Tuesday, August 28, 2012

லண்டன் பி.பி.ஸியில் தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்.



உலகப் புகழ் பெற்ற ஊடகமான பி.பி.ஸி. யின் தமிழ் பிரிவில், நெடுங்காலமாகவே "தமிழோசை" என்ற பெயரில் தமிழ் வானொலி ஒலிபரப்பப்பட்டு வருவது நாமெல்லாம் அறிந்ததே. அதில் கடந்த நான்கு வாரகாலமாக "தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்" ஒலிபரப்பாகி வருகிறது. தமிழக முஸ்லிம்களின் சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து பதியப்பட்ட கருத்துக்களை, பி.பி.ஸி.யின் தமிழக நிருபர் கோபாலன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட முஸ்லிம் அன்பர்களை சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டியும், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கருத்துக்களும்
இடம் பெற்று வருகிறது.

இன்றைய இந்தியச் சூழ்நிலைகளில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் துல்லியமாக எடுத்துரைத்த நிலையில் மத்தியரசு அவ்விரு நீதிபதிகளின் பரிந்துரைகளின் மேல் என்ன நடவடிக்கை எடுத்தது?

மதசார்பற்ற இந்திய அரசின், அரசியல் சாசன அமைப்பு சட்டம் முஸ்லிம்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியிருந்தாலும் யதார்த்த நிலையில், உரிமைகளுக்கு போராடும் பரிதாப சமூகமாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அல்லது இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி பதவியோ அல்லது துணை ஜனாதிபதி பதவியோ அல்லது இது போன்ற அதிகாரமற்ற அலங்கார பதவிகளில் முஸ்லிம்களை அமர்த்தி விட்டு அவர்களின் ஓட்டுக்களை வேட்டையாடும் அரசியல் நடந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய இடம் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு வைக்கப்படும் போது, கவனமாக முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவிகள் சுட்டிக்காட்டப்பட்டு அந்த வாதத்தை முறியடிக்கும் செயல் நடைபெறுகிறது.

வறுமைக்கு வாக்கப்பட்டவர்களாக இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என்றால், அசிம் பிரேம்ஜி என்ற பணக்காரரை கை காட்டுகிறார்கள். அவர் முசல்மானா இல்லையா என்பதே பலருக்கு தெரியாது. முஸ்லிம்களுக்கு எவ்வித உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு விட கூடாது என்றே ஒரு வகுப்புவாத கூட்டம் தொடை தட்டி தடையாக இருக்கிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பிரபல ஆலிம் பி.ஜெயினுல் ஆபிதீன், மனித நேய மக்கள் கட்சியின் முனைவர்.ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் பாக்கர், முஸ்லிம் லீக்கின் பாத்திமா முசாபர் போன்றோர்களும் தங்களது கருத்துகளை சொல்லி வருகின்றனர். பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமான்ய முஸ்லிம்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகி வருகிறது.


கீழேயுள்ள சுட்டியில் சுட்டுங்கள்.




No comments: