Thursday, April 15, 2010

இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் !

ஐநா: இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.இதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.

உலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.உலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Source:தட்ஸ் தமிழ்

Tuesday, April 6, 2010

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பிரச்சினை- ஒரு பார்வை.


முசுலிம்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை - ஒரு பார்வை!

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை நாட்டில் பல சர்ச்சைகளை உண்டு பண்ணியுள்ளன. வேண்டுமென்றே இதனைச் சர்ச்சைக்கு உட்படுத்துபவர்கள் இந்துத்துவாவாதிகள்; அவர்கள் முசுலிம்களுக்கான இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டிலும் மட்டுமல்ல அவர்களின் எல்லாப் பிரச்சினைகளிலுமே மூக்கை நுழைத்து ஏதாவது தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர்கள்தாம்.


முசுலிம்களோ, கிறித்துவர்களோ தங்கள் மதங்களையும், வழிபடும் கடவுள்களையும்கூட இந்து மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற அளவுக்கு இந்துத்துவாவாதிகளின் குரூரமான ஆதிக்கக் கரங்கள் நீள்வது எல்லோரும் அறிந்ததே.


முசுலிம்களின் முன்னேற்றத்திற்காக பல ஆணையங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டன. இந்த வகையில் நீதிபதி சச்சார் குழு, நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையிலான ஆணையங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளையும் வழங்கியுள்ளன.


கேரளாவில் 12, தமிழ்நாட்டில் 3.5, பிகாரில் 3, கருநாடகாவில் 4, உத்தரப்பிரதேசத்தில் 2 விழுக்காடு ஒதுக்கீடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் 10 விழுக்காடு அளிக்கப்படும் என்று மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆந்திரப் பிரதேசத்தில் இராசசேகரரெட்டி தலைமையில் அமைந்த அமைச்சரவை முசுலிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது இந்திய அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (2004 செப்டம்பர்).
இதனைத் தொடர்ந்து மத அடிப்படையில் அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.


முசுலிம்களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் இட ஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டைத் தாண்டுவதால், அதுவும் செல்லாது என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சிவப்பு மை கொண்டு அடித்து வீழ்த்திவிட்டது. (2005 நவம்பர்).
ஆந்திர மாநில அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. முசுலிம்களுக்கு அளிக்கப்பட்ட 5 விழுக்காட்டில் ஒரு விழுக்காட்டினைக் குறைத்துக் கொண்டு 4 விழுக்காடு வழங்கிட ஆணை பிறப்பித்தது.
இட ஒதுக்கீடு என்றாலே அதனை எதிர்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதே, சும்மா இருந்துவிடுவார்களா? இதனை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இப்பொழுது ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு (Bench) இந்த வழக்கினை விசாரித்தது. ஏழு நீதிபதிகளில் ஒருவர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இன்னொருவர் கருத்து எதையும் சொல்லாமலும், மற்ற அய்வர் எதிராகவும் தீர்ப்பு அளித்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு சற்றும் களைப்பு அடையாமல் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஜே.எம்.பஞ்சால், பி.எஸ். சவுகான் ஆகியோர் உள்ளிட்ட அமர்வு வழக்கினை விசாரித்து தீர்ப்பு ஒன்றையளித்தது (25.3.2010)
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று கூறி, முசுலிம்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது.


முசுலிம்களுக்கான இட ஒதுக்கீடு என்ற ஒன்று நீதிமன்றங்களால் எப்படியெல்லாம் பந்தாடப்படுகின்றது என்பதை எண்ணினால், சமூகநீதி பாதுகாப்பான நிலையை இன்னும் எட்டவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.


2001 மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவில் உள்ள முசுலிம்களின் எண்ணிக்கை 13.4 விழுக்காடாகும். ஒவ்வொரு சமூகமும் எந்த அளவு விகிதாச்சாரத்தைப் பெற்று இருக்கிறது என்பதற்கு ஜி.இ.ஆர். (Gross Enrollment Ratio) என்று குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது உயர் கல்வியில் கிறித்துவர்கள் 19.85; சீக்கியர்கள் 17.81; இந்துக்கள் 13.13, முசுலிம்கள் 7.7. இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் 7.37 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன? இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குப் பரிகாரங்கள்தான் என்ன? சமூகநீதி என்ற கண்ணோட்டந்தானே இந்த அவல நோயைத் தீர்ப்பதற்கான கைகண்ட மருந்து? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கு முதன்மை இடம் அளிக்கப்படவில்லையா?
சமூகநீதிக்கு எதிரான சக்திகள் எதிர்க்குரல் கொடுக்கும்போது, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும்.


நன்றி :
------------------ “விடுதலை” தலையங்கம் 6-4-2010

Monday, April 5, 2010

கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அம்பலம்


கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அம்பலம்


திருவனந்தபுரம்:கிங்ஃபிஷர் விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்குண்டுத் தொடர்பான விசாரணையில் கைதான ராஜசேகரன் நாயர் என்பவர் ஹிந்துத்துவா அமைப்பான ஹரித்துவார் மித்ரா மண்டலின் உறுப்பினராவார்.
இந்த அமைப்பிற்கும் பாசிச ஹிந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ் க்குமிடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மித்ரா மண்டலின் கொள்கைப் பிரச்சாரத்திற்காக வெளியிட்டுள்ள காலண்டரில் ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர்களான ஹெட்கோவர், கோல்வால்கர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.


கேரளாவைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவரின் தயவில் குஜராத்தில் செயல்படும் தொழில் நிறுவனமான உமா எஞ்சினியரிங் என்ற நிறுவனம்தான் இக்காலண்டரை தயார்செய்து வெளியிட்டுள்ளது. உமா எஞ்சினியரிங் என்ற நிறுவனத்தின் தலைமையகம் ஹரித்துவாராகும்.
வெடிக்குண்டு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள ராஜசேகரன் நாயர் சி.ஐ.எஸ்.எஃபில் சேருவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுமிக்க(active) உறுப்பினராக இருந்துள்ளார் என்பதற்கான விவரமும் புலனாய்வில் கிடைத்துள்ளது.


குஜராத்தில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் உதவியினால்தான் ராஜசேகரன் நாயர் சி.ஐ.எஸ்.எஃப் என்ற central industrial security force என்ற பாரா மிலிட்டரி படையில் சேர்ந்துள்ளார். இப்பகுதியிலிருந்து ஏராளமான நபர்களை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடைய குஜராத்தில் வசிக்கும் கேரள தொழில் அதிபர் பல்வேறு மத்திய அரசு பாதுகாப்புப் படைகளில் பணிகளுக்கு சேர்க்க உதவி புரிந்துள்ளார்.


ராஜசேகரன் நாயர் சி.ஐ.எஸ்.எஃப்பில் சேர்ந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் தொடர்பை அடக்கி வாசித்தார். 20 ஆண்டுகள் சி.ஐ.எஸ்.எஃபில் கான்ஸ்டபிள், ஹவில்தார் பதவிகளில் பணியாற்றிய ராஜசேகரன் நாயர் பின்னர் சுயமாக ஓய்வுப் பெற்று 2003 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஆர்.ஓ, எஃப்.எ.சி.டி, நேசனல் போலீஸ் அகாடமி போன்ற நிறுவனங்களிலும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.


இதன் பிறகுதான் ஹரித்துவார் மித்ரா மண்டல் என்ற ஹிந்துத்துவா அமைப்புடன் ராஜசேகரன் நாயருக்கு தொடர்பு ஏற்பட்டது.
-தேஜஸ்