Wednesday, November 4, 2009

வந்தே மாதரம் தேசபக்தியின் மாய பிம்பம்

ஜமாத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மதகுருமார்கள், மத அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் அமைப்பு 2006ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதைப் பாடக் கூடாது என்று முஸ்லீம்களுக்கு பத்வா (தடை) பிறப்பித்தது. அந்தத் தடை சரியானதே.நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது.மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது.

இதனால் அதைப் பாட முடியாது. வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்சனையை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை. மதத்தை காரணம் காட்டி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மிக மிக தவறான செயல். இதனால், எல்லா வகையான தீவிரவாத்துக்கும் எதிராக பதவா பிறப்பிக்கிறோம். தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரான செயல். அதை ஆதரிக்கவோ அதற்கு உதவி புரியவோ கூடாது.மதரஸாக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸா வாரியம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மதரஸாக்களை நாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்வோம்.சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆதாரம் "தட்ஸ் தமிழ்

மேற்கண்ட செய்தியை வாசித்ததும் "வந்தே மாதரத்தின்" ரிஷிமூலம் நதிமூலம் ஆராய வேண்டும் போல தோன்றியதால் தான் இந்த பதிவு. "வந்தே ஏமாத்துறோம்" என்று பழைய கருணா நிதியால் பரிகாசம் செய்யப்பட்ட பாடல் என்ன தேசபக்தியின் குறியீடா? சரி.. இதன் வரலாறு தான் என்ன?

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?
1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.


1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.
முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?


வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.
நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.
வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

நன்றி "புதிய ஜனநாயகம்"

தேசிய கீதம் இசைக்கப்படும் போது கூட எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. வந்தே மாதரம் பாடலை ஏன் இவ்வளவு தூரம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதன் உள் நோக்கம் என்ன? மத சார்பற்ற ஒரு நாட்டில் தேசிய கீதமில்லாத ஒரு துவேஷமும் வன்மமும் கொண்ட மத வெறி பாடலை, படைத்தவனை தவிர படைப்புக்களை வணங்காத இஸ்லாமியர்கள் பாடாமல் புறக்கணிப்பது ஒன்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரான செயல் அல்ல. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே ஆதாரம்..

இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு. இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.

கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான 'ஜெவோகா விட்னஸ்' பிரிவைச் சேர்ந்தார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது. ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

ஆகவே.. இனி இந்துத்துவாவின் பயங்கரவாதிகள் இதை ஈரைப் பேனாக்கி பேனை பெருச்சாளிக்கியானாலும் அது இன்னொரு ராமஜென்ம பூமி விவகாரம் போல பிசுபிசுத்து போகும்.இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்.

கொல்கத்தாவில் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாடிய் கவி தாகூரே இந்தப் பாடலை தேசிய கீதமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஸ் சந்திர போஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்:
"வந்தே மாதரம் பாடலின் மையப்பகுதி அது தேவி துர்கையைத் துதிக்கும் பாடலாக இருப்பதுதான். இது மிகவும் தெளிவாக உள்ளது. இதில் வேறு கருத்துக்கே இடமில்லை. துர்காவும் வங்காளமும் ஒன்றுதான் என்பதாகத்தான் பங்கிம் சந்திரர் கடையில் காட்டுகிறார். ஆனால் தேசப்பற்று என்ற ரீதியில் பத்து தலை கொண்ட துர்கையை 'ஸ்வதேஷ்' (தேசம்) என்பதாக எந்த முசல்மானும் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது தெளிவு. இந்த ஆண்டு, துர்கா பூஜைகளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களிலெல்லாம் வந்தே மாதரம் பாடலில் இருந்து மேற்கோள்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல் துர்கையைக் குறிப்பதுதான் என்பதாக பத்திரிக்கையாசிரியர்களும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. 'ஆனந்தமடம்' என்பது ஒரு இலக்கியப் படைப்பு. அதில் அப்பாடல் இடம் பெறுவது பொருத்தமானதே. ஆனால் பாராளுமன்றம் என்பது எல்லா மதக்குழுக்களும் இணைந்து செயல்படும் ஒரு இடமாகும். எனவே அங்கே அந்தப்பாடல் பொருத்தமானதாக இருக்க முடியாது. வங்காள முஸ்லிம்கள் தங்களது அடிப்படைவாதத்தில் பிடிவாதமாக இருக்கும்போது, அது நமக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் அவர்களையே பிரதியெடுத்த மாதிரி, நாமும் அவர்களைப் போலவே பிடிவாதமாக பாடித்தான் ஆகவேண்டும் என்று சொல்வோமேயானால், அது நம்மை நாமே தோற்கடிப்பதாக இருக்கும்"
என்று எழுதிய அவர் அக்கடிதத்தின் பின்குறிப்பில்....


"வங்காள ஹிந்துக்கள் இந்த விஷயத்தில் கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இது ஹிந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விஷயமல்ல. இரண்டு பக்கமும் வலுவான உணர்வுகள் இருப்பதால், நடுநிலையான தீர்ப்பு அவசியமாகிறது. அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் இவைகளை நோக்கித்தான் நமது அரசியல் நகர்வு இருக்கிறது. ஒரு குழுவின் கோஷங்களை மட்டும் கவனிப்பதால் முடிவற்ற போராட்டம்தான் தொடரும். இது நமக்கு வேண்டாம்."
என்று முடிக்கிறார்
.
(கடித எண் 314, Selected Letters of Rabindranath Tagore, edited by K. Datta and A.Robibson, CUP).
வந்தே மாதரம் பாடலைப் பாடக்கூடாதென்று சீக்கியர்களும் முடிவெடுத்தார்கள். சீக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜதேதார் அவ்தார் மக்கார் சீக்கியர்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்பாடலைப் பாடவேண்டாமென்றும் அதற்கு பதிலாக குரு கோபிந்த் சிங்கின் பாடலைப் பாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ( நன்றி நாகூர் ரூமியின் திண்ணை பதிவு)


இந்த ‘ஆனந்த மடம்’ நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை - ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து - ஆங்கிலேயர்களின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக் கருத்து.வைணவ இந்து இளைஞர்கள் - ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் - அவரது சீடராக குரு. கபவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா - இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறான். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)பவானந்தா - அப்படி திரட்டும் இளைஞர்களிடம் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. இதன் பொருள் இதுதான்.

“நம்முடைய நோக்கம் நமது தாய் நாட்டை விடுவிப்பதேயாகும். நம்முடைய இனம், மதம், பண்பாடு, பெருமை ஆகிய அனைத்துமே முஸ்லிம்கள் ஆட்சியில் பேராபத்துக்கு உள்ளாகிவிட்டது. நாம் முஸ்லிம்களை ஒழிக்காவிட்டால், நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை. ஏழு கோடி இந்துக்களாகிய நாம் வாளேந்தி களத்தில் குதித்தால்... அது ஒன்றே போதும் நமது மண்ணின் பெருமையை மீட்க” - இதுதான் ‘வந்தே மாதரம்’ பாடலின் பொருள்.ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’வின் மடியில் பலவீனமாக இந்திய மாதா படுத் திருக்கும் படத்தைப் பார்த்து - வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’த்தை முழங்கி - முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடுகிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு காளிதேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

“நாம்தான் முஸ்லிம்களை ஒழித்துவிட்டோமே, ஆனாலும் இந்துராச்சியம் வரவில்லையே! ஆங்கிலேயர்கள் அல்லவா தொடர்ந்து நம்மை ஆளுகிறார்கள்?” என்று இளைஞர்கள் சத்யானந்தாவிடம் கேட்க - அவர் கூறுகிறார்: “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்கிறார். சத்யானந்தாவின் இந்தப் பேச்சோடு கதை முடிகிறது.

காங்கிரசில் உள்ள இந்து வெறி பார்ப்பன சக்திகள் - காங்கிரஸ் கூட்டங்களில் இந்தப் பாடலைப் பாடி வந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. 1905-ல் வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடை விதித்தது.முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்ததால், காந்தியாரும் இந்தப் பாடல்களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார்.
1946 - 47-ல் ‘வந்தே மாதரத்தை’ தேசிய கீதமாக்க முயற்சி நடந்தும், முஸ்லிம்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.கவிஞர் இக்பாலுடைய ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற - இந்தியா முழுவதும் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட பாடலை, தேசிய கீதமாக வைப்பதற்கு ‘இந்து’க்கள் எதிர்த்தார்கள். காரணம் - எழுதிய கவிஞர் ஒரு முஸ்லிம் என்பதால்.

பிறகுதான் ‘ஜனகனமண’ பாடல் தேசிய கீதமானது.முஸ்லிம்களை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இந்து ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டது தான் ‘வந்தே மாதரம்’, அது ஆங்கிலேயரை எதிர்த்த தேச பக்திப் பாடல் அல்ல; அதன் காரணமாகத்தான், ‘ஆனந்த மடம்’ ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை; பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை. திரைப்படமாகவில்லை; தொலைக்காட்சித் தொடராகவும் உருவாகவில்லை. ( ஆதாரம் "பெரியார் முழக்கம் )

பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா-
இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள்
இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும்
வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே
அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே
எங்கள் பாரதம் தான் எங்கள் அரவனைப்பும் பாதுகாப்பும்
எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை
இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா
(ஸாரே ஜஹான் சே அச்சா என்ற அல்லாமா இஃக்பால் பாடலின் தமிழாக்கம் )

4 comments:

Unknown said...

மிகவும் அருமையான அலசல் உதயம்..

இவ்வளவு இருக்கா இதுல, எனக்கு ஏதே எதிர்கிறாங்க அப்படீன்னு தெரியும், ஆனா... இவ்வளவு மேட்டர் இருக்கும்னு தெரியாது. மிகவும் தெளிவான பதிவு.

நன்றி உதயம்.

பீர் | Peer said...

விரிவான அலசல்.. மிக்க மகிழ்ச்சி உதயம். நானும் பல தகவல்களை தெரிந்துகொண்டேன்.

உதயம் said...

மதிப்பிற்குரிய.. மஸ்தான், பீர் உங்கள் பாராட்டுக்களே எனக்கு ஊக்க மருந்து. நன்றி. இனி.. உங்களின் அடுத்த வருகைக்காக சிவப்பு கம்பளத்துடன் காத்திருக்கிறேன்.

பீர் | Peer said...

where is the சிவப்பு கம்பளம்? :)