Friday, February 20, 2009

வேட்டையாடப்படும் இதழியல் சுதந்திரம்

புகழ் பெற்ற பத்திரிகையாளரும் 'சித்திரா' எனும் நூல் வெளீயிட்டு நிறுவனத்தின் தலைவரும் இயக்குனருமான பி.வி.சீத்தாராம் தம் மனைவியுடன் உடுப்பி மாவட்டத்தில் தம் காரில் வந்து கொண்டிருந்த போது காவல்துறையைச் சேர்ந்த ஆறு வேன்களால் வழிமறிக்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சீத்தாராம் காரிலிருந்து இறங்கி வெளியே வந்த போது காவல்துறையினர் அவரைச்சுற்றி வளைத்துக் கைது செய்தனர். வேடிக்கை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு பொய் வழக்குத்தான் இந்தக்கைதுக்குக் காரணமாம். அதுமட்டுமல்ல, கைது செய்வதற்கான வாரண்டும் காவல்துறையினர் கொண்டுவரவில்லை. அடுத்த நாள் உடுப்பி மாவட்ட நீதிபதியிடம் இவரைக் கொண்டு செல்லும் போது இவருடைய கைகளுக்கு விலங்கிட்டு இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். இயந்திரத் துப்பாக்கிகளுடன் காவலர்களின் ஒரு படையே அவரைச் சுற்றி இருந்தது.

சித்திரா நிறுவனத்தின் கீழ் மூன்று பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் 'கரவலிஅலெ' மிக முக்கியமான இதழாகும். 40,000 பிரதிகள் விற்பனையாகின்றன. இரண்டு இலட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமக்கு எதிராகப் பொய் வழக்கு போட்ட சங்பரிவாரங்களுடன் காவல்துறையும் பா.ஜ.க அரசாங்கமும் சேர்ந்து செயல்படுவதால் தம் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்ட சீத்தாரம் உடுப்பியில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யாமல் மைசூரில் இருந்து தான் ஜாமினில் வெளிவந்தார்.

இவர் கைது செய்யப்பட்டபின் இவருடைய அலுவலகம் சங்பரிவாரங்களால் பலமுறை சூறையாடப்பட்டது. 2008 நவம்பர் 17_ம் நாள் மங்களூரில் உள்ள இவருடைய பத்திரிகை அலுவலகமும் தாக்கப்பட்டது. இவருடைய பத்திரிகைகளை விற்கும் கடைகளையும் பாசிசக் கும்பல் வேட்டையாடியது. பத்திரிகைக் கட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை வழிமறித்து ஆயிரக்கணக்கான இதழ்களை எரித்து நாசமாக்கினார்கள்.

இந்த அளவுக்கு இவர் மீதும் இவருடைய பத்திரிகை மீதும் பாசிசக்கும்பல் பாய்வதற்குக் காரணம் என்ன?

"2008 ம் ஆண்டு மங்களூரில் பஜ்ரங்தள தொண்டர்களால் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டதைக் கண்டித்து செய்திகள் வெளியிட்டதும், சங்பரிவாரின் மதவெறித்தனத்தைக் கடுமையாகச் சாடி எழுதியதுமே காரணம்" என்கிறார் சீத்தாராம்.

தெற்கு கன்னட மாவட்டத்தின் பஜ்ரங்தள் தலைவர் வினய் ஷெட்டி தெகல்காவுக்கு அளித்த நேர்காணலில் தங்களின் சட்டவிரோத செயல்களை நியாயப்படுத்திப் பேசினார், எங்களை வெறுப்பேற்றினானால் சும்மா விடுவோமா? என்றார்.சீத்தாரம் சங்பரிவாரின் துன்புறுத்தல்களுக்குப் பலமுறை ஆளாகியுள்ளார். ஆயினும் அச்சமின்றி தீமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். இதனாலேயே அவர் பல பொய் வழக்குகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

2007- ம் ஆண்டு முக்கிய ஜைன மத குரு ஒருவர் பொது நிகழ்ச்சியில் அம்மணமாய்க் காட்சி அளித்ததை கண்டித்துத் தம் பத்திரிகையில் எழுதியிருந்தார்.இது நம் இந்தியப் பண்பாட்டிற்கும் மரபுக்கும் எதிரானது என்றும், சமயக் கோட்பாடுகளைப் பேணும்போது ஒழுக்கம் சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுதினார். உடனே ஜைன சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டார்.

கர்னாடக பா.ஜ.க. அரசு சீத்தாராமுக்குக் கைவிலங்கு போட்டு இரும்புச் சங்கிலியால் பிணைத்து பொது மக்கள் முன்னிலையில் தெருவழியால அவரை இழுத்துச் சென்றது. காவல் நிலையத்திலும் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு பத்திரிகையாளரை இழிவு படுத்திய இந்த நிகழ்வு கர்னாடக அளவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(இன்டர் நேஷனல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட்), இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா), தில்லி பத்திரிகையாளர் சங்கம் எனப் பல அமைப்புகளும் இதழியல் சுதந்திரத்தை நசுக்கும் இந்தச் செயலுக்கு எதிராகக் குரல் கொடுத்துதிருப்பதுடன் மானில பா.ஜ.க. அரசையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கர்னாடக மானில பா.ஜ.க. அரசு மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தீய சக்திகளுக்கு வெளிப்படையாகவே துணை போய்க்கொண்டிருக்கிறது. சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக பெரும்பான்மை இந்துக்களை தூண்டிவிடும் வகையில் "விஜய கர்னாடகா" எனும் நாளிதழில் அதன் ஆசிரியர் பைரப்பாவும், பத்தி எழுத்தாளர் பிரதப் சிம்ஹாவும் எழுதி வருகிறார்கள். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக நல அமைப்புகளும் சேவை அமைப்புகளும் பல தடவை முறையிட்டும் கூட கர்னாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

தெஹல்கா (24.01.09)
நன்றி: சமரசம் மாதமிருமுறை

2 comments:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

இந்துத்துவா

பா.ஜ.க.வின் பாசிசப் பாய்ச்சல்
- கலி.பூங்குன்றன்
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி அண்மைக் காலமாக உறக்கமின்றி அல்லாடுகின்றார் என்று கேள்வி.

காரணம் - கோத்ரா ரயில் எரிப்பைத் (27.2.2002) தொடர்ந்து 22 மணி நேர இடைவெளியில் ஈராயிரம் முசுலிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டது. தொடர்பான வழக்குகள் இப்பொழுது குன்று போல் எழுந்து நிற்கத் தொடங்கி விட்டன.

3000 வழக்குகளில் சாரமில்லை என்று கூறி ஊற்றி மூடியது மோடி அரசு. சிறப்பு விசாரணைக் குழு ஒன்றினை உச்சநீதிமன்றமே அறிவித்துவிட்டது.

ராமபக்தர்கள் 95 பேர் கொல்லப்பட்டதற்கான எதிர் விளைவுதான் இந்தப் படுகொலை என்று முதல் அமைச்சராகவிருந்த நரேந்திரமோடி பச்சையாகவே கூறினார் - அவர் அன்று பேசியதில் ஒளிவு மறைவும் இல்லை. விஞ்ஞான ரீதியாகக்கூடப் பேசினார் என்று கொள்ள வேண்டும். சர் அய்சக் நியூட்டன் கூறிய வினை - அதற்கான எதிர்வினையைப் பற்றியெல்லாம் வினயமாகவே பேசினார்.

முசுலிம்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்ட நிலையிலும் அடுத்து வந்த தேர்தலிலும் மோடி வெற்றி பெற்றதால் நம்மை யார் அசைக்க முடியும்? என்ற இறுமாப்பில் மிதந்தார்.

உச்சநீதிமன்றம் இப்பொழுது இப்படி ஒரு அறிவிப்பைக் கொடுக்கும் என்று மோடிக் கூட்டம் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

நியூட்டன் தியேரி மட்டும்தான் அவருக்குத் தெரியுமா? வினை விதைத்தவன் வினை அறுப் பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று தமிழிலும் அருமையான பொன்மொழி கள் உண்டே அவற்றைத் திருவாளர் சோ ராமசாமியிடமிருந்து மோடிகள் தெரிந்து கொள்ளலாமே.

சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கத் தொடங்கியது என்றவுடன் தலைமறைவானவர்கள் யார் தெரியுமா?

அதிர்ச்சியாக இருக்கலாம் - ஆனாலும் உண்மைதான். மோடி அமைச்சரவையில் உள்ள பெண் அமைச்சர் மாயாபென் கோதானி என்பவர்தான் அப்படி தலைமறைவானவர். இன்னொருவரும் இருக்கிறார் - அவர்தான் விசுவ ஹிந்துபரிஷத்தின் குஜராத் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெய்தீப் பட்டேல்.

இன்னொரு கூடுதல் செய்தி - சில காவல் துறை அதிகாரிகளும் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்துள்ளளனர்.

குற்றம் செய்தவர்களுக்கு - அதுவும் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்குச் சட்டத்தின் சந்துபொந்துகள் அத்துபடிதானே!

நானாவதி கமிஷன் மோடியைக் குற்றமற்றவர் என்று தனது இடைக்கால அறிக்கையில் கூறிய தற்காகக் கூரை ஏறிக் குரல் கொடுத்தவர்களின் தொண்டைக் குழியை சிறப்பு விசாரணைக் குழு பூட்சுக் காலால் இப்பொழுது அழுத்திக் கொண்டிருக்கிறது.

அடுத்து பிரதமராக வருவதற்கு லாயக்கான வர் என்று டாட்டா, அம்பானி வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கப் போய், இப்பொழுது தூக்குக் கயிற்றினை முத்தமிடுவாரோ மோடி என்று கன்னத்தில் கையை வைத்துக் கொள்ளும் கலவர நிலை!

வீராதி வீரர், சூராதி சூரர் என்று இந்துத்துவா கும்பலாலும் பண முதலைகளாலும் தூக்கி நிறுத்தப்படும் இந்த மோடி யார் தெரியுமா?

சி.என்.என்., அய்.பி.என். (CNN-IBN) தொலைக்காட்சியின் சார்பில் பிரபல ஊடக வியலாரான கரண்தப்பாரின் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல், வெறும் நான்கரை நிமிடம் மட்டுமே சமாளித்து, அதற்குமேல் துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று இடையில் முறித்துக் கொண்டு ஓடியவர்தான் என்பதை நினைவில் கொள்க!

ஆதரவற்ற குழந்தைகளில் அபலைப் பெண்களும் உயிரோடு எரிக்கப்படும்பொழுது, அதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற நீரோ மன்னன் என்று எந்த உச்சநீதிமன்றம் மோடி யைக் குறித்து குற்றப் பத்திரிகை வாசித்ததோ-அதே உச்சநீதிமன்றம்தான் இப்பொழுது சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது என்பதை மோடிகள் மறந்து விடக் கூடாது.

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் ரயில் பெட்டி எரிப்பு சம்பவம் நடந்தது. அவசர அவசரமாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து முதல் அமைச்சராக இருக்கக்கூடிய நரேந்திரமோடி பேசுகிறார்.

நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது - தலையிடக் கூடாது என்று வழிகாட்டுகிறார்.

மோடி அமைச்சரவையில் உள்ள ஹரேன் பாண்டியா அதற்குக் கண் கண்ட சாட்சி. மக்கள் விசாரணை ஆணையத்திடமும் வாக்கு மூலமே கொடுத்திருக்கிறார்.

அதன் விளைவு என்ன தெரியுமா? நேரடி சாட்சியாக இருந்த ஹரேன் பாண்டியா படு கொலை செய்யப்படுகிறார். அமைச்சராக இருந்த வரையே தனது சுயநல மதவெறி அரசியலுக்காகத் தீர்த்துக் கட்டுகிறார் என்றால் எப்படி? நினைத்துப் பார்க்கவே தலைசுற்றுமே!

அதே நேரத்தில் தன் மகன் ஹரேன் பாண்டியா தன்னிடம் கூறிய தகவலை அவரது தந்தையார் நானாவதி ஆணையத்திடம் வாக்கு மூலமாகவே கொடுத்திருக்கிறார். ஆனால் நானாவதி ஆணையம் இதனை எந்த மூலையில் தூக்கி எறிந்தது என்றுதான் தெரியவில்லை. காலங் கடந்தாலும் உண்மைகள் நிரந்தரமாக உறங்கி விடுவதில்லை. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு பல பெரும் புள்ளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் வேலையில் தீவிரமாக இறங்கி விட்டது.

அதன் விளைவுதான் காவல்துறை அதிகாரி களின் பதுங்கலும், முன் ஜாமின் மனுக்களும்.

மாநில வி.எச்.பி., பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேல். வழங்கிய அறிவுரையின்படி காவல்துறை ஆணையர் சவானி என்பவர் கலவரம் நடைபெற்ற இடங்களிலிருந்து வேகமாக வெளி யேறியிருக்கிறார்.

கலவரங்கள் நடந்து ஓய்ந்த பிறகும் அலுவலகம் பக்கம் கூட அவர் தலைகாட்டவில்லையாம். இணை ஆணையர் தாண்டன், துணை ஆணையர் கோண்டியா, காவல் ஆய்வாளர் மைசூர்வாலா ஆகியோர் கலவரங்களுக்கு உறு துணையாக இருந்ததெல்லாம் இப் பொழுது வெளிச்சத்துக்கு வர ஆரம் பித்து விட்டன. அவர்களின் செல்பேசிகளே அவர்களைக் காட்டிக் கொடுத்திருக்கின்றன. பெண் அமைச்சரும் அவ்வாறே சிக்கியுள்ளார்.

என்ன கொடுமை என்றால் காவல்துறை அதி காரிகளே தங்கள் வாகனங்களிலிருந்து டீசலை எடுத்துக் கொடுத்து முசுலிம்களின் வீடுகளைக் கொளுத்தச் சொல்லியிருக்கின்றனர்.

வன்செயல்களில் காவல்துறையினரின் ஆதரவும் நேரடி பங்கேற்பும் என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மனித உரிமை அமைப்பு (Amnesty International) பட்டியலிட்டே அறிக்கையா கக் கொடுத்திருக்கிறது.

உப்புத் தின்றவன் அதற்கேற்ற அளவு தண் ணீர் குடிக்கத்தானே வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி, மதவிரோதங்களை, குரோதங் களை வளர்த்து சிறுபான்மை மக்களை வேட் டையாடும் பா.ஜ.க., - அதன் பரிவாரங்கள் எப்படி நாட்டில் நடமாட அனுமதிக்கப்படுகின்றன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். இப்படி உள்ள கட்சி சார்பில் தேர்தலில் நிற்க எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் முக்கிய மான வினாவாகும்.

குஜராத்தில் 2002-இல் இனப்படுகொலை என்றால் 2009-இல் ஒரிசாவில் அது மறு மதிப்பு! குஜராத் மாநிலத்தில் முசுலிம்கள் வேட்டை யாடப்பட்டனர் என்றால், ஒரிசாவில் கிறித்த வர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்பொழுது அவர்களின் அடுத்த களமாக கருநாடகா பட்டியலில் நின்று கொண்டு இருக்கிறது. கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதாவின் ஆட்சி அமைந்தாலும் அமைந்தது; அக்கட்சியின் பரி வாரங்கள் கலாச்சாரக் காவலர்களாக கையில் தடியும், கத்தியும் கொண்டு திரிய ஆரம்பித்து விட்டனர்.

கருநாடக மாநிலம் மங்களூர் மதுபானக் கடையொன்றில் (அம்னீசியா லஞ்ச் ஹோம்) அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பெண்களை அவமானப்படுத்தி, அடித்துத் துவைத்துள்ளனர். இவ்வமைப்பின் பெயர் ஸ்ரீராமசேனாவாம்!

பொருத்தம்தானே சூர்ப்பனகையின் மூக்கையும் முலையையும் வாள் கொண்டு அறுத்த மாபாதகனின் பெயரைத் தாங்கியவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

கடும் எதிர்ப்புக்குப் பிறகே அங்கே உள்ள பா.ஜ.க.வின் காவல்துறை ராம்சேனாவின் தலைவனான புரோ மோத் முத்தாலிக் உள்படப் பலரைக் கைது செய்தது; உடன் பிணையிலும் அவர்கள் வெளியில் வர வழியும் செய்யப்பட்டது.

பிணையில் வெளி வந்த ராம்சேனாவின் தலைவர் புரோ மோத் முத்தலிக் பெங்களூரில் பகிரங்கமாக செய்தியாளர்களைக் கூட்டி பேட்டி ஒன்று அளித்தார். பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் என்று கொண்டாடக் கூடாது; மீறி கொண் டாடினால் ஜோடியாகத் திரியும் இளைஞர்களி டத்தில் தாலிக் கயிறைக் கொடுத்து அந்த இடத் திலே கட்டச் செய்வோம் என்று கத்தினார்.

இந்தப் பேட்டியின் மறுநாள் சொல்லிய படியே நடத்தப்பட்டது. கேரள மாநிலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கே. குஞ்ஞம்பு அவர்களின் மகள் ஸ்ருதி.

இவர் கருநாடக மாநிலம் மங்களூரில் செயின்ட் அலோசியஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. கேரளா சென்று தன் பெற்றோர்களைச் சந்தித்து விட்டு தனியார் பேருந்து மூலம் கல்லூரி விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அதே பேருந்தில் முசுலிம் குடும்பத்தைச் சேர்ந்த சஹ்பீப் என்ற மாண வரும் பயணம் செய்தார். ஸ்ருதியின் தோழி ஒருவரின் சகோதரர் சஹ்பீப் என்ற முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

பேருந்து மங்களூரை நெருங்கிக் கொண்டிருந்த போது (பம்ப்வெல் சர்க்கிள் என்ற இடத்தில்) திடீரென்று நின்றது. யாரும் எதிர்பாராத நிலையில் ஆயுதங்களுடன் சில தடியர்கள் பேருந்துக்குள் நுழைந்து ஸ்ருதியையும் சஹ்பீப்பையும் வெளியே இழுத்து சென்று ஆட்டோ ஒன்றில் ஏற்றி குறிப்பிட்ட ஒரு இடத் திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டும் அந்தக் காலிகள் அவ் விருவரையும் கேவலமான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். மங்களூர் பஜ்ரங்தள் பொறுப்பாளர் சரண்பம்ப்வெல் என்ற ஆசாமிக்கு முக்கிய தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. பெண் இந்துவாகவும் பையன் முசுலிமாகவும் இருந்தது ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட துதான் இந்தக் கொடுமைக்குக் காரணமாம்.

மதம் மனிதனுக்குத் தேவை - அவசியம் தேவை என்று தாண்டிக் குதிக்கிறார்களோ அந்த மதம் படுத்தியபாடுதான் இது. மனிதத் தன்மையைக் காவு கேட்கும் மிருகத்துக்கு இன்னொரு பெயர்தான் மதம் என்பதை இப்பொழுதாவது உணர்ந்து கொண்டால் சரி.

அந்தக் குறிப்பிட்ட பேருந்தில் ஒரு முசுலிம் மாணவனும் இந்துப்பெண்ணும் பயணம் செய்கிறார்கள் என்பது இந்தக் கும்பலுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துநர்தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. அப்படியென்றால் இந்துத் துவா கும்பலோடு, ஒரு பேருந்தில் ஓட்டுநருக்குக்கூட எத்தகைய வலைப் பின்னல் இருக்கிறது என்பதை எளிதில் அறிய முடிகிறது. ஆட்சியில் பா.ஜ.க., இருந்தாலும், அதன் சேனைகள்தான் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றன.

இந்துத்துவா கும்பலின் ஆட்சி எந்தத் தரத்தில் இருக்கும்? இதோ ஓர் எடுத்துக்காட்டு. கருநாடக மாநிலத்தில் கர வலி அலே என்னும் நாளிதழ் வெளிவருகிறது நான்கு லட்சம் வாசகர்கள் இதற்கு உள்ளனர்.

இதன் இயக்கு நராகவும், தலைவராகவும் இருப்பவர் பி.வி. சீத்தாராம். ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பற்றி விமர்சனக் கட்டுரைகள் இதில் வெளியிடுவ துண்டு இந்த இதழின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதோடு பி.வி. சீத்தாராமை உடுப்பியில் கைது செய்து (5.1.2009) கை விலங்குடன் சாலையில் இழுத்துச் சென்றுள்ளது - பா.ஜ.க., ஆட்சியில் உள்ள காவல்துறை. இதற்கு முன்னதாக இதே கும்பலால் இதழின் அச்சகமும் அடித்து நொறுக்கப்பட்டது. பா.ஜ.க., என்பது பாசிசத்தின் சுவீகாரப் பிள்ளை என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

2009 மே மாதத்தில் மக்களவைக்கான தேர்தல் வரக்கூடும் என்று கருதப்படுகிறது இத்தகு கால கட்டத்தில் நாக்பூரில் கூடிய பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன தைரியம் இருந்தால், அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அதே குற்றவாளிகள் கும்பல் (1992 டிசம்பர் 6) அதே இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் ன்று தீர்மானம் போடுகிறது - கொக்கரிக்கிறது என் றால் நாடு எங்கே போய்ச் கொண்டிருக்கிறது? பாரத புண்ணிய பூமி என்று இந்தக் கும்பல் சொல்லிக் கொண்டிருக்கிறதே அதன் பவித்திரம் இதுதானோ என்று அறிவுடையார் எவரும் கேட்கவே செய்வர்.

Thanks to Unmai