Sunday, January 24, 2010

பர்தா விவகாரம்: உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து புகைப்படம் எடுக்க அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன.'வாக்காளர் அடையாள அட்டையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் ஹிஜாப் அங்கியை அணியாமல் படமெடுப்பது மத சம்பிரதாயத்தை மீறும் செயல். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சலுகை வழங்கவேண்டும்' எனக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல் கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்து, மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிபதிகளின் இந்த தீர்ப்பை முஸ்லிம் சமுதாய அமைப்புகள் வரவேற்றுள்ளன.டெல்லி சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய உறுப்பினருமான கமால் ஃபரூக்கி இதுபற்றி கூறுகையில்,'ஹஜ் பயணத்துக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்க முகத்தை மூடாமல் தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். அப்படியிருக்கும் போது வாக்காளர் அட்டை விஷயத்தில் ஏன் பிரச்னை எழுப்ப வேண்டு்ம.புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பது நாட்டுக்கு மிகவும் அவசியமானது. பொது நலனுக்கான அரசின் நடவடிக்கைக்கு மத விவகாரங்கள் தடையாக இருக்கக் கூடாது என நீதிபதிகள் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.'

இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிவது கட்டாயம் தான் என்றாலும், சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள சட்டத்திலேயே அனுமதி அளிக்கப்படுகிறது.குறிப்பிட்ட காரணங்களுக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை' என்று முஸ்லிம் சட்டவாரிய உறுப்பினர் காலித் ரஷீத் கூறியுள்ளார்.மேலும், 'உடல்நலம் சரியில்லை என மருத்துவரிடம் போகிறோம். அப்போது முகத்தை காட்டமாட்டேன் என சொல்ல முடியுமா? அதுபோல வாக்காளர் அட்டை முக்கியமானது என்பதால் சம்பிரதாயத்தை தளர்த்திக் கொள்வதில் தவறேதும் இல்லை' என பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கருத்து தெரிவித்துள்ளன.

எனினும், 'ரொம்பவும் மதரீதியாக உணர்ந்தால், ஓட்டுப் போடவே வேண்டாம்' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டது வருத்தமளிப்பதாக சில இமாம்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, அகில இந்திய ஷியா தனிச்சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, 'வாக்காளர் பட்டியலுக்காக முஸ்லிம் பெண்கள் காது பகுதியை சேர்த்து தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்தபடி புகைப்படம் எடுக்க அனுமதிக்கலாம். இதுதொடர்பாக தெளிவான சட்டம் இருக்கவேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்களில் ஒருபகுதியினர் தேர்தலில் பங்கேற்க இயலாத வாய்ப்பு ஏற்படலாம்.அந்தவிதத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுக்களை சிதைப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதியாகக் கூட இதை சந்தேகிக்க வாய்ப்புள்ளது' என்றார .

தட்ஸ் தமிழ்

No comments: