Saturday, December 27, 2008

அரசு அதிகாரியின் லஞ்சக் குவியலும் கொஞ்சல் வாழ்க்கையும்.. (ரிப்போர்ட்டர்)தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக வசமாக மாட்டிக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, என வர்ணிக்கப்படும் அளவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் டி.ஆர்.ஓ. ஜவஹர் சாந்தகுமார், கோடி கோடியாகக் குவித்திருக்கிறார் என கண்டுபிடித்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்.


இன்னும் ஓரிரு நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஓரிரு மாதங்களில் கலெக்டராக பதவி உயர்வு என குதூகலத்தில் இருந்த ஜவஹர் சாந்தகுமாருக்கு, கடந்த 23-ம் தேதி இரவில்தான் துப்பாக்கி லைசென்ஸ் வடிவில் விதி வந்து விளையாடிவிட்டது. அன்று மாலை வரை தனது அதிகாரத்தால் அத்தனை பேரையும் ஆட்டுவித்த அந்த அதிகாரி, இப்போது சிறைக்குள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.


கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார், தனது துப்பாக்கி லைசென்ஸைப் புதுப்பிக்க இந்த அதிகாரியை நாடியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் அது புதுப்பிக்கப்படாததால் அதற்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டிருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், விஷயத்தை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.


லஞ்சம் கேட்கும் அதிகாரியை பொறி வைத்துப் பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கரூருக்கு வந்து செல்வகுமாரைச் சந்தித்து இதற்கான திட்டத்தைத் தீட்டியிருக்கின்றனர்.ஆனால், அன்று ஜவஹர் சாந்தகுமார், திங்கட்கிழமை அரவக்குறிச்சி அருகே மயானப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காகச் சென்றுவிட்டதால், அன்று திட்டம் நிறைவேறவில்லை. செவ்வாய்க்கிழமை குளித்தலையில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்று மாலையில்தான் திரும்பியிருந்தார். இனியும் காத்திருக்க முடியாது என முடிவெடுத்து, செல்வகுமாரை லஞ்சப் பணத்தோடு உள்ளே அனுப்பி வைத்துவிட்டு வேட்டி கட்டி, துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அதிகாரியைப் பார்த்து மனு கொடுக்க வந்த ஏழை விவசாயிகளின் கெட்டப்பில் வெளியே காத்திருந்தனர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதியும் ஓர் இன்ஸ்பெக்டரும்.செல்வகுமாரிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற ஆறாயிரம் ரூபாயில் ஆயிரத்து ஐநூறை, தனது அலுவலக உதவியாளரான ஆனந்தசேகருக்குக் கொடுத்திருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார். லஞ்சப் பணம் பாக்கெட்டிற்குப் போவதற்குள் வெளியே விவசாயி கெட்டப்பில் இருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து ஜவஹர் சாந்தகுமாரின் அலுவலகம் முழுக்க ரெய்டு நடத்திய அதிகாரிகள், கரூரில் அவர் தங்கியிருந்த அரசு வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இந்த ரெய்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை, பணம், சொத்து ஆவணங்களோடு விதவிதமான வெளிநாட்டு மதுவகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.


இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, கதை கதையாகச் சொல்லி அதிர வைத்தார் அவர்.``லஞ்சம் வாங்குவதிலும் இதைப் பாதுகாப்பதிலும் வல்லவர் இவர் என்பது, இவரைப் பற்றி நாங்கள் விசாரிக்கத் தொடங்கியபோதே தெரிந்து கொண்டோம். தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்கி வந்த இவர், ஆளுங்கட்சிப் பிரமுகர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. காரியம் சாதித்துக் கொண்ட மற்றவர்களைவிட, இவரை சிக்க வைக்க தருணம் பார்த்துக் காத்திருந்ததே அவர்கள்தான். ஆனால், சின்னத் தொகையில் சிறுபிள்ளைத்தனமாக சிக்கிக் கொண்டார் சாந்தகுமார்.ஏற்கெனவே திருவள்ளூரில் ஆர்.டி.ஓ.வாக இருந்த காலத்தில் லஞ்ச வழக்கில் மாட்டிக் கொண்ட இவர்மீது, வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. போதிய ஆதாரம் இல்லை எனக் காரணங்காட்டி, அந்தத் தீர்ப்பு தனக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில், ஓரிரு மாதங்களில் தனக்கு கலெக்டராக பதவி உயர்வு கிடைத்துவிடும் என தனது நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறார்.அதே போல கரூர் - அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக சாலையின் இருபுறங்களிலும் நில ஆர்ஜிதம் செய்த வகையில் குறிப்பிட்ட அந்த நில உரிமையாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள் வருவாய்த்துறையினர். அதற்காக ஒதுக்கப்பட்ட இருபது கோடி ரூபாய்க்கான 600 காசோலைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல், கடந்த சில மாதங்களாக தனது பாதுகாப்பிலேயே வைத்திருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார்.


தங்கள் நிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பத்து சதவிகிதத்தை கமிஷனாகப் பெற்றுக்கொண்டு சிலருக்கு மட்டுமே காசோலைகளை வழங்கியிருக்கிறார். மீதமுள்ள காசோலைகளை நாங்கள் கைப்பற்றி அத்துறை தாசில்தாரிடம் ஒப்படைத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கச் சொல்லியிருக்கிறோம். அவரது வீட்டில் இருந்து இருநூறு பவுனுக்கு மேற்பட்ட நகைகள், நாலு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பத்திரங்கள், விதவிதமான வெளிநாட்டு மது பாட்டில்கள், மூட்டை மூட்டையான தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் என ஏறத்தாழ ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன!'' என்றார் அவர்.


இது ஒருபுறமிருக்க, அரசு அதிகாரிகள் சிலரும் அவரோடு நெருங்கிப் பழகும் சிலரும் அவரைப் பற்றி காமக் கதைகள் சொல்லியும் அதிரவைக்கிறார்கள்.``ஐம்பத்தைந்து வயதைத் தாண்டிய இந்த அதிகாரி, எப்போதுமே முப்பது வயது வாலிபருக்குண்டான மிடுக்குடனும் தோற்றத்துடனும்தான் இருப்பார். மாலை மயங்கினால் மதுவோடும் மாதுவோடும் மயக்கத்தில்தான் இருப்பார். இவர் தனது குடும்பத்தைச் சென்னையில் வைத்துவிட்டு, தான் மட்டும் இங்கே தனியாக இருப்பதால் இவரது `ஆட்டங்கள்' எல்லாவற்றுக்கும் வசதியாகப் போய்விட்டது.


ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவரை இவர் தனது இன்பச் சுரங்கமாகவே வைத்திருந்தார். பல குடும்பப் பெண்களைக் கூட காரியம் சாதித்துக் கொள்ள இவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட சில ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து இவரது காமப்பசிக்கு தீனிபோட தினமும் இளம் பெண்களை சப்ளை செய்திருக்கிறார்கள் சில உரிமையாளர்கள். அதே போல நில புரோக்கர்கள் சிலர் இவருக்கு பலவித புரோக்கர்களாகவும் செயல்பட்டிருக்கிறார்கள்!'' என்கிறார்கள் அவர்கள்.


பணிக் காலம் முழுக்க கைநிறையச் சம்பளம், ஓய்வுக்குப் பிறகு அதில் பாதி, பணிக் காலத்தில் இறந்தால் வாரிசுக்கு வேலை, பிராவிடண்ட் ஃபண்ட் என லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும், ஏழைகளின் வயிற்றில் அடிப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் எத்தனையோ அதிகாரிகளில் ஒருவர்தான் இப்போது மாட்டியிருக்கிறார். மற்றவர்களும் மாட்டும் நாள் எப்போதோ, அப்போதுதான் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.


Thanks to Kumudam Reporter.

No comments: