Monday, October 11, 2010

உரிமை பறிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் மவுனம்.??

அயோத்தி தீர்ப்பு: அச்சத்தின் பிடியில் இந்திய முஸ்லிம்கள்

1992 டிசம்பர் 6 அன்று,அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்து தகர்த்தார்கள் இந்துத்துவ சக்திகள்.

450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளத்தை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த மண்ணின் உயரிய மாண்பை, சில ஆயிரம் பேர் திரண்டு சில மணி நேரங்களில் சூறையாடினார்கள் .

அந்தப் பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்ட அந்த நாளில் உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நின்றது.

இந்துத்துவப் பயங்கரவாதிகளால் அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானம் இன்று இந்திய நீதித்துறையால் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது .

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்திய முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை கேள்விக்குறியானது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்களாலும், இனப்படுகொலைகளாலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியானது .

வழிபாட்டு உரிமையும்,வாழ்வுரிமையும் கேள்விக்குறியானபோதும், அவ நம்பிக்கை அடையாமல், இந்தியாவின் மாண்பைக் காக்கும் உயரிய இடத்திலுள்ள நீதிமன்றங்கள் தமக்கு நீதி வழங்கும் என்று, 17 ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
தமது இழப்புகளையும்,வேதனைகளையும்,வலிகளையும் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.

'சட்டத்தையும் மதிக்க மாட்டோம்; நீதிமன்றத்தையும் மதிக்க மாட்டோம்' என்றெல்லாம் இந்துத்துவ சக்திகள் கொக்கரித்த போதும்,சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று முஸ்லிம்கள் அமைதி காத்தனர் ...

அரசியல்வாதிகளை நம்பி,காவல்துறையை நம்பி,ராணுவத்தை நம்பி,ஊடகத்தை நம்பி., என ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் அனைத்தையும் நம்பி நம்பி ஏமாந்து போன முஸ்லிம் சமூகத்தினர், நீதிமன்றம் தம்மை ஏமாற்றாது என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தனர் .

இந்நிலையில், 60 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபர் மசூதி வழக்கில் ,செப்டம்பர் 30 ஆம் நாள் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பாபர் மசூதி இடத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பாகத்தை இந்து மகா சபைக்கும், மற்றொரு பாகத்தை நிர்மோகி அகாரா என்னும் இந்து அறக் கட்டளைக்கும், மூன்றாவது பகுதியை முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர் .

பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்பதை சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் ,அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் ஆய்வு செய்து, சட்ட ரீதியான தீர்ப்பை நீதிமன்றம் தரும் என்று நம்பிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கைக்குத் தலைவணங்கி சட்டப் புறம்பான தீர்ப்பை அளித்துள்ளனர் நீதிபதிகள்.

நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்று முஸ்லிம்கள் சொல்லிவந்தது உண்மை.
ஆனால் அந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே தவிர நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலோ அல்லது இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலோ அமையக் கூடாது.

ஆனால் அலகாபாத் நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு முழக்க முழுக்க சட்டத்திற்குப் புறம்பான வகையிலும்,நீதிக்கு சமாதி கட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்கு உரியதா அல்லது இந்துக்களுக்கு உரியதா என்ற கேள்விக்கு விடையைத் தேடி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம்,சட்ட ரீதியான அம்சங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, தனக்குத் தேவையில்லாத விசயங்களிலெல்லாம் மூக்கை நுழைத்து, மேலும் பல பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.

ராமர் எங்கே பிறந்தார் என்பதோ,அவருக்கு யார் பிரசவம் பார்த்தார் என்பதோ,அவர் அயோத்தியில் கோயில் கட்டினாரா இல்லையா என்பதோ,பாபர் அந்தக் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டினாரா என்பதோ அல்ல நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி. பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு உரியது என்பதைச் சொல்வது மட்டுமே நீதி மன்றத்தின் வேலை.ஆனால்,அந்த வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் இந்த வழக்கில் நீதிமன்றம் செய்துள்ளது. அதையாவது ஒழுங்காக செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். இங்கே அலகாபாத் நீதிபதிகளின் பொய் இப்போது சந்தி சிரிக்கிறது.

உலகத்தின் எல்லா நாடுகளிலும் இது போன்ற இடப் பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. உலக நீதிமன்றங்கள் அனைத்திலும் இடப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன.அறியாமைக் காலத்திலிருந்து இன்றைய தொழில் நுட்பக்காலம் வரை,உலகின் எந்த நீதி மன்றமும் ஒரு இடப்பிரச்சனையை இப்படிக் கேவலமாகக் கையாண்டதில்லை. சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்ததில்லை.வரலாற்று ஆதாரங்களையும்,வழக்கு ஆவணங்களையும் குப்பைக் கூடைக்குத் தள்ளிவிட்டு புராணங்களின் அடிப்படையில் தீர்வு சொன்னதில்லை.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக நீதித்துறை வரலாற்றிலேயே மிகவும் விசித்திரமானதொரு தீர்ப்பு.
இந்த தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையைப் பார்த்து உலக மக்கள் காறி உமிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தின் மீது எளிய மக்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது.


இனி இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும், இடப்பிரச்சனைகள் தொடர்பான எல்லா வழக்குகளும் இதே அளவுகோலின் அடிப்படையில் அனுகப்படுமா என்றக் கேள்விக்கு விடையில்லை.

யாருடைய இடத்திற்கும் யார் வேண்டுமானாலும் நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரலாம் என்றும், அவ்வாறு உரிமை கோரி வழக்குப் போடுகின்ற ஒவ்வொருவருக்கும் இடம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் சொல்லாமல் சொல்லியுள்ளது அலகாபாத் நீதிமன்றம்.

பாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்லத்தெரிந்த மெத்தப் படித்த நீதிபதிகளுக்கு,
ராமர் எப்போது பிறந்தார் என்று சொல்லத் தெரியவில்லை .

ராமர் கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பு எழுதத் தெரிந்த நீதிபதிக்கு,
பாபர் எப்போது கோயிலை இடித்தார் என்று சொல்லத் தெரியவில்லை.

பாபர் மசூதி இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் அகழ்வாய்வின் மூலம் கிடைத்திருக்கிறது என்று அறிவிப்புச் செய்த நீதிபதியால்,
அது எந்தக் கோயில் என்பதை நிறுவ முடியவில்லை. அந்தக் கோயில் இடிக்கப்பட்ட காலமும்,பாபர் மசூதியைக் கட்டிய காலமும் ஒரே காலமா என்பதை நிரூபிக்க இயலவில்லை.

அது ராமர் கோயிலாக மட்டும் தான் இருந்திருக்க வேண்டுமா? ஏன் சமணக் கோயிலாகவோ, புத்த விகாரமாகவோ இருந்திருக்கக் கூடாதா?
என்றெல்லாம் எழும்புகின்ற எந்தக் கேள்விக்கும் விடை இல்லை.

கோயில் இருந்ததற்கான ஆதாரம் மட்டுமா கிடைத்தது, கூடவே ஆடு மாடுகளின் எலும்புகளும் கிடைத்ததே..அப்படியெனில் அங்கே கூடாரம் போட்டு மாட்டுக்கறி பக்கோடாவும், ஆட்டுக்கறி பிரியாணியும் உண்டது யார்? என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தவே இல்லை.

பாபர் மசூதி இடத்தில் அகழ்வாய்வு செய்த தொல்லியல்துறையின் அறிக்கை நம்பகத் தன்மையற்றது என்றும், பாசக மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இந்துத்துவ சார்புள்ள ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப் பட்சமான ஆய்வு அது என்றும், வரலாற்று ஆசிரியர்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதைப் பற்றி இந்தக் கேடு கெட்ட நீதிபதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இன்றைய வரலாற்று ஆசிரியர்களின் குரலைத்தான் இவர்கள் காதில் வாங்கவில்லை; ராமாயணத்தை எழுதிய துளசிதாசரையாவது கவனித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

ராமாயணத்தை இந்தியில் எழுதிய துளசிதாசர், தமது 'ஸ்ரீராம சரித் மானஸ்' எனும் காவியத்தில் ஒரு இடத்தில் கூட 'ராமர்கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்று கூறவே இல்லை.துளசிதாசர் பாபர் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர் என்பதும், ராமர் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாபரின் ஆட்சிக்காலத்தின் போது வாழ்ந்தவரான சீக்கிய மத நிறுவனர் குருநானக், பாபரை கடுமையாக விமர்சிப்பவராக இருந்துள்ளார்.
அத்தகைய விமர்சகரான அவர் கூட எந்தவொரு இடத்திலும் 'பாபர், கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டியவர்' என்று குறிப்பிடவே இல்லை.

விருப்பு வெறுப்புக்கு இடமளிக்காமல், ஒளிவு மறைவின்றி, பாபரால் வெளிப்படையாக எழுதப்பட்ட 'பாபர் நாமா' என்ற அவரது சுய சரிதையில் ஒரு இடத்தில் கூட ராமர்கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாம் மசூதி கட்டியதாக அவர் குறிப்பிடவே இல்லை.

கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டும் அளவுக்கு கீழ்த்தரமான சிந்தனையும், குரோத எண்ணமும் கொண்டவரல்ல பாபர் என்பது அவரது வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

அயோத்தியில் உள்ள இந்துக் கோயில்களான அனுமான் கிரி,தாண்ட் தவான் குன்ட், ஜன்மஸ்தான், நாகேஸ்வர்நாத் மற்றும் சித்திகிரி மடம்
ஆகியவற்றுக்கு பாபர் தானம் வழங்கி உள்ளார். அவ்வாறு அவர் தானம் வழங்க உத்தரவிட்ட ஆவணங்களை இன்று வரை இக்கோவில்கள் நன்றியுணர்வுடன் பாதுகாத்து வைத்துள்ளன.

பாபர் தமது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் சமய சார்பின்மைக்கும், மத சகிப்புத் தன்மைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அதில் பாபர் கூறுகிறார்;

''உனது குடிமக்கள் குறித்த எல்லா வகையான தப்பான எண்ணங்களையும் உன் மனதில் இருந்து அகற்றி விடு.
நீதி தவறாத ஆட்சியை உன் மக்களுக்கு அளித்து வா.
உனது குடிமக்கள் மனதை ஈர்ப்பதற்காக மாட்டிறைச்சி உண்பதைக் கைவிடு.
இவ்வாறு நீ செய்தால் குடிமக்கள் உனக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.
பிற மக்களின் வணக்கத்தலங்களை ஒருபோதும் இடித்து விடாதே.
மக்கள் அரசரை நேசிக்கும் வகையிலும், அரசர் மக்களை நேசிக்கும் வகையிலும் நீதி நேர்மையுடன் ஆட்சி செய்''

பாபர் எழுதிய இந்த உயில் இன்று வரையிலும் டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.

இரவு பகலாக ஆய்வு செய்து, கடும் உழைப்புக்குப் பின் தீர்ப்பு எழுதியதாக சவடால் அடிக்கும் நீதிபதிகளின் கண்களுக்கு பாபரின் இந்த உயில் மட்டும் தென்படாமல் போனது எப்படி என்பது தெரியவில்லை.

ஆக, எந்தவித வரலாற்றுப் பார்வையும் இன்றி, வழக்கு ஆதாரங்களின் அடிப்படை இன்றி வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கேவலமானத் தீர்ப்பை காங்கிரசு கட்சி வரவேற்றுள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைச் சிறுத்தைகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் இந்தத் தீர்ப்பால் திருப்தி அடைந்துள்ளன. பாசகவும் இந்துத்துவ சக்திகளும் ஆரவாரத்தால் குதூகலிக்கின்றனர்.

எல்லோராலும் ஏமாற்றப்பட்ட நிலையில், அச்சத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது முஸ்லிம் சமூகம்.

பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் மீண்டும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையத்தால் அடையாளப் படுத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் மீது இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் மசூதி இடத்தையும் கபளீகரம் செய்து இந்துத்துவ சக்திகளிடம் ஒப்படைக்க நீதிமன்றமே முன்வந்திருப்பது இந்திய முஸ்லிம்களை அவநம்பிக்கையில் ஆழ்த்தியிருக்கிறது.

''எங்கே உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லையோ.,அங்கே தீவிரவாதம் பிறந்தே தீரும்'' என்று, திரை உலகத்தினரின் ஈழ ஆதரவுப் போராட்டத்தின் போது முழங்கினார் கமலஹாசன்.

இப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகி இருக்கிறது...
இனி இங்கு எது பிறக்கும் என்பதை காலம் சொல்லும்.

அன்பும்,அமைதியும்,நல்லிணக்கமும் பிறக்க வேண்டுமெனில்
மசூதியைத் திரும்பக் கட்டும் கரசேவையை காங்கிரசு செய்யட்டும்.


[தமிழ் மண் இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]


அயோத்தி தீர்ப்பும் இந்திய மதசார்பின்மையும்.. ஒரு காரசார விவாதம்!

4 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் அழகாக ஒன்றுதிரட்டி ஒரே பதிவில் தருவது என்பது எவ்வளவு சிரமமான காரியம்..! முனைப்புடன் செய்திருக்கிறீர்கள். நன்றி.

இவ்விவகாரத்தில், நான் அறிந்த ஒரு சில விடுபட்ட விஷயங்களை பின்னூட்டத்தில் இணைத்து அதனையும் இத்துடன் பதிய வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

வால்மீகி ராமாயணம் படி, முதலில் 'ராமர் பிறந்த அயோத்தி', நம் நாட்டில் உள்ள இந்த 'அயோத்தி'யே அல்லவாம்.

(அ)
வால்மீகி ராமாயணம் படி, 'அயோத்தி'யில் ராமர் திரேதா யுகத்தில் பிறந்தார்.

திரேதா யுகம் என்பது (12,96,000 ஆண்டுகள்) கொண்டது. அது முடிந்த பின்னர் துவாபர யுகம் தொடங்கி (8,64,000 ஆண்டுகள் நீடித்து) அது முடிந்த பின்னர் கலியுகம் நடந்து கொண்டுள்ளது.(4,32,000 ஆண்டுகள் கொண்ட இந்த கலியுகத்தில்தான் நாம் இருக்கிறோம்).

இந்த கலியுகம் கிருஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன்னால் பிறந்து விட்டது. இப்போது 2010- ம் ஆண்டில் நாம் இருக்கும்படியால், கலியுகம் தொடங்கி 5112 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆக, திரேதா யுகத்தின் கட்டக்கடைசியில் இராமர் பிறந்திருப்பார் என்று அனுமானம் கொண்டாலும், (துவாபரயுகம் + கலியுகம் அதாவது ) 8,64,000 + 5,112 = 8,69,112 வருடங்களுக்கு முந்தியவர் ராமர்... என்றால்..., அயோத்தியும் அவ்வளவு வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால், 1976-77,மத்திய அரசின் தொல்பொருள்துறை இதற்காகவே அயோத்தியை பல வருடங்கள் ஆய்ந்து கடைசியாய், ஆய்வறிக்கையில் 'அயோத்தி தோன்றியது கி.மு 700-இல் தான்' என்று உறுதி பட சொல்லி விட்டனர்.

அதாவது 2710 வருடங்களுக்கு முந்தி அயோத்தி என்ற ஊரே இருந்திருக்க வில்லை.

இதை நம்பாத மத்திய அரசு, மீண்டும் சி.பி.லால், கே.என்.தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்களிடம் இந்த ஆய்வறிக்கையை மறு ஆய்வு செய்ய உத்தரவிட, அவர்களும் சில வருட மறு ஆய்வுக்குப்பிறகு, 'தொல்பொருள்துறை ஆய்வறிக்கை துல்லியமானதே' என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

ஆக, ராமர் பிறந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்படும் அயோத்தி... 'இந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்திய அயோத்தி கிடையாது' என்பதற்கு இந்த ஆதாரம் மட்டுமல்ல, அதே ராமாயணத்தில் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன.

அவை... (தொடரும்...)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

வால்மீகி ராமாயணத்தில் 'ராமர் பிறந்த அயோத்தி' என்ற ஊர் சரயு நதிக்கரையில் இருந்து ஒன்றரை யோஜன் (அதாவது... சுமார் 23கிலோ மீட்டர்) தூரத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சரயு என்ற பெயரில் ஒரு நதி ஓடினாலும் அது அயோத்திக்குள்ளாரேயே ஓடிக்கொண்டுள்ளது. அப்படியானால், நதிக்கரையில் இருந்து இரண்டு பக்கமும் 23 கிலோமீட்டர் தூரம் போய் பிரயாணித்தால் வேறு ஊரே இல்லை. ஊரை நோக்கி நதி நகராது (!?) என்பதால்... ஆண்டுகள் பலவாகி நதியை நோக்கி ஊர் மெல்ல மெல்ல நகர்ந்து விட்டது என்றாலும், ராமர் பிறந்த இடம்... பாபர் மசூதி அல்ல...!

அப்படியெல்லாம் இல்லை... நதிதான் ஊரை நோக்கி நகர்ந்து விட்டது என்று ஹிந்துத்துவாக்கள் ஒருவேளை வாதிட்டால்... அதுவும் தவறு என்று .... நான் கூற வில்லை... ராமாயணம் கூறுகிறது. எப்படி...?

(தொடரும்...)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அந்த 'ராமர் பிறந்த அயோத்தி'யில் ஓடும் சரயு நதியானது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி தன் ராமாயணத்தில் கூறுகிறார்.

ஆனால், நம் நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அயோத்தியில் ஓடும் சரயு நதி... கங்கையில் அல்ல.. மாறாக ராப்தி என்ற நதியில் கலக்கிறது.

ஆக... 'ராமாயண அயோத்தி' என்பது நம் நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அயோத்தி அல்ல என்று ஏற்கனவே பார்த்து விட்டோம். இப்போது இந்த 'ராமாயண சரயு நதி'யும், நம் அயோத்திக்குள்ளே ஓடுகின்ற சரயு நதி அல்ல என்று தெளிவாகிறது.

இதற்கு வலு சேர்க்கும் மேலும் ஒரு ஆதாரம் அதே ராமாயணத்தில் உள்ளதே...! அதென்னது?

வால்மீகி ராமாயணம் படி, 'ராமாயண சரயு நதி' கிழகக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கிறதாம். ஆனால், நம்ம நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட உபி-யில் உள்ள அயோத்தியில் ஓடுகின்ற சரயு நதி....

மேற்கிலிருந்து .... கிழக்கு ... நோக்கி... பாய்ந்து... கொண்டு ... உள்ளது. (!)

இதற்கு எல்லாம் ஆதாரம் வேண்டுமா என்ன? கூகுல் மேப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஆக... ராமர் பிறந்தது, நம்ம நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட உபி-யில் உள்ள சரயு நதிக்கரையிண் இரு மருங்கிலும் அமைந்து உள்ள அயோத்தி என்று சொன்னால்... அவர் ராமாயனத்துக்கு எதிரானவர்... அல்லது ராமருக்கு எதிரானவர்... அல்லது உண்மைக்கு எதிரானவர் என்றாகிறார். (அப்போ... அலஹாபாத் தீர்ப்பு...?)

ஆனால், இராமாயணம் பொய் கூற வில்லை என்று ஷேர்சிங் என்ற ஆய்வாளர் உண்மையை கண்டறிந்து விளக்கியுள்ளார். அது என்ன?

(தொடரும்...)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஆய்வாளர் ஷேர்சிங் ஆய்ந்து கூறிய அறிக்கை:

""நேப்பாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது.!

அதிலிருந்து இருபது கிமீ தொலைவில் ஒரு ஆறு ஓடுகிறது.!

அது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கிறது.!

பின்னர் அது கடைசியில் கங்கையில் சங்கமம் ஆகிறது.!

ராமாயணம் சொல்கிற அயோத்தி அதுதான்.""

ஆக...

"ராமர் பிறந்த இடம் நேப்பாளம்(!)"

என்று ராமாயணத்தில்...
திருவாளர்.வால்மீகி ஐயா சொல்கின்றார்.

அப்புறம், கிட்டத்தட்ட எட்டாயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 'தீர்ப்பில்', உச்ச நீதிமன்ற தடையை மீறி, பட்டப்பகலில், உலகமே நேரலையில் காண, ராணுவம், காவல்துறை முன்னிலையில் நடந்த காட்டுமிராண்டி செயலான மசூதி இடிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.

அதுமட்டுமா, நடுராத்திரியில்... பூட்டிய மசூதியின் கதவை உடைத்து மசூதியின் உள்ளே தொழுமிடத்தில் சிலைகளை வைத்த அராஜக அக்கிரமத்தை பற்றி ஒரு கண்டனமோ அது தவறென்றோ சொல்லப்படவில்லை.

பாபர் மசூதி பாபரால் எந்த நாள் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லையாமாம்..!!!???
மேலும், அது முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி ஒரு மசூதியே இல்லையாமாம்..!!!???

இதனாலெல்லாம் அந்த இடம் உரியவர்களுக்கு உடையாதாகிவிடாமல் போய்விடுமா? இவை எந்த சிவில் சட்டம் என்று தெரியவில்லை.