முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது.
அது விழித்தெழும் போது வீரிட்டு எழும். எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும். இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
இந்தியாவை பாதுகாத்தல்:
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும். இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
ஷேர்கானின் இறப்பிற்கு பின் மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.
- பேரா. ஏ. தஸ்தகீர் –
இது தொடர்பான கீழுள்ள சுட்டிகளையும் சுட்டுங்கள்.