7 Jun 2012
சென்னை:மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை கைதுச்செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறப்புக்குழுவை உருவாக்கியுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். கோவா மாநிலம் மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது.
கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளியான ஜெயப்பிரகாஷை (ஜெய் அன்னா என்ற ஜே.பி) தமிழகத்தின் கூடலூரிலும், கேரள மாநிலம் காஸர்கோட்டிலும் கண்டதாக புலனாய்வு ஏஜன்சிக்கு தகவல் கிடைத்தது. இவ்வழக்கில் தொடர்புடைய இதர 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ருத்ராபாட்டீல், டி.சாரங் அங்கோல்கர், ஆர்.பிரவீண் லிங்கர் ஆகியோர் கேரளா மற்றும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக இன்னொரு தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.
2009 அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் மர்கோவாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுகளை வைக்க பைக்கில் கொண்டு செல்லும்போது ஒரு குண்டுவெடித்து சிதறியது. மற்றொரு குண்டை போலீஸ் செயலிழக்கச் செய்தது.
தீவிர ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானைச் சார்ந்த 12 தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தியதாக புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. இதில் 2 பேர் வெடிக்குண்டை கொண்டு செல்லும்போது குண்டுவெடித்ததில் இறந்தனர். ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.
நான்குபேரைக் குறித்து தகவல் கிடைப்பவர்கள் தேசிய புலனாய்வு ஏஜன்சியின் ஹைதராபாத் கட்டுப்பாட்டு அறைக்கு கீழ்க் கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்:
040-277 64488/ 094937 99335/094937 99363/094937 99354
Source: Thoothuonline