எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பேட்டி
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாபர் மசூதி இடிப்பு, மும்பை, கோவை கலவரம் என்ற இந்துத்துவ தீவிரவாத அரசியல் உத்திகளில் அடையாளம் இழந்து தீவிரவாதிகளாய் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமும் பார்க்கப்பட்டு எதிர்வினையாற்ற வழியற்று முடங்கி இருந்த வேளையில் அச்சமூக இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், மாற்றுத்தளத்தையும் ஏற்படுத்திய அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம். அதன் தொடச்சியான செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்திலும் ஒட்டுமொத்த தமிழக தளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக முஸ்லிம் அடையாளத்தையும் தாண்டி ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குமாக மனித நேய மக்கள் கட்சியை துவக்கினர். அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர்.. அவருடன் சமூக விழிப்புணர்வு மாத இதழ் நேர்காணலுக்காக சந்தித்த போது நம்முடைய சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.. இன்னும் நம்மிடையே பல கேள்விகள் இருந்தாலும் நேரப்பற்றாக்குறையால் கேட்க முடியவில்லை.. இனிவரும் இதழ்களில் மீதமுள்ள அவரின் நேர்காணல் இடம் பெறும்..
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல முஸ்லீம் இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை ஏன் 1995ஆம் ஆண்டு துவக்கினீர்கள்? அதற்கான தேவை இருந்ததா?
இந்திய அரசியலிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி 1980கள் ஒரு பதற்றமான காலகட்டம். தமிழநாட்டில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒட்டு மொத்தமாக தீண்டாமைக் கொடுமையின் காரணமாக இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தழுவுவது காலம் காலமாக நடைபெறும் ஒன்று. ஆனால் அப்பொழுது பார்ப்பன செய்தியாளர் சுப்பிரமணியன் என்பவர் இந்தியன் எக்ஸ்ப்ரசில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய செய்தியில் ஒரு முழு கிராமமே இஸ்லாத்தை தழுவியது என்று எழுதி அது வால்போஸ்டர் செய்தியாக வெளிவந்தது. அது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அணி சேரா மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த இனவெறி அரசுக்கு எதிரான தீர்மானம் அங்கு நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. அப்பொழுது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நிருபர் எழுந்து, ‘நீங்கள் இனப் பாகுபாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் நாட்டில் அது கடை பிடிக்கப்படுகிறதே’ என்று கேட்டார். இந்திரா காந்தி அதை மறுத்தார். ஆனால் நிருபர் விடாப்படியாக, மீனாட்சிபுரத்தில் என்ன நடக்கிறது? என்று எதிர்க்கேள்வி கேட்டார். அந்தளவுக்கு பரபரப்பை உண்டு பண்ணிய நிகழ்ச்சி அது.
அந்தக் காலகட்டங்களைத் தொடர்ந்து, காலம் காலமாக அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்று பழகி வந்த தமிழ்நாட்டில் பிரிவினை உண்டானது. அதற்கான சூழ்நிலை தமிழ்நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமகோபலன் நியமிக்கப்பட்டிருந்தார். அதன் தலைவராக தமிழ்நாட்டில் பரவலாக வாழக்கூடிய நாடார் சமுதாயத்தைச் சார்ந்த தாணுலிங்க நாடார் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்து தமிழ்நாட்டில் மண்டைக் காட்டு கலவரம் மூண்டது.இந்திய அளவில் 1984ல் முதன் முதலாக அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை நோக்கி, சீதை பிறந்த இடம் உள்ள நேபாளத்திலிருந்து ரத யாத்திரை நடத்த சங் பரிவாரங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் இந்திராகாந்தி கொல்லப்பட்டதை அடுத்து அது ஒத்திப் போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1985&86களில் மீண்டும் ரத யாத்திரை நடைபெறுகிறது.
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் அப்போது நடைபெற்றது. அந்தச் சமயத்தில் உமேஷ் சங்கர் பாண்டே என்ற வழக்குரைஞர் நான் ஒரு ராம பக்தர். நான் கடவுளை வழிபடத் தடையாக கோவிலில் பூட்டுப் போடப்பட்டிருக்கிறது. எனக்கு ராமரை வழிபட அனுமதி வேண்டும் என்று மனு போட்டார். ஆனால் அதை முனிசிபல் நிராகரித்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து லக்னோ மாவட்ட நீதிபதியிடம் முறையிடுகிறார். இந்த வழக்கு மாவட்ட நீதிபதியால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் பொழுது, பாபர் மசூதியை நிர்வாகம் செய்யும் முத்தவல்லி, ஏற்கெனவே இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் உள்ளது. நீங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்லக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பூட்டப்பட்ட கதவுகள் திறக்க உத்தரவிடப்படுகின்றன.1942 டிசம்பர் 21ம் தேதிவரை பாபர் மசூதியில் தொழுகை நடந்துள்ளது. அன்று வெள¢ளிக் கிழமை தொழுகை நடந்த பிறகு, சிலர் உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து, தொழுகை செய்யும் பீடத்தில் போய் ராமர், லட்சுமணன் அனுமார் சிலைகளை வலுக்கட்டாயமாக உள்ளே வைத்து பிரச்சினையை ஆரம்பிக்கின்றனர். உடனடியாக இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் இந்தியா முழுவதும் காட்டப்பட்டது.
அத்வானி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் 1985களில் ராமர் கோவில் இயக்கத்தை மிகப்பெரிய இயக்கமாக கட்டி எழுப்பினார்கள். இதன் முடிவில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை கலவரங்கள். இதில் முஸ்லீம் சமூகத்தினர் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். கேட்கவே அஞ்சும் கொடூரம் இது.ஆனால், அதே நேரத்தில் முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லக்கூடிய அரசியல் சக்திகள் அதை சரியான முறையில் நிறைவேற்றத் தவறிவிட்டன. உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலையில் 1992ல் முஸ்லீம் லீக் கட்சியானது காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அப்போது பதவியில் இருப்பதற்குக் காரணமே முஸ்லீம் லீக் ஆதரவு இருந்ததினால்தான். மசூதி இடிக்கப்பட்டவுடன் நரசிம்மராவ் எதுவுமே செய்யவில்லை என்பது தெரியும். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதிகளை அளிக்கிறார். அதன் பின்பு அன்று, முஸ்லீம் லீக் தலைவர்கள் இப்ராஹிம் சுலைமான் சேட் தலைமையில் பிரதமர் நரசிம்மராவைச் சந்திக்கிறார்கள். அவர் நரசிம்மராவைப் பார்த்து கோபமாக நீங்கள் எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள், எங்களுக்கு இந்தப் பிரச்சினையில் உரிய தீர்வு வேண்டும் என்று கோபமாகக் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு காரணம் கேரளாவில் உள்ள கருணாகரன் அமைச்சரவை நம் தயவில்தான் இருக்கிறது. நாம் ஆதரவை வாபஸ் வாங்க முடியும் என்று கருதுகிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், முஸ்லீம் லீக் கட்சிக்காரர்கள் பாபர் மசூதி இடிப்பைவிட கருணாகரன் அமைச்சரவையில் பங்கு வகிப்பதே மேலானது என்று கருதி இப்ராஹிம் சுலைமான் சேட்டை தூக்கி வெளியில் எறிந்தார்கள். இதுதான் நடந்த நிகழ்வு.இதை எதற்குச் சொல்கின்றேன் என்றால் அரசியல் கட்சிகளும் சரி, முஸ்லீம் தலைவர்களும் அந்தச் சமூகத்தின் உண்மையான கோரிக்கைகளுக்கும் தேவைப்படும் உரிமைகளுக்கும் காது கொடுத்துக் கேட்காத சூழ்நிலையில் ஒரு அமைப்பிற்கான தேவை இருந்தது. மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் ஏற்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களும், அதிக இழப்பைச் சந்தித்தவர்களும் முஸ்லீம்கள்தான். அதிக அளவில் சிறைக்கு உள்ளே தள்ளப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தடா சட்டத்தை அமல்படுத்துகிறார்கள். ஆனால் அந்தச் சட்டம் முஸ்லீம் மக்கள் மீதும் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமிழ்நாட்டில் சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அஞ்சி நடுங்கிய நிலையில்தான் ஜனநாயகப்பூர்வமான முறையில் வீதிக்கு வந்து தீர்வு காணவேண்டும் என்ற நோக்கிலும் முஸ்லீம்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினோம்.
1999ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டுவரை த.மு.மு.க. செயல்பட்டிருக்கிறது. அதன் தலைவராகவும் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் துவங்கும்போது திட்டமிட்ட பணிகளைச் செய்து முடித்திருக்கிறீர்களா?
பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டும் இந்த இயக்கத்தை துவங்கினாலும் காலப் போக்கில் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் குரல் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. உதாரணமாக அதே வருடத்தில் கொடியங்குளம் பகுதியில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்து செப். 15ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தோம். தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் முஸ்லீம் மக்கள் இடையே அரசியல் விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறோம். காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி, சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அஞ்சி நடுங்கிய சமுதாயம், காவல்துறையைப் பார்த்தாலே பயந்த சமுதாயம், சமூகச் செயல்பாட்டை அச்சம் கலந்த செயலாக நினைத்துக் கொண்டிருந்த சமுதாயம் இன்று எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்றால் எங்கேனும் ஒரு மனித உரிமை மீறல் நடக்கிறது என்று தெரியவந்தால் அந்தப் பகுதி தமுமுக பொறுப்பாளர் காவல் துறை ஆய்வாளரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் அளவிற்கு முஸ்லீம்களை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. கல்வி விழிப்புணர்வையும் த.மு.மு.க. அதிக அளவிற்கு முஸ்லீம் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
சாதாரணமாக முஸ்லீம்கள் உரிய வயதை அடைந்தவுடன் பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மலேசியா, சிங்கப்பூருக்கு தொழில் நிமித்தமாக சென்றுவிடுவார்கள். படிப்புக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காத சமுதாயம் இது. இன்றைக்கும் வெளிநாட்டிற்கு வேலை தேடிப் போகிறார்கள். ஆனால் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்தாரிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அளவிற்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் இது போக சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறோம். சுனாமி போன்ற பேரிடர் வந்தபோது பெருமளவு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ரத்த தானத்தை இயக்கமாக ஆக்கி அனைவருக்கும் இந்தச் சேவையைச் செய்து வருகிறோம்.
சுவாரஸ்யமான செய்தி ஒன்று சொல்ல வேண்டுமானால், காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்பொழுது மருத்துவர் எங்களை அனுகினார். நாங்களும் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அவருக்கு ரத்தம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினோம். அவர் உயிர் பிழைத்தவுடன் மருத்துவர் அவரிடம், நீங்கள் யாரை இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு ரத்தம் அளித்து காப்பாற்றினார்கள் என்று கூறினார். இது எங்களால் மறக்க முடியாத ஒன்று.
இதுவரை பணியாற்றியதில் த.மு.மு.க.வின் முக்கிய அரசியல் வெற்றியாக எதைக் கருதுகின்றீர்கள்?
1960களில் தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் அரசியல் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் மறைந்த காயிதே மில்லத். அவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்த காரணத்தினால்தான் அண்ணா அவர்கள் 1967ல் ஆட்சியைப் பிடித்த போது குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அவரது வாழ்த்துக்ளைப் பெற்றார். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணிகளை, சமூக பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் நலனை வலியுறுத்தி அவர்களின் உரிமைக்காக போராடவேண்டியவர்கள், அவர்களின் பணிகளைச் செய்யவில்லை. ஆளும் கட்சியின் செல்வாக்கையும் வென்றெடுக்க முடியவில்லை. 1995ல் தமுமுக ஆரம்பித்த பிறகு இதற்கான பணிகளை திட்டமிட்டு உருவாக¢கிவருகிறோம். அதில் முக்கிய வெற்றி என்று கூறவேண்டுமானால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது.
நாங்கள் இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து இதை வலியுறுத்தி வந்தோம். 2006 சட்ட மன்றத் தேர்தலில் தீவிரமாக வலியுறுத்தினோம். மே மாதத்தில் கலைஞர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 2007ல் சிறுபான்மை மானியக் கோரிக்கை மசோதாவின் மீது நடைபெற்ற விவாத¢தில் பதிலளித்து பேசிய முதல்வர், ‘‘இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு அளிப்பது எங்களின் நோக்கம். ஆனால் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது முடிந்ததும் உரிய ஆவன செய்யப்படும்’’ என்று உறுதியளித்தார். அதற்கு பதிலளித்த நாங்கள் அந்த வழக்கு 1991&ல் இருந்தே நிலுவையில் இருக்கிறது. அது முடிய காலதாமதம் ஆகும் என்று பதில் கூறினோம். 2007 டிசம்பர் 31க்குள் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் தொடர்ச்சியாக தடையை மீறும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறோம். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 13ம் தேதி எங்களுக்கு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தந்தார். இதன்மூலம் இருப்பதில் எதைச் சிறப்பாக செய்யமுடியுமோ அதைச் செய்துவிட்டோம் என்ற திருப்தி இருக்கிறது.
இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மிகப்பெரிய பலன் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. உதாரணமாக 2007&08 கல்வியாண்டில் 13 இஸ்லாமிய மாணவர்களே மருத்துவ படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இட ஒதுக்கீட்டு கிடைத்த நடப்புக் கல்வியாண்டில் 53 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அதே போல இன்ஜினீயர் படிப்புகளில் 2007&08 கல்வியாண்டில் 700 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால் நடப்புக் கல்வியாண்டில் 2003 மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கோரிக்கையும் நிலுவையில் இருக்கிறது. அது காலப்போக்கில் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில், அதில் சம்பந்தப்படாத முஸ்லீம்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் தொடர்ந்து சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் த.மு.மு.க. சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் முஸ்லிம்களிடமிருந்து எழுகிறதே?
நீங்கள் கோவை குண்டு வெடிப்பை பற்றி மட்டும் கூறுகிறீர்கள் அதற்கு முன்னால் கான்ஸ்டபிள் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தைப் பற்றியும் பேச வேண்டும். 1997 நவம்பர் 20ல் கான்ஸ்டபிள் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிகப்பெரிய கலவரம் திட்டமிட்டு நடைபெற்றது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, காவல்துறையினர் ஆகிய மூன்று தரப்பினரும் திட்டமிட்டு இணைந்து இந்தக் கலவரத்தை நடத்தினர். அப்போது ஆட்சி இருந்ததா என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்தக் கலவரம் நடைபெற்றது. கலவரம் நடைபெற்ற பொழுது தமுமுகவின் தலைவர் என்ற முறையில் நடைபெற்ற கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்து டெல்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் ஆனையத்திற்குச் சமர்ப்பித்தோம். அதற்கு தகுந்த பரிகாரம் கிடைக்கவில்லை.
நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அரசு நியமித்தது. ஆனாலும் சொத்தை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை இந்த ஆணையம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் யாருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நடைபெற்றது தான் கோவை குண்டுவெடிப்பு. ஆனாலும் இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு வன்முறை இன்னொரு வன்முறைக்குத் தீர்வாகாது. மேலும் அப்பொழுது இருந்த தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் தாகீர் அகமது அவர்களிடம் த.மு.மு.க. சார்பில் சென்று ஒரு குழுவாக வரவழைத்து கோவை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வெடிப்பை நடத்தியவர்கள் முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல. ஆனால் ஒரு கையில் குண்டும் இன்னொரு கையில் குரானும் வைத்திருப்பதாக முஸ்லீம்கள் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டனர். அன்று மாலையே நானும் மற்ற சிலரும் கைது செய்யப்பட்டோம்.அதற்குப் பிறகு வழக்கு நடைபெற்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தன. நீண்ட காலம் நடைபெற்றும் வழக்கு முடியவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த பொழுது நாங்கள் வைத்த முக்கியக் கோரிக்கையே கோவை குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு கூறவேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில் ஆட்சி அமைந்தவுடன் ஆமை வேகத்தில் நடைபெற்ற வழக்கு விரைவாக நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 166 பேர் மீது வழக்கு இருந்த ந¤லையில் வழக்கு விசாரணைக்கு இடையில் ஒருவர் மரணமடைந்தது போக 40 பேரைத் தவிர மீதமுள்ள சிலர் விடுதலை செய்யப்பட்டனர். சிலரது சிறைக்காலம் தண்டனைக் காலமாக கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பாஜக, இந்து முன்னணி கட்சியினரின் தூண்டுதலின் பேரில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். நாங்கள் வைத்த முக்கியக் கோரிக்கை வழக்கு விரைந்து முடிக்கப்படவேண்டும் என்பது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எங்களுக்கு குறையும் இருக்கிறது. சமீபத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தது. சிறையில் 7 ஆண்டுகள் இருந்தவர்கள் கூட விடுதலை செய்யப்பட்டனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமல்ல வேறு சில வழக்கிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருப்பவர்கள் விடுவிக்கப்படவில்லை. அதற¢கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காரணமாகச் சொல்கிறார்கள். நாங்கள் அதை பாகுபாடாகவே கருதுகிறோம். குற்றம் நடைபெற்று தண்டனை பெற்ற பின்பு கைதிகளிலே பாரபட்சம் காட்டப்படக¢கூடாது. மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி கொலையில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அதே சமயம் தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லாமல் சமூகக் காரணங்களுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறைவு செய்த முஸ்லீம்களை விடுவிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
நாங்கள் தி.மு.க. அ.தி.மு.க இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளோம். 1999ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவை வைத்து முஸ்லீம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். அதில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினர். அந்த மாநாட்டில்தான் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் கூறினார். நீங்கள் எனக்கு ஆதரவளித்தால் நீங்கள் விரும்பக்கூடியவற்றை நிறைவேற்றி வைப்பேன் என்றும் கூறினார். அ.தி.மு.க சார்பிலே அவரது பேச்சு புத்தகமாக கூட வெளிவந்திருக்கிறது. அதற்கு பிறகு 2001ம் ஆண்டு அவருடன் கூட்டணி வைத்தோம். ஆனால், எங்கள் கோரிக்கைகளை கடைசி வரை அவர் நிறைவேற்றவில்லை. ஆனால், கலைஞர் எங்களின் மிக முக்கியமான கோரிக்கையான இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார். மற்றபடி, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் கூட்டணி வைத்துள்ளன. வித்தியாசம் ஒன்றுமில்லை. கலைஞர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.
முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற இஸ்லாமியர்களுக்கான அமைப்பை நடத்தி வந்தீர்கள். இப்பொழுது மனிதநேய மக்கள் கட்சி என்ற அனைவருக்குமான அமைப்பை துவங்கியிருப்பதாகச் சொல்கிறீர்கள். இதில் மற்ற மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்னவிதமான அங்கீகாரம் கிடைக்கும்? மதச்சார்பின்மை பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு. இங்கு எல்லா மதத்தினரும் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுவதற்கும், அதைப் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமை அனைவருக்கும் அவரவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் கொடுக்கப்பட வேண்டும். இதில் எந்தவகையிலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவோ, அல்லது எதிராகவோ அரசியல் நடத்துவது கூடாது. இதுதான் மதச்சார்பின்மை பற்றிய எங்களது விளக்கம். மனிதநேய மக்கள் கட்சி வேறு. த.மு.மு.க. வேறு. த.மு.மு.க இஸ்லாமியர்களை விழிப்படையச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆனால் மனிதநேய மக்கள் கட்சி அனைவருக்கும் பொதுவான ஒன்று. இன்றைய அரசியல் தூய்மையற்றதாக, சுயநலம் அற்றதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கியுள்ளோம். ஆனால், இப்பொழுது உள்ள அரசியலானது தேர்தலில் போட்டியிடுவதற்கு செய்யும் செலவினை முதலீடாகவும், தேர்தலுக்குப் பிறகு அதை வருமானம் ஈட்டும் துறையாகவும் மாற்றியுள்ளனர். அதை மாற்றும் எண்ணம் எங்களுக்கு உள்ளது. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினர், தலித்துகளுக்கு உரிய பங்கும், உரிமையும் அளிக்கப்பட வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இந்த கட்சியில் முஸ்லீம் அல்லாதோரும் பதவியில் இருக்கிறார்கள். எந்த மக்களுக்கு நாங்கள் பிரதிநிதிகளாக இருக்கிறோமோ, அவர்களது தேவைகளை, உரிமையை சிறப்பாக நிறைவேற்றுவோம் என உறுதி கொண்டுள்ளோம்.
ஈழத்தில் சிங்கள அரசினால் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. சிங்கள அரசுக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஈழப் பிரச்சினையில் உங்களது கருத்து என்ன? அங்கு நடைபெறக்கூடிய சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் ஈழப் பிரச்சினையில் அமைதியாக இருப்பது போல் ஒரு தோற்றம் நிலவுகிறதே?
ஈழப் பிரச்சினையில் நாங்கள் தி.மு.க ஏற்படுத்தியுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கிறோம். எங்கள் கட்சி நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக எடுத்து வைத்துள்ளோம். சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் நலப் பாதுகாப்புப் பேரவை பொதுக்கூட்டத்தில் நான் அதைப்பற்றி தெளிவாக பேசியுள்ளேன். நான் பேசியது என்னவென்றால், இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் செய்யவில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறுகிறார். ஆனால், அவர் சொல்லி முடித்த இரண்டாவது நாளில் தாம்பரத்தில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக செய்தி வருகிறது. அதன்பின்பு முதல்வர் தலையிட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் செய்தி வருகிறது. இதுபற்றி விளக்க வேண்டும். இப்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு இலங்கைக்கு என்னென்ன மாதிரியான உதவிகள் செய்துள்ளது. அல்லது செய்யவில்லை என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினேன்.
நான் கூறியவுடன் பொதுக்கூட்டத்தின் மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட நெளிந்தார்கள்.எங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறுகிறேன். ஈழத்தில் இப்பொழுது நடைபெறும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. ஜப்பானோ, எங்கேயோ இருக்கும் நார்வேயோ எடுக்கிற முன்முயற்சிகளை விட இந்தியா முன்முயற்சி எடுத்தால் ராஜபக்ஷேவுக்கு இந்த அளவுக்கு துணிச்சல் இருக்காது. இது ஒரு விஷயம். இரண்டாவது, இந்த விஷயத்தை முழுமையாகப் பார்த்தோமானால், வடகிழக்கில் தமிழ் பேசும் முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவரவர்களுடைய உரிமைகளைக் காக்கக்கூடிய சமாதானத் திட்டம் காணப்பட வேண்டும். அவரவர் நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிவகைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர்களுக்கான தனி நாடு கோரிக்கை எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை? அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கருதுகிறேன். இந்தியாவில் உள்ள கூட்டாட்சி முறையைப் போல அங்கேயும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மதம் என்ற ஒற்றை அடையாளத்திலேயே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிலே கூட தமிழர் என்ற இன அடையாளம் தாண்டி, அவர்களின் மதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இங்கு முஸ்லீமாகிய எனக்கு சில அடிப்படை கடமைகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு 5 முறை தொழ வேண்டும் என்பது கட்டாயக் கடமை. ஆண்டுக்கொருமுறை 30 நாள் நோன்பு இருக்க வேண்டும். அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. தாடி வைப்பது என் வழிமுறை. அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. முஸ்லீம்களுக்கு மத ரீதியாக உலகளாவிய அடையாளம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் எனது இன அடையாளம் தமிழ். அதையும் நான் மறுக்கவில்லை. சங்க கால இலக்கியத்திற்கு பிறகு நாம் தமிழை இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால், அதில் முஸ்லிம்களின் பங்கு மிகப்பெரிய அளவு உள்ளது.
நீங்கள் த.மு.மு.க ஆரம்பித்த போது, தலித் அமைப்புகளுடன் இருந்த இணக்கம் இப்போது இல்லை. எதனால்? மேலும் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் சாதி பார்ப்பதில்லை. ஆனால், தலித்துகளை இந்துக்களைப் போல தீண்டாமையுடன் நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
அப்பொழுது இருந்த சூழ்நிலையே இப்பொழுதும் நிலவுகிறது. எங்களுக்குள் எவ்வித இணக்கமும் குறையவில்லை. அப்பொழுது மிக உக்கிரமான அளவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்று வந்தது. அதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியுடனும், இதர தலித் அமைப்புகளுடனும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். கொடியங்குளத்தில் தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறையைக் கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்துள்ளோம். இப்பொழுதும் தலித் அமைப்புகளுடன் இணக்கமான சூழநிலையே இருந்துவருகிறது. அடுத்ததாக இஸ்லாமியர்களும், இந்துக்களைப் போல ஜாதி பார்பப்தாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டு தவறான ஒன்று. அந்த மாதிரியான சூழ்நிலை எங்கு இருக்கிறது என்று சொன்னால் நாங்களே நடவடிக்கை எடுப்போம். இன்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு தலித் மக்கள் செல்வதும், அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பதும் அவர்களின் வீட்டில் விருந்து உண்பதும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. அதைப்போல தலித்துகளின் வீடுகளிலும் இஸ்லாமியர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றியே பழகுகிறார்கள். நீங்கள் எங்காவது தலித் மக்கள் மீது இஸ்லாமியர்கள் தீண்டாமை பார்ப்பதாக கூறினால் எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நானே நேரடியாக நடவடிக்கை எடுக்கிறேன்.
சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், அப்துல் குரு விஷயத்தில் அப்படி ஒரு எதிர்ப்பினை இங்கே யாரும் தெரிவிக்கவில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் கூட மௌனம் சாதித்து வருகின்றன. அவர்கள் இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதாக உணர்கிறீர்களா?
அப்சல் குரு விஷயத்தில் நமது கட்சித் தலைவர்கள் முழுமையாக தெளிவுடன் இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி. காரணம் என்னவென்றால், பொதுமக்களும் சரி, தலைவர்களும் சரி இந்த விஷயத்தில் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே என் கருத்து. எடுத்துக்காட்டாக அப்சல் குரு மீதான குற்றச்சாட்டு விஷயத்தில் எதுவுமே ஊர்ஜிதமாக நிரூபணம் செய்யப்படவில்லை. தாக்குதல் நடைபெற்றவுடன் இப்போதைய அறிவியல் மற்றும் விஞ்ஞானத் துறை அமைச்சர் கபில்சிபல் மற்றும் நஜ்மா ஹெப்துல்லா இருவரும் ஒரு கருத்தை கூறினார்கள். ‘நாங்கள் சி.சி. டி.வி.யில் பார்த்தோம். பாராளுமன்றத்தை தாக்குவதற்காக 7 பேர் அம்பாசிடர் காரில் வந்தார்கள். நீங்கள் 6 பேரை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் அநத் ஏழாவது நபர் எங்கே?’ இது அவர்களின் கேள்வி. அந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை.
பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படப் போகிறது. பாராளுமன்ற கட்டடத்திற்கு பாதுகாப்பு இல்லை என்று வாஜ்பாய் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் அடிக்கடி பேசி இருக்கின்றார்கள். அதன் பிறகுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கோணத்திலும் நாம் இதை ஆராய வேண்டும். அருந்ததி ராய் பாராளுமன்றத் தாக்குதலை முன்வைத்து ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அவரது எந்தக் கேள்விக்கும் யாரும் முறையான பதிலைக் கூறவில்லை. மேலும், அப்சல் குரு மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகி இருக்கிறதா என்று பார்த்தோமானால் அதுவும் இல்லை. அப்சல் குரு மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்படவில்லை என்றும், அவருக்கு இதில் பங்கு இருக்கிறதா? என்பதற்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் என்று கூறி தூக்கில் போடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற ஒரு அபத்தமான தீர்ப்பை நாம் எங்கும் கேட்டிருக்க முடியாது.
அப்சல் குரு விஷயத்தில், அதுபற்றிய தெளிவு நம்நாட்டு மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.இங்கு எல்லாமே திட்டமிட்டு அவதூறு பரப்புவதில்தான் இருக்கிறது. இங்கு நடைபெறும் குண்டுவெடிப்புகள், விசாரணை நடைபெறும் முன்பே இன்னார்தான் இதைச் செய்தார்கள் என்று ப்ளாஷ் நியூஸ் போடுகிறார்கள். இங்கு ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் முஸ்லீம் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் தான் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பெரிய அளவில் செய்தி வருகிறது. ஆனால், அதன்பின்பு அவர் விசாரிக்கப்பட்டாரா? குற்றம் நிரூபிக்கப்பட்டதா? என்று ஒரு செய்தியும் வரவில்லை. லக்னோவில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நடைபெறுகிறது. அதற்காக அப்சார் அன்சாரி என்பவரை கல்கத்தா எலெக்ட்ரிக் கடையில் வேலை செய்தவரை பிடித்து வந்து இவர்தான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள். பல மாஜிஸ்திரேட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவரை நிமிர்ந்து கூட பார்க்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு ரிமாண்டில் வைக்க உத்தரவு பிறப்பிப்பார்கள். ஆனால், லக்னோ மாவட்ட நீதிபதி முழுமையாக விசாரணை செய்து நீங்கள் சொல்லும் குற்றவாளி இவர் இல்லை என்று விடுதலை செய்தார். ஆனால், இது மிகச்சிறிய செய்தியாக வெளிவருகிறது. மக்களிடையே குண்டுவெடிப்பு போன்ற பிரச்சினைகள் முஸ்லீம்களை தொடர்புபடுத்திவரும் செய்திகளில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரிய அளவுக்கு இருக்கிறது.
இஸ்லாம் மதத்தின் மீது தஸ்லிமா நஸ்ரீன், தமிழ்நாட்டில் ஹெச்.ஜி. ரசூல் போன்றோர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் ஊர் விலக்கல், போன்ற தாக்குதல்கள் நடைபெறுகிறதே. இஸ்லாம் தன் மீதான விமர்சனத்தை ஏன் அனுமதிக்க மறுக்கிறது? நீங்கள் அத்தகைய தாக்குதல்களை ஆதரிக்கின்றீர்களா?
தஸ்லிமா நஸ்ரீன் முஸ்லிம் பெண்களின் உண்மையான பிரதிநிதி அல்ல. அவரது கருத்துக்கள், கலாச்சார சீர்கேட்டிற்கு எடுத்துச் செல்லும். அதையட்டியே அவர் பேசியும், எழுதியும் வருகிறார். அனைவருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது. ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘என்னுடைய உரிமை உனது மூக்கின் நுனி வரை முடிவடையும் என்று’ அதன் அடிப்படையில்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.ஹெச்.ஜி. ரசூலைப் பொறுத்தவரையில் அவருக்கும், அவரது ஜமாத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினையில்தான் ஊர் விலக்கம் நடைபெறுகிறது. ஹெச்.ஜி. ரசூல் தெரிவித்த கருத்து எங்கள் கருத்தல்ல. ஆனாலும், ஜமாத் அவர் விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகளில் நாங்கள் உடன்படவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்திற்காக செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதை நான் இங்கிருந்து முடிவெடுக்க முடியாது. இந்த விஷயத்தில் ரசூல் தரப்பு செய்தியே பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது. ஜமாத் தரப்பு செய்திகள் எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை. அதையு¢ம் கேட்டுத்தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் சொல் ‘ஜிகாத்’. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல், ஆப்கன், ஈராக் போன்ற நாடுகளில் நடைபெறும் சம்பவங்கள், ஜிகாத் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஜிகாத் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
ஜிகாத் என்ற சொல் மிகவும் மோசமாகவும், தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை, எந்தப் பாவமும் செய்யாத மக்களை கொன்று குவித்து, தங்களுடைய அரசியல் லட்சியங்களை அடைவதுதான் ஜிகாத் என்றால் அந்த ஜிகாத் எங்களுக்குத் தேவையில்லை. அதை ஆதரிக்கவும் இல்லை. உதாரணத்திற்கு தற்போது மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். அதை நாங்கள் ஆதரிக்க முடியாது. அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்கா உலகில் பல்வேறு நாடுகளை சென்ற நூற்றாண்டிலிருந்தே அடிமைப்படுத்தியும், அடக்குமுறைகளை ஏவியும், சுரண்டியும் வந்தது. இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது. இனியும் செய்யும். அது வேறு விஷயம். ஆனால் அதை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு, ஒரு விமானத்தைக் கடத்தி (இந்தத் தாக்குதல் உண்மையாக இருக்குமானால்) அப்பாவி மக்களை கவசமாக்கி, இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்தி அதிலுள்ள மக்களை கொல்வது மிகவும் கொடுமையான ஒன்று. அதில் உள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இதுதான் ஜிகாத் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை.
ஆனால், தன் தாய்நாடு அந்நியனால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு குடிமகன் கருதுவானேயானால், அங்கு நடைபெறும் போராட்டத்தை ஆதரித்துதான் ஆகவேண்டும். உதாரணத்திற்கு, பாலஸ்தீனம் இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்றவை அமெரிக்காவால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் தங்கள் மண்ணை விடுவிப்பதற்காக நடத்தும் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அது ஜிகாத் தான். ஆகவே ஜிகாத் பற்றிப் பேசும் போது அதன் வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
த.மு.மு.க நிறைய ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது. அதில் நிறைய முஸ்லீம் பெண்கள் பங்கேற்று இருக்கிறார்கள். ஆனால், த.மு.மு.க.விலும் சரி, புதியதாக துவங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியிலும் சரி இஸ்லாமியப் பெண்களுக்கு எவ்வித பிரதிநிதித்துவமும் தரப்படவில்லையே? இஸ்லாமிய பெண்களுக்கு உரிய அங்கீகாரம் ஏன் வழங்கப்படவில்லை?
மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழாவில் நீங்கள் கூறியது போல மேடையில் யாரும் பெண்கள் பேசவில்லை. அது உண்மைதான். இப்பொழுதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம். போகப்போக பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். அதற்கான செயல்திட்டம் வைத்திருக்கிறோம். ஒரேநாளில் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. படிப்படியாக பெண்கள் அனைத்து பதவிகளிலும் அமர்த்தப்படுவார்கள். த.மு.மு.க.வில் மகளிர் அணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒபாமா அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். அவர் தலைமையில் மாற்றம் வரும் என்று ஒரு சாரார் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் திரிகிறார்கள். உண்மையில் அவர்களது கனவு நிறைவேறுமா?
ஒபாமா ஒரு முகமூடி அவ்வளவுதான். அவர் கறுப்பினத்தவர், இஸ்லாமிய பின்னணியைக் கொண்டவர் என்று நம் மக்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். அதெல்லாம் மாயை. அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அமெரிக்காவை ஆட்சி செய்வது பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள்தான். என்னைப் பொறுத்தவரை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது என்று திட்டவட்டமாக நம்புகிறேன்.
கீற்று . காம் (சமுக விழிப்புணர்வு)