1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.
இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.
1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.
இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.
காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.
திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.
முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்?
1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர்.
இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.
1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.
1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.
காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.
இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? .. இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.
“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”
என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.
மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.
‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.
மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.
தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.
திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.
இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள்:
முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?
கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார்.
சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.
1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.
கருணாநிதி தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப்பிடித்தது சமுதாயம்.
எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.
இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?
அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்
அமைப்பாக ஒன்றுதிரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார்.
உதாரணமாக,
துறைமுகம் சட்டமன்ற தொகுதி :
1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)
1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் - (முஸ்லிம் லீக்)
1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) - வென்ற தொகுதி - காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.
1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.
1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி - ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.
1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் - திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.
அதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப்பட்டார். 1996, 2001, 2006 என இன்றுவரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.
துறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா? சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன?
1977 ரகுமான்கான் திமுக
1980 ரகுமான்கான் திமுக
1984 ரகுமான்கான் திமுக
1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)
1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)
இப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.
‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.
அடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.
முஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்
அதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி எம்.எல்.ஏ.வாக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்காநகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-?
K.N. நேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை (?) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா? காரணம் அவர் ஒரு முஸ்லிம்.
முஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது
1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை-?
நகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.
முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது
1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?
1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.
அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)
கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.
‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார்.
கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.
தொகுதிகளை கொடுத்து பறிக்கும் கருணாநிதி
2006ல் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூனு சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியை பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.
இந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.
வரும் 2011 சட்டமன்ற தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளை பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போல தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.
இச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட தொகுதி பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை பிடுங்கி காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டது.
அதனை எதிர்த்து மாநில மகளிர் அணி தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ்மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.
1999ல் பி.ஜே.பியோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ்மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பி.ஜே.பி கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.
முஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றை பறித்த அதிருப்தியையும் சரிகட்ட மிகச்சிறந்த ராஜதந்திர சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றி கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியை சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.
ஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனையெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்கு பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்தும் வாசகம்.
கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்(!)
உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தேன் என்பார். ஒட்டுமொத்த சமுதாயமும் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்த சமூக நீதி காவலன்(!) உருதுபேசும் முஸ்லிம்களை மட்டுமே சேர்த்தது முஸ்லிம்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து அப்போதே முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தார். அதற்காக தமுமுக நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட கலைஞர் இது என்னுடைய ஆழ்மனதில் உள்ள உணர்வு. எங்களுடைய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காட்டிய சமூக நீதி பாதை என்றெல்லாம் சொன்னார்.
அது உண்மையாக இருந்திருக்கு மேயானால் 1969ல் ஆட்சிக்கு வந்தபோதே கொடுத்திருக்க வேண்டும். 1971ல் இரண்டாவது முறையாக வந்தாரே அப்போது கொடுத்திருக்க வேண்டும். 1989ல் மூன்றாவதாக பதவியேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 1996ல் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 2006ல் ஐந்தாவதாக முதல்வர் பொறுப்பேற்று 2007ல் ஏன் கொடுத்தார். அது இந்த சமுதாயத்தை கீழ் நிலையிலிருந்து கைதூக்கி விடவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; தன்னையே நம்பிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அல்ல.
தமுமுகவின் 12 ஆண்டு போராட்டதைத் தொடர்ந்து கிடைத்ததே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு.
2006ல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்பேற்று காலம் கடத்தியதைப் பொறுக்காமல் ‘‘வீறுகொண்டு எழுவோம்...’’ என்ற தமுமுக பாபநாசம் பொதுக்குழுவின் எச்சரிக்கைதான் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வழிவகுத்து அதிலும் பல்வேறு குளறுபடிகள். முஸ்லிம்களுக்கான இடங்கள் சரியான முறையில் நிரப்பப்படுவதில்லை என்பதை எடுத்துச் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
இதனைத் தவிர என்ன செய்தார் கலைஞர் சாதனையாகச் சொல்ல. முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வளவு செய்தாலும் கலைஞருக்காக இந்த சமுதாயம் இழந்ததை வைத்துப் பார்த்தால், இமயமலைக்கும், கூழாங்கல்லுக்கும் உள்ள வித்தியாசம் இருக்குமே அல்லாமல் சமன் செய்ய முடியாது.
திமுக உள்கட்டமைப்பில் முஸ்லிம்கள்
தனது தாய்ச் சபையைத் துறந்து, தனது அடையாளத்தை இழந்து கலைஞரின் தலைமையேற்ற முஸ்லிம் சமுதாயத்தின் நிலை இன்று திமுகவின் நிர்வாகப் பொறுப்புகளில் எப்படி உள்ளது.
தலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்மட்ட செயல்திட்டக் குழுவில் ஒரு முஸ்லிம் உண்டா? பெயருக்கேற்றார் போல வாழ்ந்து மறைந்த சாதிக் பாட்ஷா, மாநிலப் பொருளாளராக இருந்து மறைந்த பிறகு இதுவரை ஒருவரும் தலைமை நிர்வாகக் குழுவில் பொறுப்புக்கு வர முடியவில்லை.
அடுத்த அதிகாரம் பொருந்திய பதவியாக இன்று குறுநில மன்னர்களைப் போன்று அதிகாரம் செலுத்தும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் ஒரு முஸ்லிமும் இல்லையே ஏன்?
நீலகிரி முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் இப்பொழுது எங்கே இருக்கிறார்?
வேலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் முகம்மது ஷகிக்கு கட்சியில் என்ன மரியாதை-?
ஆயிரம் விளக்கு உசேன், துறைமுகம் காஜா போன்றவர்கள் திமுகவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏன் ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளுக்கு கூட முஸ்லிம்கள் நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப் படுகின்றார்கள். கலைஞரின் வாக்கு வங்கியாக மட்டும் வாழும் அடிமைகளா முஸ்லிம்கள்?
தமுமுகவை அடக்குமுறையால் ஒழித்துவிட நினைத்தது யார்?
முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அமைப்பாக ஒன்றுதிரள்வோம் என்ற முடிவை எடுத்து தமுமுகவை 1995ல் துவங்கினோம்.
1996ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்றார். டிசம்பர் 06 போராட்டம் என்றாலே காவல்துறை மூலம் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. கவர்னர் மாளிகை மசூதியில் ஜும்மா தொழுகைப் போராட்டம் என்று அறிவித்தோம். இது ஓரு ஜனநாயக போராட்டம். ஆனால் கலைஞரோ சட்டமன்றத்தில், ‘‘மத தீவிரவாதிகள் கவர்னர் மாளிகையில் நுழைவதாக அறிவித்திருக்கின்றனர். காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறி, தீவிரவாதிகள் என்று பட்டம் வழங்கி முஸ்லிம்களை மிரட்டியதோடு நாடு முழுவதும் கைதுப் படலும் நடந்தன.
நாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளில் காவல்துறை புகுந்து படுக்கை அறை வரை சென்று கைது செய்து சிறைவைத்த கொடூரங்கள் நடந்தன. அதையும் மீறி ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு நந்தனம் கல்லூரி வளாகத்தில் சிறை வைக்கப்பட்டோம்.
1997 டிசம்பர் 6ல் சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மாநாடு என்று தமுமுக அறிவித்தது. கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவையில் செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பேரணி மாநாட்டிற்கு திமுக அரசு, தடை விதித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதனையும் மீறி கொட்டும் மழையில் மக்கள் திரண்டனர். அனைவரையும் கைது செய்ய முடியாத சூழல் உருவாகியது.
1998 டிசம்பர் 6ல் மதுரையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் தொடர்பான பேரணி மற்றும் மாநாடு என்று தமுமுக அறிவித்தது. இம்மாநாடு நடைபெறுவதற்கு 15 தினங்கள் முன்பாகவே தமுமுக நிர்வாகிகளும் அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். மாநாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து முதல்வர் கலைஞர் வீடு முற்றுகை என்று அறிவித்தோம். மீண்டும் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் தூண்டி விடப்பட்டது.
டிசம்பர் 6 என்றாலே அனுமதி மறுக்கப்படுகிறது என்பதால் 1999 ஜூலை 4ல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. அதனைத் தடுத்திட மே மாதம் கடைசி வாரத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட காவல்துறை ஆணையாளர் அலுவலகங்கள் அருகில் வெடிக்காத குண்டுகள் வைக்கப்பட்டதாகச் சொல்லி மாநாட்டுப் பணிகளில் இருந்த தமுமுகவினரை பல்லாயிரணக்கணக்கில் கைது செய்து சிறை வைத்தார் கலைஞர்.
அதன்பிறகே கருணாநிதியின் தொடர் அடக்குமுறையை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் செல்வி ஜெயலலிதாவை மாநாட்டிற்கு அழைப்பது என்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. பேரெழுச்சியோடு முஸ்லிம்கள் பங்குகொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமைந்தது. அதன்பிறகே கலைஞர் அரசின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது.
நாம் கேட்பது என்னவென்றால், இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்ட சமுதாயம் நீதி வழங்கக் கோரி அமைப்பு நடத்துவதை இயக்கத்தின் மூலம் ஒன்று திரள்வதை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
ஏன் அரசின் கொடுங்கரங்களால் ஏவி ஒழித்திட துடித்தார் என்றால் தனது நிரந்தர வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்து விடும் என்பதால்தான். இவர் தான் முஸ்லிம்களின் காவலரா?
கோவை கலவரம்: திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்
கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்தும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது.
1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.
குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.
ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.
கூட்டணியில் இருந்து கொண்டே நாம் பெரும் போராட்டங்களை நடத்தி சிறைவாசிகளை விடுவித்தோம்.
பாளையங்கோட்டை அப்துல் ரஷீத் கொலை வழக்கும், கலைஞரின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்....
பாளையங்கோட்டையில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டிய கலைஞரின் காவல்துறை, அப்துல் ரஷீதின் மகனையே கைது செய்து சிறையில் அடைத்தது.
அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அப்பாவியான அவர் மகனை விடுவிக்கக் கோரியும், அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களை தமுமுக நடத்தியது-. தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு இழப்பீடு பெற்றுத்தர முடிந்ததே தவிர இன்றும்கூட உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
ம.ம.க.வினரை நோக்கி கொலைவெறி கூட்டத்தை ஏவிய திமுக
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினர் செய்த அராஜகங்களையும் கள்ள ஓட்டுபோட்ட இழிசெயலையும் தட்டிகேட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திமுக கொலைவெறி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கடுமையான ரத்தக் காயங்களோடு பொறுமை காத்த நம் மீது அடக்கு முறையும் அராஜக தாக்குதலையும் ஏவியது கலைஞர் அரசு.
காதியானிகளை ஆதரிக்கும் கலைஞரின் காவல்துறை
காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானிகளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற்காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.
திருமணப் பதிவுச் சட்டத்தில் துரோகம்
திமுக அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த திருமணப் பதிவுச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் முஸ்லிம் தனியார் சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என்று கூறி ஜமாஅத்துல் உலமா தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் அரசிடம் முறையிட்டன. மார்ச் 6, 2010ல் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி எத்தகைய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. திருத்தத்தை உடனடியாக செய்வதாக சட்ட அமைச்சர் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் ஒப்புக் கொண்டார். ஆனால் பெயரளவிற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டு முஸ்லிம் அமைப்புகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.
இதே நேரத்தில் இந்து கோயில்களில் நடைபெறும் திருமணம் அப்படியே பதிவு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. காலங்காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் ஜமாஅத்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டுமென்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதேபோன்ற வாதங்களை அதிமுகவை நோக்கியும் வைக்க முடியும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை அதன் தலைமை செய்தது முழுக்க முழுக்க சரியன்றோ, அவர்கள் தவறே செய்யாதவர்கள் என்றோ நாம் சொல்லவில்லை.
அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு
திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?
திமுக மட்டுமே முஸ்லிம்களின் செல்வாக்கு மிகுந்த கட்சி என்றொரு மாயையை திமுக விதைத்து வந்தது. இதைப் போர்வையாக வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான துரோகங்களும் தொடர்ந்தது. அதனை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படைய வைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
அதிமுகவின் தவறுகள் பூதாகரமாக்கப்படுவதும், திமுகவின் தவறுகள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவு சிறியதாக்கப்படுவதும் சமுதாயத்தின் உண்மையான நிலையான அரசியல் எழுச்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது.
-ப.அப்துல் சமது
Source: TMMK website.
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
///-ப.அப்துல் சமது
Source: TMMK website.///
அல்ஹம்துலில்லாஹ்... கைகொடுங்க சகோ. பழைய வரலாறுகளையும் புதியவர்கள் அறிந்து கொள்ள அருமையாக தொகுத்து எழுதி உள்ளீர்கள்.
அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகாவது தமுமுகவினற்கு, கருணாநிதி முஸ்லிம்களுக்கு செய்த வஞ்சக கொடுமைகள் எல்லாம் தக்க நேரத்தில் நியாபகம் வந்து... "கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு!" என்று ஆதி முதல் அந்தம் வரை (இடையில் சகோ.ஹைதர் அலி அவர்களுக்கு கலைஞர் வஃப் வாரியம் தந்தது தவிர்த்து) எல்லாவற்றையும் எழுத வைத்ததே..! அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
இன்ஷாஅல்லாஹ்... அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை பெற்று திமுகவுடன் மமக கூட்டணி வைக்கும்போது... "எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு!"---என்ற இதேபோன்ற பெரிய்ய்ய்ய்ய்ய கட்டுரையை டீடைலாக படிக்க இப்போதே ஆவலாய் உள்ளேன்.
இனி தமிழக முஸ்லிம்கள் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் கூட்டணி போட்டால்தான் உருப்பட முடியும்.
ஆஷிக் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ராவணன் என்ற பெயரில் கருத்திட்டவரின் கருத்தை வெளியிட முடியாது. கண்ணியத்துடனும் நாகரிகத்துடனும் எழுதப்படும் விமர்சனங்களே ஏற்றுக்கொள்ளப்படும். ராவணன் அவர்களே.. உங்களாலும் வார்த்தைகளில் கண்ணியம் கோர்த்து எழுத முடியும் என்று நிரூபியுங்கள். நன்றி.
Post a Comment