Sunday, January 30, 2011

நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்!!

சொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு.

இவ்வழக்கில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இத்தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத மத நம்பிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் எல்லையற்று அமைந்திருக்கிறது.

‘சஹ்மத்' (SAHMAT), ‘சப்ரங் அறக்கட்டளை' (Sabrang Trust), ‘சோஷியல் சயின்டிஸ்ட்' (Social Scientist) ஆகிய அமைப்புகள், இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விளைவுகள் குறித்து முழுமையாக ஆராய, கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, புது தில்லியில் மூன்று நாள் (6, 7, 8 டிசம்பர் 2010) கருத்தரங்கை நடத்தின.

டிசம்பர் 6, 1992 இன் 18 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் அயோத்தி தீர்ப்பின் அனைத்து விளைவுகள் குறித்தும் புரிந்து கொள்ள கூடினர்.

கருநாடகம், மகாராட்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள பாபா போதாங்கிரி வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் சுவாமி ஆதித்தியானாத் என்பவர், மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோசமாக பேசியதற்கு எதிரான போராட்டம் மற்றும் இதுபோன்ற பல போராட்டங்கள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.

கருத்தரங்கில் மூன்று நாட்களாகப் பேசிய பல பேச்சாளர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அடிப்படைக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தனர்.

நீதிபதிகள் பி.பி. சாவந்த், ஹோஸ்பட் சுரேஷ், ஷா ரசா, ராஜிந்தர் சச்சார், பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர் இர்பான் அபீப், பேராசிரியர் சிரீன் மூஸ்வி ஆகியோர் ‘மத நம்பிக்கை மற்றும் உண்மை', "அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் ஜனநாயகம்",என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டன :

கிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி,
december 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காதது,
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் முன் அயோத்தியா வழக்கு நிலுவையில் இருந்தபோது சாட்சியம் அளித்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது பழிசுமத்தி, திட்டமிட்டு இழிவுபடுத்தியது உள்ளிட்டவை.

கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள் :
அதிகாரம், அச்சுறுத்தல், வன்முறை அடிப்படையிலான அரசியல் தலையீடின்றி ஜனநாயக அமைப்புகள் நீதி பிறழாமல் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வலியுறுத்தினார். முதிர்ச்சியான ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கு செலுத்தி, நீதி வழங்கப்படுவதை மாற்றும் செயல்பாடுகளின் மீதிருந்து நீதித்துறை தள்ளி நிற்க வேண்டும்.

தவறான வரலாற்று ஆய்வு, தவறான தொல்பொருள் ஆய்வு :
அயோத்தி தீர்ப்பில் நீதிபதி அகர்வாலின் 5000 வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை விமர்சிக்கும் 96 பக்க விமர்சனக் கட்டுரையை ‘ராம ஜென்ம பூமியின் தீர்ப்பும் வரலாறும்' என்ற தலைப்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மூத்த வரலாற்று அறிஞரும், பண்டைய இந்திய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற நிபுணருமான பேராசிரியர் இர்பான் அபீப் எழுதிய விமர்சனக் கட்டுரையை, ‘அலிகார் வரலாற்று அறிஞர்கள் கழகம்' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், ‘பாபர் மசூதி 1528 இல் பாபரின் ஆட்சியின்போது கட்டப்படவில்லை ஆனால், 1707 ஆம் ஆண்டு பிறந்த அவுரங்கசீப் ஆட்சியில் கட்டப்பட்டது'என்று நிறுவ முனைகிறார். சிறிதளவே அறியப்பட்ட ஜோசப் டிபன்தேல் என்ற பாதிரியார் மற்றும் பயணி, அயோத்திக்கு 1740 லிருந்து 1765 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வருகை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஜோசப் டிபன்தேலின் எழுத்துகளிலிருந்து ‘ராம்கோட்' என்கிற இடிக்கப்பட்ட கோட்டையின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டது என்று கூறி, நீதிபதி அகர்வால் மசூதியில் உள்ள எழுத்துகளின் ஆதாரத்தைப் புறக்கணிக்கிறார்.

மசூதியில் உள்ள எழுத்துகளை நீதிபதி அகர்வால் போலியானவை என்று கூறி, 1760 மற்றும் 1810 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மசூதியில் இந்த போலி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நீதிபதி அகர்வால், இந்த எழுத்துகள் உண்மையானவை என்று ஏறக்குறைய ஒவ்வொரு வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளரும் கருதியிருப்பதை புறந்தள்ளுகிறார்.

இந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம், 1965 இல் கல்வெட்டு ஆய்வு நூல் ஒன்றை அரேபிய மற்றும் பாரசீக துணைக் கையேடாகப் பதிப்பித்தது. நீதிபதி அகர்வால் அவருடைய நீளமான தீர்ப்பில் இக்கையேட்டை கடுமையான சொற்களைப் பயன்படுத்தி புறந்தள்ளுகிறார். ‘மன்னர் பாபரின் கல்வெட்டுக் குறிப்புகள்' குறித்து இந்த அதிகாரப்பூர்வ கையேட்டின் சாட்சியம், நீதிபதி அகர்வாலால் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் பாரசீக மற்றும் அரேபிய கல்வெட்டு குறிப்புகளின் தலைவராகப் பணியாற்றியவரும், அரேபிய மற்றும் பாரசீக கல்வெட்டு ஆய்வாளர்களில் தலைசிறந்தவருமான டாக்டர் இசட்.ஏ. தேசாய் என்பவரால் இக்கையேடு தொகுக்கப்பட்டது.

இக்கல்வெட்டுக் குறிப்பு, டிசம்பர் 6, 1992 அன்று கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளும் வரை, மசூதியின் நுழைவு வாயிலில் காணப்பட்டது. இக்கல்வெட்டு குறிப்பு இப்பொழுது இல்லையென்றால், அதற்கு காரணம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் செயல்தான். டிபன்தேலின் எழுத்துகளில் இந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து எதுவுமில்லாதது குறித்து கூறவேண்டுமென்றால், வரலாற்றில் இத்தகைய பயணிகளின் எழுத்துகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை.

இன்னொரு எடுத்துக்காட்டினை கூறவேண்டுமென்றால், தலைசிறந்த அறிஞர் என்றும் பன்மொழிப் பாவலர் என்றும் கருதப்படும் மார்க்கோ போலோ, சீனப் பெருஞ்சுவர் பற்றி தனது எழுத்துகளில் குறிப்பிடாமல் விட்டதைச் சொல்ல வேண்டும். நீதிபதி சுதிர் அகர்வால் தனது வாதத்தில் பயன்படுத்தியிருக்கும் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினால், சீனப்பெருஞ்சுவர், மார்க்கோ போலோவின் பயணங்களுக்குப் பிறகு கி.பி. 1300 க்கு பிறகு கட்டப்பட்டது என்று தவறாக கூற வேண்டியிருக்கும்!

நீதிபதி அகர்வால் இன்னொரு உண்மையையும் மறந்து விடுகிறார். 1965 இல் கல்வெட்டுக் குறிப்புகளின் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் அரேபிய மற்றும் பாரசீக ஏடு பதிப்பிக்கப்படுவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர், பாபர் மசூதி கதவு மற்றும் மேடையில் அமைந்திருந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ‘அவுத் மாநிலத்தின் கெஸட்டியர்' என்ற பெயரில் பென்னட் என்பவர் தொகுத்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு 1877 – 78 ஆண்டில் பதிக்கப்பட்டு, மேற்கூறிய குறிப்பு அதன் முதல் இதழில் 6 மற்றும் 7 ஆவது பக்கங்களில் காணப்படுகிறது. படம் ஒன்று மற்றும் படம் இரண்டு என்ற தலைப்பின் கீழ் பாபர் மசூதி கல்வெட்டு குறிப்புகள் மற்றும் கட்டப்பட்ட நாள் என்ற தலைப்பின் கீழ் இக்குறிப்பு காணப்படுகிறது.

பாபர் மசூதியின் இரண்டு இடங்களில் அது கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1528 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டு, பாபர் மாமன்னரின் புகழ் கூறும் மற்ற வாசகங்களோடு பொறிக்கப்பட்டுள்ளது. இது, இதற்குமுன் கூறப்பட்ட ஆண்டைவிட பழமையானது. ஆனால், இந்த செய்தி நீதிபதி அகர்வாலின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்த சுருக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பென்னட்டின் குறிப்பு எச்.ஆர். நெவில் என்பவர் தொகுத்த ‘பைசாபாத் மாவட்ட கெஸட்டியர்' என்ற 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் 179 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

“மசூதியில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு வெளியே உள்ளது. மற்றொன்று மசூதியின் மேடையில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்புகள் 935 ஹிஜ்ரி (கி.பி.1528) என்ற தேதியை கொண்டுள்ளன.'' இந்த கல்வெட்டுக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பாபர் மசூதியின் வெளி வாயில் மற்றும் மேடை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், பாபர் மசூதி கட்டப்பட்ட ஆண்டாக 935 ஹிஜ்ரி (கி.பி.1528) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை, இரண்டு அரசாங்க அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த ஆண்டு, பாபர் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த அரசாங்க அறிக்கைகள், இக்கல்வெட்டு குறிப்புகளின் சந்தேகமற்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன".

பாபர் மசூதி பின்னர் கட்டப்பட்டது என்ற தவறான முடிவுக்கு வருவதற்காக நீதிபதி சுதிர் அகர்வால், கட்டுமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பாணி போன்ற மசூதி கட்டப்பட்ட ஆண்டோடு நெருங்கிய தொடர்புடைய கருத்துகளைப் புறக்கணிக்கிறார். ஒரு நீதிபதி தனது அய்ந்தாயிரம் வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை, மத நம்பிக்கையின் மிகக் குறுகிய அடிப்படையில் அமைத்திருப்பதோடு, வரலாற்று மற்றும் தொல்பொருள் சாட்சியங்களை தவறாக சித்தரித்து, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மதவெறி அமைப்புகள் குறி வைத்து தாக்குகின்ற பண்டைய இந்திய வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளார் என்று அலிகார் வரலாற்று அறிஞர்கள் பதிப்பித்துள்ள விமர்சனக் கட்டுரையில் தெரிய வந்துள்ளது.

பண்டைய இந்திய வரலாறு குறித்த நீதிபதி அகர்வாலின் தவறான புரிதல், பாபர் பற்றிய அவரது குறிப்பிலிருந்தும் மற்றும் அவருடைய தீர்ப்பிலிருந்தும் தெரிய வருகிறது. பாபரை ‘ஒரு முழுமையான இஸ்லாமிய நபர்' என்றும் ‘அவர் சிலைகளை வணங்குபவர்களை சகித்துக் கொள்ளவில்லை' என்றும் பாபரை நீதிபதி அகர்வால் வர்ணிக்கிறார்.

மேலும், தனது தீர்ப்பில் நீதிபதி அகர்வால் பின்வருமாறு கூறுகிறார் : “இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியத் துணைக் கண்டம் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெளியாட்களின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஏவப்பட்டிருந்ததோடு, இந்த வெளியாட்களால் இந்தியத் துணைக் கண்டம் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டும் வந்தது. மிக அதிகளவிலான செல்வம் இந்நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டது.''
மேற்கூறப்பட்டுள்ள வரி, பண்டைய இந்திய வரலாற்றின் ஒருதலைப்பட்சமான புரிதலை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியா வெளியிலிருந்தா ஆட்சி செய்யப்பட்டது? இந்த வெளியிடத்திற்கு செல்வம் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டதா?

யார் கொள்ளையடித்திருந்தாலும், அது சுல்தான்களாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் செல்வமும் இந்தியாவிற்குள்தான் தங்கியது.

டாக்டர் எஸ். அலி நதீம் ரசாவீ, பல நூற்றாண்டுக் கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் மசூதி கட்டுமானப் பாணியின் பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாக விளக்கி, பாபர் ஆட்சிக் காலத்திற்கும் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திற்கும் இடையே கட்டுமான பாணியில் இருந்த வேறுபாடுகளை விளக்கினார். கட்டுமான பாணி மற்றும் முறையை வைத்தே ஒரு கட்டடம் மொகலாயர் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டதா அல்லது மொகலாயரின் தொடக்க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா என்பதை எளிதாக அறிய முடியும்.

பாபரி மசூதி, ஷர்கி கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது ஜான்பூரில் காணப்படுகிறது. இந்த கட்டுமானப் பாணியில் வெளிவாயிலுக்கு ஒரு தனித்துவமான வடிவமைப்பு தரப்பட்டு, மசூதியின் குவிந்த கூரை பெரிதாகவும் கனமாகவும் காணப்படும். இந்த கட்டுமான பாணி பின்னர் வழக்கொழிந்து போனது. அவுரங்கசீப் காலத்திற்கு முன்னதாகவே கனமில்லாத குவிந்த கூரைகளும் தனியாக நிற்கும் மெல்லிய உயரமான கோபுரங்களும் மசூதியின் தனித்துவக் கூறுகளாயின.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் முக்கியமான தோல்விகளை டாக்டர் சிரீன் முஸ்வி எடுத்துரைத்தார். குறிப்பாக, வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் அறிஞர்கள் ஆகியோரது சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதை டாக்டர் முஸ்வி விளக்குகிறார். வரலாற்று அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுக்கூற்றுகள் இரண்டு வாக்கியங்களிலாவது விளக்கப்பட வேண்டியவை. ஆனால், இத்தகைய சாட்சியங்களை ‘உண்டு' அல்லது ‘இல்லை' என்று ஒரே சொல் மூலம்தான் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வு சாட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று வரையறுத்ததன் மூலம், தேர்ந்த நிபுணர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிமினல் சட்டத்தில், ஒவ்வொரு சாட்சியாளரும் விளக்கங்களைக் கூற, அடிப்படை சட்ட உரிமை உள்ளது. இந்த அடிப்படை சட்ட உரிமையை மறுத்ததன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதியின் பாதையையே அழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர் டி. மண்டல் எழுதிய ‘இடிப்புக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு'; ‘தோண்டுதலுக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு' ஆகிய இரு நூல்களும் அயோத்தி தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற பெஞ்சினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்திருக்கின்றன. இது, சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோரது ஆய்வு சிந்தனைகளையும், கருத்து சுதந்திரத்தையும் திட்டமிட்டு உயர் நீதிமன்றம் முடக்கும் செயலாகும்.

இது, வாக்குகளுக்காக பெரும் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்ட ஓர் அரசியல் மதவெறி மோதலுக்காக செய்யப்படுவதும்; ஒரு பழமையான காலனியாதிக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதும்; அயோத்தி வழக்கில் நீதித்துறை சீரழிவு மற்றும் நீதியின் அழிவுக்குப் பின்னால் உள்ள கொடூரமான அரசியலையும் சுட்டிக்காட்டுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அமைக்கப்பட்ட – பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு காணப்பட்ட விலை மதிப்பற்ற மசூதியின் பாகங்களை அழித்த – தொல்பொருள் ஆய்வுக் குழுவை, நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் வெகுவாகப் பாராட்டுகிறார். மதவெறி கட்சியான பா.ஜ.க. வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆணையிட்ட தொல்பொருள் அகழாய்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை, நீதிபதிகள் ஆய்வு செய்ய மறந்துள்ளனர். தனது ரத்த வெறி மிகுந்த ரத யாத்திரையை நடத்தி, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியும் – மதவெறி பா.ஜ.க. நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.

இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் நடந்த உள்நோக்கம் கொண்ட அகழாய்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை கேள்வி கேட்காத நீதிபதிகள், தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் தவறான – ஜோடிக்கப்பட்ட அறிக்கையின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் அறிஞர்களின் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் ஆட்சியும், ஜோடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வறிக்கையை உறுதிப்படுத்தியதில் சமபங்கு வகித்திருக்கிறது என்று பேராசிரியர் இர்பான் அபீப் குற்றம் சாட்டினார்.

1949 – 1992 சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களுக்கு, இந்தியத் துறைகளின் மோசமான பதில் நடவடிக்கைகள் :
டிசம்பர் 23 1949 அன்றிரவு, பாபர் மசூதிக்குள் கிரிமினல் தாக்குதலாக நுழைந்து ராமன் சிலைகளை வைத்து, சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அயோத்தி வழக்கின் வரலாறு ஒன்றும் செய்யாமல் தோல்வியடைந்திருப்பதை, லிபரான் ஆணையத்தின் பல்லாண்டு கால வழக்குரைஞரான அனுபம் குப்தா உணர்ச்சியுடன் எடுத்துரைத்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, காவல் துறை அதிகாரி கே.கே. நய்யார் என்பவருக்கு கடிதங்கள் மற்றும் ஆணைகள் பிறப்பித்தும் கூட, மேற்கூறிய டிசம்பர் 23, 1949 அன்றிரவு நடைபெற்ற குற்றச் செயல் மாற்றப்பட முடியவில்லை. இந்த காவல் துறை அதிகாரி, இப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி அகர்வால் தன்னுடைய தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்த புராணக் கதைகளுக்கு அய்ந்தாயிரம் பக்கங்கள் ஒதுக்கியுள்ள அதே நேரத்தில், 1949 மற்றும் 1992 இல் நடந்த பாபர் மசூதி மீதான கிரிமினல் தாக்குதல்களுக்கு எந்தவொரு கவனத்தையோ, இடத்தையோ ஒதுக்கவில்லை. மசூதிக்குள் கிரிமினல் முறையில் நுழைந்ததற்கான முதல் தகவல் அறிக்கை, மிகுந்த தயக்கத்துடன் வேண்டா வெறுப்பாக காவல் துறை கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் மசூதி இடிப்புக்கான அரசியல் வெறித்தனத்தில் பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.பி. பாண்டேயின் நடத்தையும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை அனுபம் குப்தா சுட்டிக் காட்டினார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங்கால் தரப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு, டிசம்பர் 6, 1992 அன்று மிகுந்த விளம்பரத்துடன் பலரும் பார்க்க செய்யப்பட்ட கரசேவையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமானது, அங்கிருந்த சந்தன் மித்ரா மற்றும் சுவபன்தாஸ் குப்தா போன்ற பத்திரிகையாளர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மசூதி இடிக்கப்பட்ட போதும் 1949 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகள் இடிக்கப்படவில்லை. அவை கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு, மசூதி இடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் அந்த சிலைகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ், சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும் செய்யாமல் – வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு குறித்தும் பேச்சாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் திட்டமிட்டு நீர்த்துப் போக செய்யப்பட்டதை பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா விரிவாக விளக்கினார். மசூதி இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக் கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும், மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அய்ந்தாண்டு ஆட்சியில் மத்திய அரசு திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உச்சத் தலைவர்கள் மசூதி இடிப்பின் தலைமை சூழ்ச்சியாளர்களாகப் பதிவு செய்யப்பட்டதை நீக்கினர். இதை செய்து, ஏதோ தலைமை இல்லாத வெறிக்கூட்டம் மசூதி இடிப்பை செய்ததாக பொய்யாக வாதிட்டனர். அந்த இரண்டு வழக்குகளும் இப்போது தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விரு வழக்குகளும் மத்திய அரசின் மேற்கூறப்பட்டுள்ள பாரபட்ச தலையீட்டால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வின் உச்ச தலைமையும் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் கொடுத்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு வெட்கமின்றி மீறியும் கூட, உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.வினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தனின் ‘ராம்கே நாம்' என்ற திரைப்படம், மக்கள் மத்தியிலிருந்தும் மற்ற கிரிமினல் சட்டத் துறை நடவடிக்கைகளிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்திகளை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தது. நீதிமன்றத்தால் சர்ச்சைக்குரிய இடத்திற்கு மத குருவாக நியமனம் செய்யப்பட்ட பாபா லால்தாஸ், 1993 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் திடீரென்று கொலை செய்யப்பட்டது, இந்த செய்திகளில் ஒன்றாகும். இதேபோன்ற இன்னொரு மர்மமான கொலை, பைசாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விலை மதிப்பற்ற ஆவணங்களை லிபரான் ஆணையத்திற்கு கொண்டு சென்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டதாகும். இந்தக் கொலைக் குற்றங்கள் எவையும் விசாரிக்கப்படவில்லை.

பைசாபாத் மற்றும் அயோத்தியிலிருந்து குரல்கள் :ஜனநாயக எதிர்ப்பும் பல்மத வழிபாடும் அயோத்தியில் ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி ஆச்சாரிய ஜுகல் கிஷோர் சாஸ்திரியும் ‘மெக்செசே' விருதை வென்ற சந்திப் பாண்டேயும் விளக்கமாகப் பேசினர். டிசம்பர் 6, 1992 அன்று மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட 17 முஸ்லிம்கள் மற்றும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 300 முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் குறித்து எந்த விசாரணையயும் நடத்தப்படவில்லை.

நீதித்துறையின் அரசியல்
உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், அலகாபாத் மற்றும் லக்னோ உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி எஸ்.எச்.ஏ. ரஸா ஆகியோர் உயர் நீதிபதிகள் வட்டாரத்தில் பாபர் மசூதி அயோத்தி பிரச்சனை குறித்து நிலவிவரும் அரசியல் பற்றியும், பெரும்பான்மை இந்துத்துவ அரசியல் நீதிபதிகள் மற்றும் அரசின் மீது செலுத்தும் செல்வாக்கு குறித்தும் விளக்கமாகப் பேசினர்.

1980–களின் இறுதியில், மகாராட்டிர பம்பாய் நீதிமன்றங்களிலிருந்து வந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்த விளைவுகளை ஆய்ந்த குழுவொன்று பின்வரும் செய்தியை தெரிவித்தது: இந்த வழக்குகளில் ஒன்றில் உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்துத்துவா அரசியல் மத இயக்கத்தை நியாயப்படுத்தி, அதை இந்து மதத்தோடு குழப்பி, அதன் மூலம் பெரும்பான்மை மதவெறி அரசியலுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீதிமன்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இப்பெரும்பான்மை மதவெறி அரசியலின் வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க. தோன்றி, இந்திய நாடாளுமன்றத்தில் 90 இடங்களை வென்றது.

மாநிலத் தேர்தலின்போது சிவசேனா தலைவர்கள் சுபாஷ் தேசாய், ரமேஷ் பிரபு மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுகள் – அரசியல் ரீதியான வெறித்தனம் மிகுந்த இந்துத்துவாவை வெளிப்படுத்தியதோடு, மதசிறுபான்மையினருக்கு எதிராக இழிவான வெறுப்பினையும் வெளிப்படுத்தின. இந்தப் பேச்சுகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் தன்மை கொண்டவையாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் இரண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கெடுவõய்ப்பாக அப்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக ஆகிவிட்டிருந்த மனோகர் ஜோஷியின் தேர்தலை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அதற்குப் பிறகு இருவேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா இயக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்பினை, அரசியல் சாசன அமர்வு (பெஞ்ச்) முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், இந்த வழக்குகளுக்காக பெரிய அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் ஒன்றை அரசியல் சாசன அமர்வுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஏ. தேசாய் இக்கருத்தரங்கில் பங்கேற்று, இந்துத்துவா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.

‘கம்யூனலிசம் காம்பட்' இதழின் இணை ஆசிரியரான தீஸ்தா செடல்வாட் தனது முடிவுகளை – ‘வெறித்தனமான வெறுப்புப் பேச்சும் இந்திய நீதிமன்றங்களும்' என்ற கட்டுரையாகப் படித்தார். அதில் பொதுவாக நீதித்துறை குறிப்பாக உயர் நீதிபதிகள் வெறித்தனமான வெறுப்பு பேச்சு குறித்த சட்டவரையறைகளை தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்து வருவதாகக் கூறினார். இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் பிரிவுகள் 153 ஏ, 153 பி, 505 மற்றும் 295 ஆகியவை மக்களில் ஒரு சாராருக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதுவது மற்றும் பேசுவது குறித்ததாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற வன்முறையின் போது பால்தாக்கரே தனது ‘சாம்னா' இதழில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வெறித்தனமான வெறுப்புப் பேச்சை பம்பாய் உயர் நீதிமன்றம், ‘இந்த வார்த்தைகள் தேசத்திற்கு எதிரான முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன' என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியதை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 30 ஆயிரம் கையெழுத்துகள் கொண்ட தேசிய இயக்கம் நடத்தப்பட்ட போதும் உச்ச நீதிமன்றம் அதை கண்டு கொள்ளவில்லை. மே 2007 வருண் காந்தி உத்தரப் பிரதேச தேர்தலின் போது விஷத்தனமான பேச்சுகளை பேசிய பிறகு, அதற்கெதிராக குடிமக்களால் இயக்கம் நடத்தப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேட்பாளர் உத்தரப்பிரதேச மாநிலம், பில்பிட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, அரசியல் வர்க்கமோ, அரசோ, நீதித்துறையோ, தலைமை தேர்தல் ஆணையரோ விஷமத்தனமான பேச்சுகளை 2007 தேர்தலின் போது பேசிய வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், பம்பாய் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மிஹிர் தேசாய், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ரவி கிரண் ஜெயின் ஆகியோர் விளக்கமாகப் பேசினர்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த பிறகு பா.ஜ.க. அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்த வழக்கில் – 1994 இல் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், மதச்சார்பின்மையே இந்திய அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறாக இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த முக்கியத் தீர்ப்பு ஓராண்டுக்குப் பிறகு 1995 இல் உச்ச நீதிமன்றத்தில் வெளிவந்த, இந்துத்துவாவை நியாயப்படுத்திய தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டது.

மதவெறி அரசியலின் விளைவுகள் :

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த துடிப்பான பேச்சாளர் குழுக்கள், மதவெறி அரசியலால் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து இத்தெளிவான புரிதலை ஏற்படுத்தினர்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா போதாங்கிரி கோயில் தொடர்பான ஆபத்தான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் ‘கர்நாடகா மத நல்லிணக்க அமைப்பு' துடிப்பான பங்கினை வகித்தது. பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் திரட்டிய வன்முறை கும்பலுக்கெதிராக மாவட்டத்தில் மக்களை திரட்டி மேற்கூறிய அமைப்பும் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' என்ற அமைப்பும் செயல்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வமைப்புகள் உள்ளூரில் நடந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்தாலும், அதன் பிறகு கர்நாடக அரசின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை அவமதித்திருந்தாலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கூறப்பட்டுள்ள பிரச்சனையோடு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒரு தெளிவான சட்ட வரையறையை வெளிப்படுத்த தவறியுள்ளது மட்டுமின்றி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் கிரிமினல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ தயங்குகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர் கோயில்களாக அல்லது பன்மத வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் 30 ஆயிரம் கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்றுவதற்கு – பாரதிய ஜனதா கட்சியும் வி.எச்.பி.யும் திட்டமிட்டுள்ளன என்பதை மே 2003 இல் ‘கம்யூனலிசம் காம்பட்' இதழ் வெளிப்படுத்தி, அந்த 30 ஆயிரம் கோயில்களின் பெயர்களைப் பதிவு செய்ததை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டுப் பேசினார்.

பஜ்ரங்தள் மூலம் தனது அரசியல் வாழ்வை வளர்த்துக் கொண்ட பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார், டிசம்பர் 29, 2002 அன்று வாரணாசியில் முஸ்லிம்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளிடம் கொடுத்து விடவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்குப் பிறகு மார்ச் 1, 2003 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் படோஹியிலும் அதே ஆண்டு மார்ச் 10 அன்றும், வி.எச்.பி.யின் சர்வதேச செயலாளர் பிரவின் தொகாடியா இதே மிரட்டல்களை மிகுந்த விஷத்தனமான வெறித்தனத்துடன் மீண்டும் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது பேச்சாளர் எம்.எஸ். வைத்யா மூலம் காசி மற்றும் மதுரா கோயில்கள் ‘விடுதலை' பெறுவதற்கான வி.எச்.பி.யின் விஷத் திட்டத்திற்கு, தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியது.

ராஜஸ்தானில் உள்ள பாபா ராம்தேவ் கோயில், வலதுசாரி பெரும்பான்மை இந்துத்துவ அரசியல், மதப் குழுக்களால் எடுத்து கொள்ளப்பட்டதை சிறந்த வரலாற்று அறிஞர் கே.எம். சிறீமலி விளக்கினார். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள பியாரானா முஸ்லிம் தர்கா, இந்து மதவெறி அமைப்புகளின் பொறியில் சிக்கியிருப்பதை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டார்.

துடிப்பான குடிமக்கள் முனைப்பு, சிறுபான்மை மக்களிடமிருந்து வெளிப்பட்டு 2005 இலிருந்து கோரக்பூரில் சுவாமி ஆதித்யாநாத்தின் வெறித்தனமான பேச்சுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது. வழக்குரை ஞர்கள் ஆசாத் அயாத் மற்றும் பர்வேஸ் பர்வாஸ் ஆகியோர் ஆதித்யாநாத்திற்கு எதிராக, வெற்றிகரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றதை குறிப்பிட்டனர். இந்த வெறித்தனமான மதகுரு, அதற்குப் பிறகு தடை உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வேண்டியிருந்தது.

வரலாற்று அறிவியல், தொல்பொருள் ஆய்வு, மனித உரிமைகள் முனைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் என்று அறிவைத் தூண்டிய வளமான உரையாடல்கள் மூன்று நாட்கள் கருத்தரங்கில் இடம் பெற்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அரசியலுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் ராமனுக்கு கோயில் கட்டுவது அல்ல. ஆனால், மதத்தின் மொழியையும், பிரசங்கத்தையும் தவறாகப் பயன்படுத்தி – இந்தியாவை அரசியல் ரீதியாக ஒரு பெரும்பான்மை சர்வாதிகார நாடாக ஆக்குவதே ஆகும்.

தமிழில் : இனியன் இளங்கோ
Thanks to keetru.com

No comments: