Monday, February 15, 2010

குஜராத் முஸ்லிம்களை சிறைப்படுத்த ஒரு சட்டம்!







பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவது என வரிந்து கட்டி முட்டி மோதுகிறது மோடி அரசு. ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற பெயரில் சிறுபான்மையின மக்களை குறி வைக்கும் மோடி அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட மத்திய அரசு, அதற்கு கடிவாளம் போட முயற்சிக்கிறது. ஆயினும் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது குஜராத்தின் மோடி அரசு.

2009 ஜூலை மாதம் 28ந் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவை குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மோடி அரசு அதனை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. அதன் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அது முயற்சித்தது.
இந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் அரசின் சட்ட மசோதவில் ஆட்சேபனை இருக்கிறது. அதனால் இந்தச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது.

இன்னொரு புறம், இந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள ஆட்சேபகரமான சட்டப் பிரிவுகளை குஜராத் அரசுக்கு சுட்டிக்காட்டி அந்த சட்டப்பிரிவுகளை நீக்கி புதிய மசோதா தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.

அது என்ன ஆட்சேபகரமான இரண்டு பிரிவுகள்?
முதலாவது, போலிஸ் அதிகாரியின் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்கு மூலத்தை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது என்பது.
அடுத்தது, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்யும் பட்சத்தில், அரசு வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபித்தால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பது!

இந்த இரு அமசங்களைத்தான் குஜராத் சட்ட மசோதாவிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு வலியுறுத்தியிருந்தது. எந்தச் சட்டப்பிரிவுகளுக்காக ஒட்டு மொத்த பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டதோ அந்த சட்டப் பிரிவுகளை மத்திய அரசு நீக்கச் சொல்கிறதே என அதிர்ச்சியடைந்த குஜராத் அரசு, அந்த இரண்டு பிரிவுகளையும் நீக்காமலே குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று விடத் துடியாகத் துடித்தது.

இதற்காக மத்திய அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற பொருந்தாக் காரணத்தைக் கூறி மீண்டும் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்தது குஜராத் அரசு. மஹாரஷ்டிராவில் தற்போது உள்ள அமைப்பு சார்ந்த குற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் போன்று தான் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் அதனால் இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வியாக்கியானமும் செய்தது தான் அந்தப் பொருந்தாக் காரணம்!

ஆனால் சளைக்காத மத்திய உள்துறை அமைச்சகமோ, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு, மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து சட்ட மசோதாவை பழைய வடிவிலேயே அனுப்பியுள்ளது. இதனால் இச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசுத் தலைவரை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

தடா,பொடா போன்ற பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் மனித உரிமை மீறலாக இருப்பதாகவும், இதனால் பயங்கரவாதம் ஒழியவில்லை என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த மத்திய மாநில அரசுகள் அத்தகைய கறுப்புச் சட்டங்களை காலாவதியாக்கி விட்டன.
ஆனால் நரேந்திர மோடி அரசோ, கறுப்புச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை மீண்டும் கருவறுக்கத் துடிக்கிறது. இந்தச் சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் முஸ்லிம்கள், அடுத்து என்ன நடக்குமோ என அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். 2002 குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது மோடி அரசின் காவல் துறையும், சட்டத் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், நீதிபதிகள் சிலரும் கூட முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதை டெஹல்கா வார இதழ் வாக்கு மூலங்களாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், போலிஸ் அதிகாரி முன்பு தரப்படும் வாக்குமூலத்தை அப்படியே ஏற்க வேண்டும், அரசு வழக்கறிஞர் ஆட்சேபித்தால் ஜாமீன் வழங்கக் கூடாது என்பது போன்ற சட்டப் பிரிவுகளை இந்தச் சட்ட மசோதாவில் சேர்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் மோடி அரசின் உள்நோக்கம் எதைக் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் விளங்கும்.

குஜராத் அரசின் பயங்கரவாத தடுப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியிருப்பதை தேச அமைதியை விரும்புவர்கள், சமூக அக்கறையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்கின்றனர்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றன பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவா கட்சிகள்.
லிபரஹான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அறிக்கையில் சில பகுதிகள் பத்திரிகைகளில் கசிந்துவிட்ட விஷயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பிஜேபியினர் எம்பிக் குதித்தார்கள்.இவற்றையெல்லாம் குஜராத் அரசின் பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவோடு முடிச்சுப் போட்டுப் பார்த்தால் பிஜேபியின் சூட்சுமம் புரிகிறது.

ப.சிதம்பரத்திற்கு பதிலாக வேறொருவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் இந்த சட்ட மசோதாவிற்கான ஒப்புதலை குஜராத் அரசு நிச்சயம் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட தலைவர்கள் மிகைத்தே இருக்கிறார்கள்.

இதை நாம் சொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் மோகன் பகவத் சொல்கிறார்.

மூலம்: மக்கள் ரிப்போர்ட்

No comments: