால், இஸ்லாமியாகள் கொல்லப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கர்ப்பிணிகள், குழந்தைகள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்களோ, அது போல் இந்தியாவில் நிகழ வேண்டும் என்று தெளிவாக எழுதியிருந்தார்.அதைத்தான் குஜராத்தில் செய்தார் மோடி.


சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானியன் மனு அனுப்பினாலே அதை வழக்காகப் பதிவு செய்துவிடுவோம் என்று கூறும் நீதித்துறை... அவசியமான வழக்குகளில் விடுமுறையிலும் தீர்ப்பு சொல்லும் நீதித்துறை... குஜராத் கொடூரங்களின் சூத்திரதாரி மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?


-சே குவேரா.




இக் கட்டுரையை " நக்கீரன் இணைய இதழில்" படித்த போது மிக நேர்மையான கட்டுரையாக எனக்கு தோன்றியதால் இதோ வாசகர்களின் பார்வைக்காக... (மெய்ப்பொருள் காண்பதறிவு)