Thursday, September 20, 2012

பாவிகளின் சூழ்ச்சிக்கு பலியான அப்பாவி முஸ்லிம்கள்!!

யாருடைய கவனித்திற்கும் வராமல் குப்பைக்கு போயிருக்க வேண்டிய ஒரு ஆபாசமும் வக்கிரமும் கொண்ட ஒரு படத்திற்கு உலகலாவிய முஸ்லிம் சமூகம் விளம்பரம் கொடுத்து விட்டது. முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை வன்முறையாளர்களாக காட்ட முயன்றவர்களுக்கு முஸ்லிம்களே வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் முஸ்லிம்கள் அப்பாவிகளே. ஏனெனில் எதிரிகளின் சூழ்ச்சியறியாமல் தங்களின் மித மிஞ்சிய உணர்ச்சி மேலிட்டால் தாங்களே பலியாகி விட்டார்கள். நன்மையைக் கொண்டல்லவா தீமையை தடுத்திருக்க வேண்டும்.

மத சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் உரசி பற்றிக்கொண்ட இந்தப் பிரச்சினைப் பற்றியும் தமிழக தலைநகரில் நடந்த முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் பற்றியும் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் "நேர்பட பேசு" நிகழ்ச்சியின் விடியொ.

இதில் "மானுட வசந்தம்" புகழ் ஹபிப் முகம்மது, பத்திரிகையாளர் ஞாநி, பேராசிறியர் கிளாட்சன் ஆகியோர் இப்பிரச்சினை குறித்த தங்களது கருத்துக்களை முன் வைக்கின்றனர்.







உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.
தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் வெளியான "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஆரம்பித்து சில இடங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள அண்ணா சாலையில் நான்கு நாள்களாக, சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தொல்லைக்குள்ளாயினர். படத்தைத் தயாரித்தவர்கள் "இது எங்களின் கருத்துச் சுதந்திரம், எங்கள் உரிமை' என்கிறார்கள். எதிர்ப்பாளர்களோ "எதிர்ப்பது எங்களின் உரிமை' என்கிறார்கள். இது பற்றிய விவாதங்களை அலசும் முன் இந்தத் திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.
"இந்தப் படம் முஹம்மது நபியை முட்டாளாகவும் பெண் பித்தராகவும் மோசடிக்காரராகவும் சித்திரிப்பதாக' "ராய்ட்டர்' செய்தி நிறுவனம் கூறுகிறது.
"இப்படம் எல்லை மீறியது; வெறுப்பைத் தூண்டும் அருவருப்பான பழிவாங்கும் எண்ணமுடைய ஒரு குப்பையாகும்' என்கிறார் சல்மான் ருஷ்தி.
"இப்படம் முஹம்மது நபியைப் பெண் பித்தர், ஒருபால் உறவினர், குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர் என்ற வகையில் சித்திரிக்கிறது' என்கிறது என்பிசி செய்தி நிறுவனம்.
அத்தோடு, எகிப்தில் முஸ்லிம்கள் கிறித்தவர்களைத் தாக்குவதாகவும், அவர்களின் வீடுகளை எரிப்பதாகவும் அதை எகிப்திய காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதை எழுதித் தயாரித்தவர் நக்கோவ்லா பாஸ்லி நக்கோவ்லா என்ற காப்டிக் கிறித்தவர். இவர் அமெரிக்காவில் குடியேறி வாழும் எகிப்திய கிறித்தவர் ஆவார். முதலில் தனது பெயரை சாம் பாஸ்லி என்றும், யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும், யூதர்கள் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கப் பணம் கொடுத்தனர் என்றும் அவர் சொல்லிவந்தது பொய் என்பதும் வெளியாகியுள்ளது.
இவர் 1990இல் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். அத்தோடு வங்கியை ஏமாற்றிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டவர். இவரோடு சேர்ந்து எகிப்து, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 காப்டிக் கிறித்தவர்களும் எவான்ஜலிகல் கிறித்தவர்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத் தயாரிப்புக் குழுவில் அமெரிக்காவில் திருக்குர்ஆனை எரித்துப் பதற்றம் உண்டாக்கிய டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் அடங்குவர்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு "டெசர்ட் வாரியர்' - பாலைவன மாவீரன் என்று பெயரிட்டனர். பின்னர் அதை "இன்னோசன்ஸ் ஆப் பின்லாடன்' என்று மாற்றினர். இறுதியில் "இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்) என்று பெயர் சூட்டினர். 2012 ஜூலையில் இதை யூ டியூபில் ஏற்றினர்.
இது அதிக மக்களின் கவனத்தைப் பெறாமல் போகவே மாரிஸ் சேதக் எனும் எகிப்திய காப்டிக் கிறித்தவர் இதனை அரபியில் மொழிமாற்றம் செய்து 2012 செப்டம்பரில் யூ டியூபில் ஏற்றினார். இந்தப் படத்தை செப்டம்பர் 12இல் எகிப்தில் உள்ள "அல் நாஸ்' என்ற இஸ்லாமியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பின்னரே விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்களில் 80 சதவீதத்தினர் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கின்றனர். முஹம்மது நபி பற்றி படம் எடுப்பதாகத் தங்களிடம் சொல்லப்படவில்லை என்கின்றனர். இந்தப் படத்தின் முக்கிய நடிகரான கிளின்டி லீ ரோசியா என்பவர் தாம் ஏமாற்றப்பட்டதாக படத் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் வாழ்க்கை முறை பற்றிய படம் என்றும், அந்தப் படத்தின் பெயர் "டெசர்ட் வாரியர்' என்று தம்மிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பாத்திரத்தின் பெயர் "மாஸ்டர் ஜார்ஜ்' என்றுதான் வைக்கப்பட்டதாகவும் அவர் சொல்கிறார்.
லில்லி டயோனா என்ற இன்னொரு நடிகையும் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். தாங்கள் பேசிய வசனங்களை வேறுவிதமாக மாற்றி "டப்பிங்' செய்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை ஆர்த்தடக்ஸ் கிறிஸ்டியன் கவுன்சிலும், உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும் (வேர்ல்டு கவுன்சில் ஆப் சர்ச்) கண்டனம் செய்துள்ளன. இந்தப் படம் முஸ்லிம்களின் இதயங்களையும் இறை நம்பிக்கையாளர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாகவும் அந்தக் கிறித்தவ அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இப்போது சில நாடுகளின் இணையதளங்களிலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் ஒரு மதத்தை அல்லது சித்தாந்தத்தை விமர்சனம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். முஸ்லிம் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு வக்கிர உணர்வு தெளிவாகத் தெரிகிறது.
பல நூற்றாண்டுகளாகவே மேலை நாட்டினர் இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் எழுதிக்குவித்துள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வெறுப்பு நூல்களே சான்றாகும். அந்த நீண்டகால வெறுப்புதான் இதுபோன்ற திரைப்படங்களும் கார்ட்டூன்களும் வருவதற்குக் காரணம் ஆகும்.
அத்தோடு எகிப்தில் நடைபெற்ற முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம்களுக்கும் காப்டிக் கிறித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒற்றுமையை உடைப்பதும் ஒரு நோக்கமாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவிவிரும் இஸ்லாத்தைப் பற்றி அங்குள்ள மக்களிடையே ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதும் அவர்களின் எண்ணமாகும்.
அத்தோடு முஸ்லிம்களைச் சீண்டிவிட்டு அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கி அதன் மூலம் அவர்களை நாகரிமற்றவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாவும் உலகத்திற்குச் சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கலாம்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் புத்தகங்கள், கட்டுரைகள், திரைப்படங்களைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இவற்றை அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பதும் இழிவுபடுத்துதல் என்பதும் வெவ்வேறானவை.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, குர்ஆன் இறைவாக்கு அல்ல, பலதார மணம், தலாக், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுத்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது எந்த முஸ்லிம் அமைப்பும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவற்றை விமர்சனமாகவே எதிர்கொண்டனர்.
தமது மதம் பற்றி எந்தக் கேள்விகளும் கேட்கலாம் என்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தொடுக்கும் கடுமையான விமர்சனங்களையும் எற்றுக்கொண்டு தக்க பதில்களையும் அளித்து வருவதை இன்றும் காணலாம், இங்கும் காணலாம். விமர்சனங்களை அனுமதிக்கலாம் ஆனால், இழிவுபடுத்துவதை எப்படி அனுமதிப்பது?
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதுபோல கருத்துச் சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. கட்டுப்பாடற்ற முழுச் சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது. "அடுத்தவனின் மூக்கில் இடிக்காதவாறு தெருவில் தாராளமாகக் கைவீசிச் செல்லலாம். அடுத்தவன் மூக்கு ஆரம்பமாகும் இடம், உனது சுதந்திரம் முடிவடையும் இடம்' என்பது அனைவரும் அறிந்த கருத்தாகும்.
நமது அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவு சுதந்திரம் பற்றிய பிரிவாகும். அதில் (ரைட் டூ பிரீடம்) நாட்டின் ஒருமை, இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டவருடனான நட்புறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமரியாதை, குற்றங்களைத் தூண்டுதல் போன்ற விஷயங்களில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று கூறுகின்றது.
சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளில், அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் விஷயத்தை வெளியிட முடியாது. சமூகங்களிடையே மோதல் உண்டாக்கும் பேச்சுகளைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பதில்லை.
கருத்துச் சுதந்திரம் பற்றி உரக்கப் பேசும் அமெரிக்கா, விக்கி லீக்சின் ஜூலியன் அசான்ஜை ஏன் துரத்திப் பிடிக்க முயல்கிறது? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவரைச் செயல்பட விடலாமே?
இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் படுகொலை செய்த "ஹோலோகாஸ்ட்' பற்றி ஆட்சேபங்களோ சந்தேகங்களோ எழுப்பக்கூடாது என விதிகள் உள்ளன. கருத்துச் சுதந்திரத்தில் இரட்டை நிலைகள் இருப்பதையே இவை காட்டுகின்றன.
எனவே வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டுபண்ணக்கூடிய அனைத்து எழுத்து, பேச்சு, காட்சிகளைத் தடைசெய்ய வேண்டும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக எழுத்தில், பேச்சில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்றால், அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றுக்காகவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் அல்லவா?
ஒருவரின் மத உணர்வுகள் காயப்படுத்தப்படும் வேளைகளில் பாதிக்கப்பட்டவர்களும் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும். வெறுப்பை விதைக்க விரும்புபவர்களின் எண்ணம் வெற்றி பெறாமலும் அவர்கள் விரும்பும் விளம்பரமும் வியாபாரமும் அவர்களுக்குக் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இழிவுபடுத்தும் கட்டுரைகள், படங்களால் ஒரு மதத்தின், கொள்கையின் மேன்மையை வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. பலவீனமான கொள்கை உடையவர்கள்தான் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.
இஸ்லாம் விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே பல வசைமொழிகள் வெளிப்பட்டன. மந்திரவாதி, சூனியக்காரர், பொய்யர், குறிசொல்பவர் என்று வசைகளை மொழிந்தபோது பெருமானார் தமது தோழர்களை ஏவி அவர்களைத் தாக்கவில்லை. மாறாக, அவர்கள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்படி கூறினார்.
கவிதைகள் மூலம் பெருமானாரை வசை பாடியபோது தமது அணியிலிருந்த கவிஞர்கள் மூலம் அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு செய்தார். தமது மனைவி ஆயிஷாவின் (ரலி) கற்பு குறித்து எதிரிகள் அவதூறு சுமத்தியபோதும் பொறுமை காத்தார்.
இத்தகைய தருணங்களில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென குர்ஆன் மூலம் இறைவன் வழிகாட்டினான். வசைமொழிகளைக் கேள்வியுறும் வேளைகளில் பொறுமையையும் இறையச்சத்தையும் மேற்கொள்ளுமாறும் (குர்ஆன் 3:186) அறிவீனர்களின் வாதங்களைப் புறக்கணிக்குமாறும் (குர்ஆன் 25:63)) திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தோடு அவர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு அழகிய முறையில் பதில் அளிக்குமாறு கட்டளையிடுகிறது. (குர்ஆன் 25:33, 16: 124)
"குர்ஆன் இறைவாக்கல்ல, முஹம்மதால் புனையப்பட்டது' என்று கூறியபோது, "அப்படியாயின் இதுபோன்ற ஒரு திருக்குர்ஆனை நீங்களும் கொண்டு வாருங்களேன்' என்று பதில் அளிக்கப்பட்டது. "எழுத, படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இலக்கியத் தரமிக்க கவித்துவமிக்க ஒரு நூலை உருவாக்க முடியுமா?' என்று கூறி அவர்களின் சிந்தனைக்குச் சவால் விடப்பட்டது. எனவே அறிவை அறிவால் சந்திக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிற மதங்களைப் பழிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வழிபடும் தெய்வங்களைத் திட்ட வேண்டாமென்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. (குர்ஆன் 6: 108) இந்தக் கட்டளைப்படியே கடந்த 1,400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் இலக்கியங்களை, பிரசாரத்தை முஸ்லிம்கள் செய்ததில்லை.
விமர்சனங்கள் கீழ்த்தரமானவையாக இருந்தால் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் அல்லது அறிவுபூர்வமாகப் பதில் அளிக்கலாம். அல்லது எவருக்கும் தொல்லை தராத அமைதிப்பேரணி நடத்தலாம். ஆனால், பேரணிகள் நடத்தும்போது கலந்துகொள்ளும் அத்தனைபேரையும் கட்டுப்படுத்துவது இயலாது. கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது ஒருவகையான ஆவேசம் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு குறிப்பாக பயணிகள், நோயாளிகள் படும் அவஸ்தைகள் அனைவரும் அறிந்ததே.
அமைதிப் பேரணியுடன் கருத்தரங்குகள் ஏற்பாடுகள் செய்து சர்வ சமயத்தவர்கள், மனிதநேயர்கள், சமயச் சான்றோர்கள், நல்லிணக்கம் நாடுவோர் எனப் பலதரப்பினரையும் அழைத்து - மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகளைக் கண்டிப்பதோடு - நபிகள் நாயகம் பற்றி உண்மையான சித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். அமைதியை ஏற்படுத்தலாம். மதவெறியர்களின் திட்டங்களைத் தவிர்க்கலாம். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
 இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்.
Source: Dinamani

No comments: