Sunday, August 8, 2010

வரலாற்றுப் புரட்டுக்கள்!

திரிக்கப்பட்ட முஸ்லிம் படையெடுப்புகளும், மறைக்கப்பட்ட இந்து படையெடுப்புகளும்.. இந்தப் பதிவிற்காக பின்னூட்டமும் அதற்காக எனது எதிர்வினையும்.

http://pakirndhun.blogspot.com/2010/08/pinnoottam-7-august-2010.html#comment-form

ஐயா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கியதன் விளைவு தான் "ஜிகாத்" பற்றிய உங்கள் அபிப்ராயம். அதுவும் "கேள்விபடுகிறேன்" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் உங்களுக்கு ஜிகாத் மற்றும் திருக்குரான் பற்றிய தவறான தகவல்கள் தான் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. குரான் தமிழில் இருக்கிறது படித்து பாருங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். மேலும் அறிய எனது பழைய பதிவை இங்கே சென்று பாருங்கள். உங்களுக்கு ஜிகாத் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம். http://meiyeluthu.blogspot.com/2009/01/blog-post.html

அடுத்து நாம் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி ஆராய( சிவசுப்பிரமணியன் போல) வேண்டும். அப்படியே முஸ்லிம் மன்னர்கள் வாள்முனையில் மதம் மாற்றியிருந்தால் அது இஸ்லாத்திற்கு எதிரானதே.

பாபர் தன் நோயுற்ற கடைசி காலங்களில் தன் மகன் ஹுமாயுனிடம் " நீ முஸ்லிமல்லாத மக்கள் நிரம்பிய ஒரு தேசத்தை ஆளப்போகிறாய். அவர்கள் பசுவை தெய்வமாக வழிபடுகின்றனர், உன் மார்க்கத்தில் பசுவை பலியிடுவது தவறு இல்லையென்றாலும் அவர்களின் மனதை புண்படுத்தாமலிருக்க நீ பசுவை பலியிடுவதை தடுத்துக்கொள்வது நல்லது" என்கிற ரீதியில் அறிவுரை சொன்னதாக பாபரின் சுயசரிதையான "பாபர் நாமா" வில் இருக்கிறதாக படிக்கிறோம். அது இன்னளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரா ராமர் கோவிலை இடித்திருப்பார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

அடுத்து ஜிஸ்யா வரி பற்றிய உங்களது புரிதலும் பிழைதான். மொகல் மன்னர்களில் அவுரங்கசீப் ஓரளவு முஸ்லிமாக வாழ்ந்தவர் என்றும் எளிமையான வாழ்வும் கிட்டத்தட்ட இந்தியாவியே ஆண்ட மிகப் பெரிய சக்ரவர்த்தியாக இருந்த போதும் தன் உழைப்பால் உண்டவர் என்பது வரலாற்றுப்பக்கங்களில் காணலாம். அவர் பல கோயில்களூக்கு மானியம் வழங்கியுள்ளார் என்பது கோயில் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த தகவல் எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்திருந்தால், முஸ்லிம்களை விட இந்துக்கள் நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் எவ்வாறு வாழ முடியும்? என பாபு நாகேந்திரநாத் பானர்ஜி என்ற வரலாற்றாசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒளரங்கசீப்பின் படையில் தலைமைத் தளபதியாக இருந்தவர் ஒரு இந்து. ஜஸ்வந் சிங், ஜெயசிங் என்ற இரண்டு முக்கிய இந்து தளபதிகள் 2000 முதல் 5000 வரை உள்ள படைகளுக்கு தளபதிகளாக இருந்துள்ளனர். ராஜாவீம் சிங், இந்திரா சிங், அச்சால்ஜி ஆரியால்ஜி போன்றவர்கள் எல்லாம் ஒளரங்கசீப் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர்.
நிர்வாகத்தில் கஜானா பாதுகாப்பில், பொருளாதார அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இரண்டு இந்துக்கள் இருந்துள்ளனர். சில முஸ்லிம்கள் இதுபற்றி புகார் செய்தபோது, சரியான நபர்களை சரியான பொறுப்புகளில் நியமிக்க எனது மார்க்கம் வழிகாட்டுகிறது என்று ஒளரங்கசீப் பதில் கூறியுள்ளார்.

மேலும் ஜஸ்வந்தர் சிங், ராஜா ரூப், கபீர் சிங், பிரேம் சிங், திலீப்ராய், ராசிகால்ராய் போன்றோர் உயர் அதிகாரிகளாக இருந்துவந்தனர்.ஒளரங்கசீப் ஆட்சிப் பற்றி ஸ்ரீ சர்மா என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது, ''அவர் உண்மையான மதச்சார்பற்றவராக இருந்தார்; அக்பரின் அரசவையிலே 16 இந்துக்கள்தான் உயர் அதிகாரிகளாக இருந்தனர்; ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் 148 இந்துக்கள் உயர் அரசுப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.அலெக்ஸான்டர் காமிங்டன் என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது ''ஒளரங்கசீப் மொத்தம் 52 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவரது ஆட்சியில் மக்கள் சொந்த விருப்பத்தின்படி தங்கள் மதவழிபாட்டை நடத்திக்கொள்ள சுதந்திரமளித்தார்'' என்று குறிப்பிடுகிறார்.

'ஜிஸ்யா வரி விதித்து இந்துக்களை கொடுமைப்படுத்தினார்' என்றும் ஒளரங்கசீப் மீது குற்றம்சாட்டுகின்றனர். இந்துக்களில் போருக்கு வராத திடகாத்திரமான ஆண்கள் அதிலும் இளைஞர்கள் மீது மட்டுமே ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கப்படவில்லை. அதேநேரம், முஸ்லிம்களுக்கு ஜகாத், முஷ்ரி என்று பல்வேறு வரிகள் இருந்துள்ளன. விவசாயம், வருமானம் தொடர்பான வரிகள் இருந்துள்ளன. இந்துக்களுக்கு ஜிஸ்யா வரி மட்டும்தான் இருந்தது என்று ஜிமதலா சர்கார் சொல்கிறார். மேலும், மக்களுக்கு 65 வகையான வரிகளை முற்றிலுமாக நீக்கினார் எனவும் குறிப்பிடுகிறார்.

நாம் விஷமக் கருத்துக்கள் பரப்பப்படும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து இதுபோன்ற அவதூறுப் பிரச்சாரங்களை தடுத்துநிறுத்த வேண்டும்.

ஒளரங்கசீப்பின் அரசபையில் வங்காள கவர்னராக இருந்தவர் வள்ளல் சீதக்காதி அவர்கள் ஆவார்கள். அவரை சேதுபதி மன்னன் தன் உறவு முறையில் ஒருவராக ஏற்றுக் கொண்டு பட்டத்து பெரிய தம்பியாக ஆக்கினார். சேதுபதி மன்னர் இவருக்கு ரவிகுல ரகுநாத முத்து விஜய பெரிய தம்பி பட்டத்து மரைக்காயர் எனப் பட்டம் கொடுத்து சிறப்பித்தார். வள்ளல் சீதக்காதி அவர்களிடமே ஒளரங்கசீப் தம் பூமியான இராமேஸ்வரத்தில் இராமநாதன் கோவிலைக் கட்டும் பணியையும் ஒப்படைத்து அதை அவர் செய்து முடித்து சமயங்களிற்கப்பால் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்திய வரலாறு இன்று வரை நிமிர்ந்து நிற்கிறது. இதே சிற்பிகளையும் கற்களையும் வைத்து கீழ்க்கரையில் ஒரு பள்ளி வாசலையும் கட்டியுள்ளார். ஒளரங்கசீப்பை மதவெறியர் என்று கூறுவது ஒரு பொய்யான இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டாகும்.

ஜிஸ்யா வரியை வசூலித்ததன் நோக்கமே போரில் கலந்து கொள்ள இயலாத முஸ்லீமல்லாத குடிமக்களின் பாதுகாப்பையும் கருதி தான் என்ற உண்மையை எவரும் மறந்து விடக்கூடாது.

ஜஸ்யா வரி மூலம் இஸ்லாம் புகுத்தப்பட்டது என்பதும் வரலாற்றைத் திரிப்பதற்கு சமம்.

ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.
முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.

முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும்,

இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும்.

இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது.

எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.

ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.

குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.

ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.

ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.

வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.

அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?

எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.

இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?

சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.

தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,

வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.

இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.

சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.

இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.

இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.

அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன.

அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.

T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :

'"ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல".

ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.

' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜிகாத் என்றால் என்ன?

Monday, August 2, 2010

விடுதலைப் புலிகளின் குரூர முகம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் தூள் தூளாக போனது இவர்கள் இருவரின் பதிவுகளையும் வாசித்த போது.. இதற்கு எதிர்மறையான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி. ஸபீர் ‍ஹபீஸ்,சர்ஹூன்

விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்


இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு பதிவல்ல. ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல் அல்லது வாக்குமூலம். இதில் உள்ள நியாங்களினை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பது எனது திண்ணம்.
(சில விடயங்கள் மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கடிக்கப்படமுடியாது)

தமிழ் விடுதலை, தமிழர் உரிமைகள் என அது தொடர்பில் பல விடயங்கள் எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கையில், இன அடக்கு முறைக்கு எதிராக, ஆயுதங்களினை கையில் ஏந்திய விடுதலை இயக்கங்களில், விடுதலைப்புலிகளின் அஸ்திவாரம் மிக உறுதியானது. இன்று தமிழர் விடுதலை என்றால், புலிகளினை தவிர்த்து நோக்க முடியாமல் இருக்கின்றது.

எந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராக இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்ட்த்தில் குதித்தார்களோ, அதே அடக்குமுறையினை இன்னொரு சமூகத்தின் மீது அவர்களின் கை ஓங்கி இருந்த காலத்தில் திணித்தார்கள் என்பது பற்றி அறிவீர்களா நண்பர்களே? அவர்கள் முஸ்லீம்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சுமூக உறவு, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் ஆரோக்கியமாக இருந்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் தாமாகவே தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில பல கசப்பான அனுபவங்கள், பழிவாங்கல்கள் போன்றவற்றால் இறந்து போனது. அடித்தட்டு மக்களிடம், இன்னும் அவை சில சந்தர்ப்பவாதிகளாலும் இன்னும் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றது. அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் நன்மைக்கும் அமைவாக அமைந்தாலும், சில உண்மைகளினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் நான் பல தமிழக நண்பர்களினை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரதும் ஆதங்கம், ஈழத்தமிழ் உறவுகள் பற்றியதாக இருக்கும். அங்கு தமிழர்கள் படும் அவலங்கள், அழிவுகள் பற்றி எல்லாம் மிக மிக கவலையுடன் பகிர்ந்து கொள்வதைப்பார்க்கும் போது, எனக்குள் எழும் மற்றொரு கேள்வி- இதே இனப்பிரச்சினையால்,வேறொரு வகையில் பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை? அவர்களின் அவலங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் இருட்டடிக்கப்படுகின்றனவா? என்பது போன்ற வினாக்கள் என்னை அரித்துக்கொண்டிருக்கின்றன.

உடுத்த ஆடைகளுடன் மட்டும் நிர்க்கதியானவர்களாக யாழினை விட்டு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர்கள் அகதிகளாக புத்தளம் எனும் ஊரில் வாழ்கின்றனர். யாழின் பொருளாதாரத்தில் அன்று முக்கிய பங்காளிகளாக இருந்த மக்கள் இன்று அகதிகள். இந்நிலைக்கு காரணம் யார்?

அடக்கு முறைக்கு எதிரான விடுதலைப்போராட்டம் என்பது, இன்னொரு இனம் மீதான திணிப்பா? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
அதே போல், கிழக்கில் எத்தனை முஸ்லிம் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன? எதற்காக இறக்கின்றோம் என்பதனை அறியாமல் இறந்த உயிர்கள் எத்தனை? பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது கொலைவெறியாட்டம் நடத்தப்பட்டது.

ஏறாவூரில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். சிறு குழந்தைகள் பெண்கள் கோரமாக கொல்லப்பட்டனர். கர்ப்பிணிகள் வயிற்றினை கிழித்துக்கொல்லப்பட்டனர். கிறவல் குழி எனும் இடத்தில், விவசாயிகள் கைகள் கண்கள் கட்டப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர். இன்னும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயமும் விடுதலையின் பெயரால் கபளீகரிக்கப்பட்டிருக்கின்றன. பல நூற்றுக்கணக்கான வயல் காணிகள் “ மேய்ச்சல் நிலங்கள் “ என பிரகடனப்படுத்தப்பட்ட அடாவடித்தனங்களும் விடுதலை எனும் பெயரால் நிகழ்த்தப்பட்டன.

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி படுகொலைகள் பற்றி இன்று பேச யார் உள்ளார்கள். விடுதலை எனும் பேரில் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட சில அக்கிரமங்களின் பதிவுகள் இவை.







http://www.youtube.com/watch?v=VwIq4dACsMo

இவைகளின் நினைவுகள் ஒவ்வொரு முஸ்லிம்களின் மனங்களிலும் இன்னும் உள்ளன. தமிழர்களுக்கு எப்படி, முள்ளிவாய்க்கல் மற்றும் இன்னும் பலவோ அப்படி முஸ்லிம்களுக்கும் ஏறாவூர்,காத்தான் குடி, கிறவல் குழி என பலவும் உண்டு என்பதையும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் என்பது தமிழர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பது புரியப்பட வேண்டும். அப்புரிதல் அரசியல் தவிர்ந்து மன ரீதியாக நிகழ்ந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

அனைவரும் அவரவர் உரிமைகளுடன் மகிழ்சியாக வாழ வேண்டும் என்பதே எல்லோரது பிரார்த்தனையும், விட்ட தவறுகள் மேலும் எழாமல் பார்த்துக்கொள்வதும் எமக்கான கடமைகள் .
ஹ்த்ம்ல்">http://sarhoon.blogspot.com/2010/07/blog-post_05.ஹ்த்ம்ல்
======================================================
இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள். ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே. புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே. புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே. எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர். அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர். அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர். வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர். ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர். தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர். 25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 250 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது. அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும். இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது.

400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும்.

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 5000க்கும் அதிகமாகும்.மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள். இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன. இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 50 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும். ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார். முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார். குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள். தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர். இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி, பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர். முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது. ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள். இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள், சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும், புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?

உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?எவ்வாறாயினும்,இத்தகைய குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கி விடாமல், சுயமாகச் சிந்தித்து சொந்த புத்தியுடன் நடப்பதொன்றுதான், இந்தியத் தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் பேருதவியாக அமையும்.
http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html