Sunday, April 19, 2009

இளமைக்கு ஏங்கும் இந்திய அரசியல்..!


இந்தியாவில் ஓய்வூதியத்துக்கான வயதையே அடையாத ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள் எனில் அவர்கள் அரசியல்வாதிகள்தாம். ஐம்பது வயதைக் கடந்தவர்கள் கூட இளைஞர் அணித் தலைவராக வலம் வரும் அதிசயம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கும்.


வாக்காளர்களில் 25 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் இளைஞர்கள்தாம் எனினும் அவர்களை ஆட்சி செய்பவர்கள் 80 வயதை கடந்தவர்கள். பட்டறிவும் பக்குவமும் நிறைந்த ஒரு ஆட்சி அமைய வேண்டுமெனில் முதியவர்கள் இல்லாமல் முடியுமா எனும் கேள்வியின் அடிப்படையில் இதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.


விரல் விட்டு எண்ணக்கூடிய சில இளம் தலைவர்களைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் அடுத்த தேர்தலுக்குப் பிறகு வரக்கூடிய மக்கள் நாயகர்களில் பெரும்பாலோர் முதியவர்களே..! விரைவில் ஓய்வு பெரும் எண்ணம் எதுவும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.


பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராய் தேர்தெடுக்கப்பட்ட போது அவருக்கு வயது 46. டோனி பிளேர் முதன் முறையாக இங்கிலாந்தின் பிரதமராய் பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவருக்கு வயது 43 தான்.


மாற்றத்துக்கான வாக்குறுதி அளித்து அமெரிக்க மக்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டுள்ள பாரக் ஹுசைன் ஒபாமாவின் வயது 47. ஆனால் இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கின்ற இளைஞர்களின் விருப்பங்களையும் வளர்ச்சிக் கனவுகளையும் நிறைவேற்றப் போகின்றவர்கள் 70 வயதைக் கடந்த முதியவர்கள்.
72 வயதான ஜான் மெக்கெய்னைப் புறந்தள்ளி விட்டு ஓர் இளமைத் துடிப்புள்ள தலைவரைத் தேர்தெடுக்கும் வாய்ப்பு அமெரிக்க மக்களுக்கு இருந்தது. ஆனால் பாவம், இந்திய வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை.


நம் நாட்டில் அரசியல் தலைவர்களில் 80 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் 70 வயதைக் கடந்தவர்கள். ஆனால் இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் 40 வயது குறைவானவர்கள்.


பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 76 வயது. குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு 74. துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரிக்கும் அதே வயது தான். 84 வயதான கருணாநிதி தான் தமிழகத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். கேரள முதல்வர் அச்சுதானந்தனின் வயது 85.


மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் சராசரி வயது 66.9. உலகின் எந்த ஓர் இடத்திலும் இப்படி ஒரு வயோதிக ஆட்சி நடைமுறையில் இல்லை. காபினெட் அமைச்சர்களில் 12 பேர் எழுபதைக் கடந்தவர்கள். ஏழு பேர் 65 வயதைத் தாண்டியவர்கள். ஐம்பது வயதாகும் அமைச்சர்கள் மூன்றே பேர்கள் தானாம். 40 வயதான அன்புமணி ராமதாஸ் தான் அமைச்சரவையிலேயே "இளையவர்". மற்றோர் இளம் அமைச்சர் ஏ.ராஜா. வயது 45.


வயதான தலைமை என்பதில் கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. தேசிய ஜன நாயக கூட்டணியின் பிரதம வேட்பாளரான அத்வானி 81 வயதை எட்டிப்பிடித்து விட்டார்.


ஏராளமான உடல் நலப்பிரச்சனைகளுடனும், முதுமையின் பலவீனங்களுடனும் மனித வள மேம்பாட்டுத் துறையை நிர்வகித்து வருபவர் 78 வயதான அர்ஜுன் சிங். ஏதோ இப்போது தான் அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் போல களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான 68 வயது சரத் பவார்.


மக்களவையின் 'தலைமை ஆசிரியர்' சோம்நாத் சட்டர்ஜி 79 வயதைக் கடந்து கொண்டிருக்கிறார்.


2014‍இல் பிரதமர் நாற்காலியில் அமரும் கனவுகளுடன் காத்திருக்கும் லாலு பிர்சாத் யாதவுக்கு வயது 60.


மேற்கு வங்கத்தில் 86 ஆம் வயதில் ஓய்வு பெற்ற ஜோதிபாசுவின் அரசியல் வாரிசான புத்ததேவ் பட்டாச்சாரியாவும் தம் குருவின் பாதையைத் தான் பின்பற்றிக்கொண்டிருக்கிறார். புத்ததேவுக்கு வயது 64.


94 வயதான ஜோதிபாசு தான் இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்.


71 வயதான யஷ்வந்த் சின்ஹா, 70 வயதான ஜஸ்வந்த் சிங், 74 வயதைக் கடந்து விட்ட டாக்டர். முரளி மனோகர் ஜோஷி முதலிய கிழட்டு கதாநாயகர்கள் தாம் தேசிய ஜன நாயக கூட்டணியின் பிரமுகர்கள்.
78 வயதான முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடல் நலமில்லாமல் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ஆனாலும் தேர்தலில் நிற்க தயார் என்கிறார்.


ராஜ்நாத் சிங், சுஷ்மா சிவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் 56 வயதைக் கடந்தவர்கள்.


முதுமை அடைந்து விட்டாலும் நல்ல உடல் நலத்துடன் காணப்படும் முலாயம் சிங் யாதவுக்கு 69 வயதாகிறது. உ.பி. யில் ஓரளவு இளமையான அரசியல் தலைவர் யார் என்று பார்த்தால் மாயாவதி, அமர்சிங் ஆகிய இருவர் மட்டுமே தேறுகிறார்கள்.

இந்தியாவில் இளம் வயதில் பிரதமர் ஆனவர் ராஜிவ் காந்தி. 1984 ல் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த போது அவருக்கு வயது நாற்பதே தான். இந்திரா காந்தி தமது 49 ம் வயதில் பிரதமர் ஆனார்.


மிகவும் வயது முதிர்ந்த பிரதமர் மொரார்ஜி தேசாய். அவர் பிரதமர் ஆகும் போது வயது 81. இன்றைக்கு அத்வானிக்கும் அதே வயது தான்.


ஐ.கே. குஜ்ரால் 78 வயதிலும் கரண்சிங் 77 வயதிலும் பிரதமர் ஆனார்கள்.முதல் தடவை பிரதமர் ஆன போது வாஜ்பாய்க்கு 72 வயது.


இந்தியப் பிரதமர்களின் சராசரி வயது 65.2. அதே சமயம் 1945 குப் பிறகு வந்த அமெரிக்க அதிபர்களின் சராசரி வயது 57.27.பிரிட்டீஷ் பிரதமர்களின் சராசரி வயது 58.16.


ராகுல் காந்தி, சச்சின் பைலட், வருண் காந்தி,மிலிந்த் தேவ்ரா, ஜோதி ராதித்யா சின்டியா, போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அரசியல் துடிப்புடன் இருந்தாலும் அவர்கள் முன்னணிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. நேரு குடும்பம் என்பதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


சுருக்கமாக சொன்னால்.. இந்திய அரசியலில் முதுமை கொடிக்கட்டிப் பறக்கிறது.
நன்றி: சமரசம்

No comments: