Saturday, September 18, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: வெல்லப்போவது நீதியா? இந்து மத வெறியா?

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது.

இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.


உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை
உள்ளது.பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.

நன்றி: பாலைவன துது.

தெரிந்து தெளிய வேண்டிய விஷயங்கள் .
பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்
பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்

No comments: