Monday, June 7, 2010

நெஞ்சில் மிதித்த பிஜேபியும், முதுகில் குத்திய காங்கிரஸும்...




கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று சங்பரிவார பயங்கரவாதிகளால் பாபரி மஸ்ஜித் இடித்து தகர்க்கப்பட்டது.




இந்த இடிப்புக்கு முன்பு ரத யாத்திரை என்ற பெயரில் அத்வானி போன்றவர்கள் ரத்த யாத்திரை நடத்தி கரசேவைக்கு ஆள் சேர்த்தனர்.



பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிட்டு பாபரி மஸ்ஜித் ஒரு அவமான சின்னம்; அதை இடிப்பதில்தான் இந்தியாவின் மானமே இருக்கிறது என்ற விதத்தில் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.



கரசேவை என்பது கடப்பாறை சேவை என்றும் தெளிவாக அறிவித்தனர். இந்த சங்பரிவார தலைவர்களின் பேச்சை கேட்டு நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அயோத்திக்கு வந்து குவிந்தனர்.



அப்படி குவிந்த மக்களுக்கு மத்தியில் அத்வானி போன்றவர்கள் வெறியூட்டி பேசி பாபரி மஸ்ஜிதை இடிக்கத்தூண்டினர். அதன்பிறகு முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபரி மஸ்ஜித் இடித்து நொறுக்கப்பட்டது.



இந்த செயல் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே தெரியும்.இப்படி பாபரி மஸ்ஜிதை திட்டமிட்டு தகர்த்த அத்வானி, முரளி மனோகர் ஜோசி, கல்யான் சிங்க, உமா பாரதி, வினய்கத்தியார், ரிதம்பரா உள்ளிட்ட 21 பேர் மீதி ரேபரேலி தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கிரிமினல் வழக்கு தாக்கல் செய்தது.



முறையான ஆவணங்கள் சாட்சிகளோடு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அத்வானி வகையறா இந்நேரம் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும்.அத்வானி கும்பலை தண்டிக்கும் எண்ணம் அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு இல்லை. அதனால் வழக்கு போடுவது போல் வலுவற்ற வழக்கை தாக்கல் செய்து முஸ்லிம்களை ஏமாற்றிய நரசிம்மராவ், அத்வானி கும்பல் அந்த வழக்கிலிருந்து தப்புவதற்கும் வழிவகுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் செத்தும் போனார்.



இந்நிலையில் 1999 அக்டோபர் 10 முதல் 2004 மே வரை மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது துணைப்பிரதமராக அத்வானி இருந்தார். சி.பி.ஐ. துறை அவர் வசம் கொண்டுவரப்பட்டது. எஜமானரான அத்வானிக்கு எதிராக சி.பி.ஐ. நடந்து கொள்ளமுடியுமா? முடியாது.



அந்த இலக்கணத்தின்படி பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் வழக்கில் சி.பி.ஐ. சும்மா இருந்துவிட்டது. அதன் விளைவாக 2001 மே மாதம் 4ம் தேதியன்று அத்வானி கும்பலுக்கு எதிராக சி.பி.ஐ. போட்ட கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.



தனி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் சி.பி.ஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்போது புதிய ஆதாரங்களையும், வலுவான வாதங்களையும் வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் அத்வானி கும்பல் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கும். ஆனால் இந்த தடவையும் சி.பி.ஐ இதை செய்யவில்லை.



பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பந்தமாக லிபர்ஹான் ஆணையத்தை அமைத்து பல்லாண்டுகளுக்கு பின்பு அந்த ஆணையத்தின் அறிக்கை பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, குற்றவாளிகளான அத்வானி கும்பலை தண்டிக்க மாட்டோம் என்று பட்டவர்த்தனமாக அறிவித்த காங்கிரஸ் கட்சி அலஹாபாத் உயர்நீதிமன்றத்திலும் அத்வானி கும்பலுக்கு ஆதரவாக நடந்துகொண்டது.



இதனால் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திருத்தி அமைப்பதற்கோ அல்லது குறிக்கிடுவதற்கோ தேவையான முகாந்திரம் எதுவும் இல்லை என்று சொல்லி நீதிபதி அலோக் குமார் சிங்க் சி.பி.ஐ.யின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.



முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதில் காங்கிரஸ் வேறு பி.ஜே.பி வேறு அல்ல. இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று மிஞ்சிய கட்சிகள் என இதன் மூலம் விளங்குகிறது. அரசியல் ஆதாயத்திற்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்துகிறது என்று சமீபத்தில் போராட்டம் நடத்திய பி.ஜே.பி குடியரசு தலைவரை சந்தித்து இது குறித்து மனுவும் அளித்துள்ளது.



ஆம்.. பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் வழக்கில் அத்வானி கும்பலுக்கு ஆதரவாக சி.பி.ஐ.யை நடக்க செய்து முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயத்திற்காகவே இதை செய்துள்ளது என்று முஸ்லிம்கள் பொருமுகிறார்கள்.



பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானி கும்பல் குற்றமிழைத்துள்ளது என்று உலகுக்கே தெரியும். இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க இயலாத சி.பி.ஐ.யின் திறமையை என்னவென்று சொல்லுவது?



No comments: