Wednesday, December 2, 2009

எப்போது துடைக்கப்படும் இந்த தேசிய அவமானம்?

பாபரி மஸ்ஜித் இடிப்பு: குற்றவாளிகளை தப்பவிடாதே! கொந்தளிக்கும் இந்தியா!


பாபரி மஸ்ஜிதை தகர்த்து தரைமட்டமாக்கி இந்தியத் திருநாட்டை அவமானச் சேற்றில் தள்ளிய குற்றவாளிகளை எந்த விதத்திலும் தப்பவிடக்கூடாது என்ற கோபக் குமுறல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
உலகமே கவனித்துக் கொண்டிருந்த இந்த இழிசெயலை செய்த குற்றவாளிகள் எண்ணற்றவர்களாக இருந்தும் வெறும் 68 பேர் மட்டுமே குற்றச் செயலுக்கு உடந்தை என குறிப்பிடப்பட்டிருப்பது நாட்டு மக்களின் கோபத்தையும் வேதனையையும் அதிகப்படுத்தியுள்ளது.




நரசிம்மராவ் உத்தமரா?

பாபரி மஸ்ஜிதை இடிக்க விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்த அன்றைய பிரதமர் நரசிம்மராவையும், அன்றைய அவரது அமைச்சரவை சகாக்களைக் குறிப்பாக அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் உள்ளிட்டவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் குறிப்பிடப்படாமல் விட்டுவிட்டது ஏன்? என்ற கேள்விகள் நாடெங்கும் எதிரொலிக்கின்றன.



மஸ்ஜித் இடிப்பு ஒரு இழிவான செயல்தான் சங்பரிவார் ஒப்புதல் வாக்குமூலம்

பாபரி மஸ்ஜித் இடிப்பு இழிவான செயல், மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல். ஒவ்வொரு இந்தியனையும் அவமானத்தில் ஆழ்த்திய செயல் என நீதி மனம் படைத்த ஒவ்வொருவரும் கடந்த 17 ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து எவ்வித வருத்தமும் தெரிவிக்காத சங்பரிவார் கூடாரம் முதன்முறையாக தன்னை அறியாமல் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு ஒரு இழிசெயல்தான் எனக் கூறியுள்ளது.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகளின் வரிசையில் வாஜ்பாயை லிபரான் அறிக்கை பட்டியலிட்டது. வாஜ்பாய், மஸ்ஜித் தகர்ப்பில் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட முடியாது என லிபரான் ஆணையம் கூறியது. வாஜ்பாய் பெயரை லிபரான் ஆணையம் கூறியதைக் கண்டு மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஆனால் இன்னமும் வாஜ்பாயை ரொம்ப நல்லவர் என நம்பிக் கொண்டிருக்கும் சில அப்பாவி ஹிந்து சகோதரர்களுக்கும் வாஜ்பாயை உத்தமர் போல் சித்தரித்துக் காட்டிய உள்நோக்க ஊடகங்களும் அதிர்ச்சி அடைந்தன.



வாஜ்பாயை சங்பரிவாரின் மிதவாத முகமூடியாக அறிமுகப்படுத்தி பதவிகளில் குளிர்காய்ந்த சங் பிரமுகர்கள் வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் என தாண்டி குதித்தனர்.

தங்களையும் அறியாமல் பாபரி மஸ்ஜிதை தகர்த்தது ஒரு இழிவான செயல்தான் என்பதை ஒப்புக் கொண் டனர். மஸ்ஜிதை இடித்ததற்காக பெரு மைப்பட்டுக் கொண்டவர்கள் இது வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் எனக் கூறியது என நாட்டு மக்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. இருப்பினும் மஸ்ஜித் தகர்ப்பை வாஜ்பாய் ஊக்குவித்தார். உ.பி. தலைநகர் லக்னோவில் இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்திருப்பதை ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான ஆர்கனைஸர் குறிப்பிட்டுள்ளது.





ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் கதி லிபரானுக்கு ஏற்பட்டால்...

மும்பை கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை செயல்படுத்தப்படவில்லை. மும்பைக் கலவர படுகொலையாளர்கள் பால்தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதே போன்று ஒரு நிலை லிபரான் அறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அத்தகைய நிலை ஏற்பட்டால் நாடு விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எச்சரித்துள்ளது.இதனிடையே வாஜ்பாயை நடுநிலையானவர், நல்லவர், மிதவாத மதவாதி, மதவாதம் இல்லாத மதவாதி என்று கூறியவர்கள் எல்லாம் லிபரான் ஆணையக் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிப்படையாக கருத்துகள் கூறவேண்டும். பாஜகவை ஆட்சியில் அமர்த்தியதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் தங்களது வருத்தத்தினை தெரிவிக்க வேண்டும் என அறிவுஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளன.



குமுறல்கள் !

மஸ்ஜிதை இடித்த மாபெரும் குற்றத்திலிருந்து காங்கிரஸையும், நரசிம்ம ராவையும் விடுவித்து தூய யோக்கிய சிகாமணிகள் என சித்தரிக்கும் லிபரான் ஆணைய அறிக்கைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவ குற்றத்தில் சங் பயங்கரவாதிகளை சேர்த்திருக்கும் லிபரான் ஆணையத்திற்கு 450 ஆண்டுகால மஸ்ஜிதை தரைமட்ட மாக்கிய போது நாட்டின் பிரதமராக இருந்து வேடிக்கைப் பார்த்த நரசிம்மராவை குறிப்பிடாமல் விட்டதற்கு பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியப் பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சையது ஷஹாபுத்தீன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விவகாரத்தில் பா.ஜ.க, வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள் என்பது உலகிற்கே தெரிந்த விஷயம்.இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டது சரியான ஒன்றுதான். அன்றைய பாஜகவின் அகில இந்தியத் தலைவராக வாஜ்பாய் இருந்தார். அன்று நடைபெற்ற இழிசெயல்கள்ஒவ்வொன்றும் வாஜ்பாய்க்கு தெரிந்தே நடந்தது. அவர் ரதயாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் திட்டமிட்டே லக்னோவோடு தனது பயணத்தை முடித்துக் கொண்டார். குற்றச் செயலிலிருந்து நேரடியாகப் பங்கு பெறுவதிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தன்னை மிகவும் உத்தமர் போல் பதிவு செய்ய முயன்றார். ஆனால் லிபரான் ஆணையம் அவரைக் குறிப்பிட்டு வாஜ்பாயியின் இமேஜுக்கு வேட்டு வைத்தது.

அத்வானியையும் வாஜ்பாயியையும் ஒரே தட்டில் சமமாக வைக்க முடியாத வர்கள் என்பது தனது கருத்து எனக் கூறிய சையது ஷகாபுத்தீன் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றத்தில் நம்பர் ஒன் குற்றவாளியை லிபரான் ஆணையம் குறிப்பிடாமல் விட்டுவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 1992 டிசம்பர் 6ஆம் தேதி மஸ்ஜித் தகர்ப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மராவ் தான் முதல் குற்றவாளி. இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவை லிபரான் ஆணையம் குற்றம் இழைத்தவர்களில் சேர்க்காதது ஏன் என சஹாபுத்தீன் கேள்வி எழுப்புகிறார்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இரண்டாம் நாள் தான் பிரதமர் நரசிம்மராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் சங்பரிவார சதிகாரர்களை விட நீங்கள்தான் மிகப் பெரிய குற்றவாளி. ஏனெனில் நீங்கள் நாட்டின் பிரதமராக இருக்கிறீர்கள். பாபரி மஸ்ஜிதை காப்பாற்றுவதற்குரிய அனைத்து அதி காரங்களையும் கொண்ட சக்தி படைத் தவராக நீங்கள் இருந்தீர்கள். நடந்த அக்கிரமத்தைக் குறித்து ஒன்றும் அறியாதவர் போல் இருந்து கொண்டே சங்பரிவாருக்கு உடந்தையாக இருந்தீர்கள். பாபரி பள்ளிவாசலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதனை தேசியச் சின்னமாக அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில் மஸ்ஜி தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்று வலியுறுத்திக் கூறியதை பொருட்படுத்தாமல் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தீர்கள் என தான் அன்றே எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டும் சஹாபுத்தீன், பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விஷயத்தில் நரசிம்மராவ் சூப்பர் வில்லன் என்பதை மறுக்க முடியாது என்றார்.

லிபரான் ஆணையம் நரசிம் மராவுக்கு உத்தமர் பட்டம் வழங்கியது ஏன்? என்ற வினாவுக்கு வரலாறு பதில் சொல்லும் என மேலும் குறிப்பிட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே லிபரான் ஆணையம் தனது அறிக்கையை தயாரித்து முடித்துவிட்ட போதும் அதனை இந்த ஆண்டுதான் சமர்ப்பித்துள்ளது. ஏன் இந்த மர்ம இடைவெளி? எனக் கேள்வி எழுப்பிய அவர், முன்பு தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையில் நரசிம்மராவ் குற்றவாளி என குறிப்பிட்டிருந்தது. அத்வானி, குற்றத்திற்கு தொடர்பில்லாதவர் போல் குறிப்பிட்டிருந்தது. திரைமறைவில் பல வேலைகள் நடந்துள்ளன என முன்னணி முஸ்லிலிலிம் பிரமுகர்கள் குமுறலுடன் குறிப்பிடுகின்றனர்.

பாபரி மஸ்ஜிதை சங்பரிவார்களுக்காக திறந்துவிட்ட காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங்தள், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பு களை மட்டும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம்சாட்ட முடியாது. காங்கிரசும் குற்றம் செய்தவர்களின்பட்டியலில் சேர்க்க வேண்டும் என அகில இந்திய மஜ்லிஸே முஷாவராத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார்.சிலான்யாஸ் என்ற சிலை பூஜைகள் நடத்த அனுமதித்தது யார் என்பதை நாம் அறிவோம். பாபரி மஸ்ஜிதை பொறுப் பில்லாமல், பிரச்சினைகள் ஏற்படும் என தெரிந்தே திறந்து விட்டவர்கள் யார்? என்பதை இந்த நாடே அறியும்.காங்கிரஸ் மற்றும் அன்றைய பிரதமர் நரசிம்மராவின் துரோகத்தை மறைத் துவிட்டு பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றம் குறித்த அறிக்கை முழுமையானதாக இருக்காது என்கிறார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். நான் அறிந்த வகையில் லிபரான் தனது அறிக்கையை பலதடவை மாற்றியிருக்கிறார். பாஜக ஆட்சி செய்த போது காங்கிரஸை பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் பொறுப்பாளியாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவை மட்டும் குற்றவாளியாக்கி அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் டாக்டர் ஜஃபருல் குறிப்பிட்டார்.

லிபரான் ஆணையத்தின் அறிக்கை முன்பே வெளியாகி இருக்கவேண்டும் எனக் குறிப்பிடும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி, லிபரான் அறிக்கை யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் 1992 டிசம்பர் 6ல் என்ன நடந்தது என் பதை உலகமே அறிந்ததுதான் என்றார். இப்போது தேவை குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுதான் என்றார்.

குற்றவாளிகளை தண்டிக்க 70 வருடங்கள் ஆகுமா?
குற்றவாளிகளைக் கண்டறிந்து இன் னார் இன்னார் குற்றவாளிகள் என அறிவிப்பதற்கே 17 ஆண்டுகள் ஆகி விட்டனவே... இனி அவர்கள் மீதான தண்டனைகளை செயல்படுத்த எத் தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்விக்கு 70 ஆண்டுகள் ஆகும் என விரக்தியாக பதிலளித்தார். பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்யது சஹாபுத்தீன். சங்பரிவாரின் மிகமுக்கிய தலைவர்களுக்கு எதிரான வழக்குகளின் கதி நாம் அறிந்ததுதான். இதில் அரசுகளை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. ஐ.பி. என்ற உளவுத் துறைக்கும் இதில் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டு முதலமைச்சர்கள் மீதும் நாம் குற்றம்சாட்ட முடியும். வழக்குகளை சிதைத்ததில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தின் இரண்டு முதல்வர்கள் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என எந்த நம்பிக்கையில் கூறமுடியும் என சஹாபுத்தீன் தெரிவித்தார்.மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் இன்று நாட்டின் மிகமுக்கியப் பிரமுகர்கள், நாட்டையே ஆண்டவர்கள். பிரதமராகவும், துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சர்களாகவும், முதலமைச்சர்க ளாகவும் இருந்தவர்கள். அவர்கள் அரசுகளின் முக்கிய அங்கமாக விளங்குகின்றனர். நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு அதிக அளவு வலிமை இன்னமும் உள்ளது. யாரும் அவர்களை தொடக்கூட முடியாது. இந்த அறிக்கை இறந்து கொண்டிருக்கும் அந்த இயக் கங்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு கருவியாகவே இருப்பதாக ஜஃபருல் உள்ளிட்ட முன்னணி மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லிபரான் ஆணையம், அறிக்கை வெளியிட நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது. கோடிக்கணக்கான பணம் வாரி இறைக்கப்பட்டது. இவை அனைத் தும் இந்திய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை தண்டிப்பதற்கு காலதாமதம் ஏற்படுத்தினால் அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல என நுஸ்ரத் அலி எச்சரித்தார்.

முஸ்லிம் இயக்கங்களை லிபரான் தனது அறிக்கையில் குற்றம்சாட்டி இருப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.முஸ்லிலிம் தலைவர்கள், பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக்குழு, அகில இந்திய பாபரி மஸ்ஜித் செயல் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தும் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டன. சிக்கலான நேரத்தில் நாங்கள் போராட்டத்தை அறிவிக்கவில்லை. நாங்கள் அரசாங்கங்களிடம் ஒவ்வொரு நாளும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம். பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் எங்கள் தரப்பை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி நாடு முழுவதும் மக்களைத் தட்டி எழுப்பினோம். ஆனால் நாங்கள் அப்பாவி மக்களிடம் பணம் வசூலிக்கவில்லை. ரத யாத்திரை நடத்தி நாட்டை ரத்தக் காடாக்கவில்லை என்றார் சையது சஹாபுத்தீன்.

அரசுகள் அவர்களுக்கே ஆதரவாக இருந்தன. வெகுஜன ஊடகங்கள் சங்பரிவாரின் சிறு அறிவிப்பைக் கூட பெரிதுபடுத்தி பிரபலப்படுத்தின. ஏழு லட்சம் குண்டர்களை அவர்கள் திரட்டினர். அவர்களைத் தடுக்காத அரசுகள், மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகும் கூட நீதியுடன் நடந்து கொள்ளவில்லை.பாபரி மஸ்ஜித் தகர்ப்புடன் தொடர்பு டைய ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்த கையோடு சேவை அமைப்பான ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பையும் தடை செய்தது அன்றைய மத்திய அரசு. இவர்களிடம் எவ்வாறு உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்? என்கிறார் ஜஃபருல் இஸ்லாம்.

மஸ்ஜிதை தகர்ப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனைபாபரி மஸ்ஜித் தகர்ப்பில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தேசத்தின் இதயத்தை துண்டு போட்ட வேலையை சங்பரிவார் பயங் கர வாதிகள் செய்தனர். அதற்கு உறு துணையாக இருந்தவர்களும் தண் டிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார். இனிமேலும் இத்தகைய செயல்கள் நேராத வண்ணம் அழுத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.மேலும் அவர் ரத்தம் கொதிக்கச் செய்யும் ஓர் அதிர்ச்சித்தகவலையும் அவர் அப்போது தெரிவித்தார்.

அந்த கறுப்பு நாளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய இருவர் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று பிரதமர் நரசிம்மராவை சந்தித்தனர்.வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் பாப்ரி மஸ்ஜித் காக்கப்பட வேண்டும் என உருக்கமுடன் கோரிக்கை விடுத்தனர். அதே வேளையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நரசிம்மராவை சந்திப்பதற்காக பல மணி நேரங்கள் காத்துக்கிடந்தனர். அவர்களையும் பிரதமர் ராவ் சந்திக்கவில்லை. மஸ்ஜிதையும் காப்பாற்ற வில்லை. இன்று ராவும் இல்லை. வி.பி.சிங், ஹரிகிசன் சிங் சுர்ஜித்தும் இல்லை. ஆனால் குற்றாவளிகள் அனைவரும் இன்று உயிருடன் உலாவுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மத்திய அரசு விரைவில் தெரிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

68 பேர் மட்டும் தான் குற்றவாளிகளா?
லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழக்கக் காரணமான ஒரு தேசிய அவ மானம் குறித்த விசாரணை அறிக்கையில் வெறும் 68 பேரை மட்டும்தான் குற்றம்சாட்ட முடிந்ததா? ஏனைய குற்றவாளிகள் பட்டியலிடப்படவில்லையே என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது.


அதிகார வட்டாரம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை :
1986லி-ருந்து மஸ்ஜித் தகர்க்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் முஸ்லிலிம்களுக்கு எதிராக வெறியூட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. நாடு முழுவதும் மூலைக்கு ஒன்றாக செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கெல்லாம் முஸ்லிலிம் களுக்கு எதி ராகவும், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணமும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனைத்து வெறிச் செயல்களும் வெளிப்படையாகவே நடைப்பெற்றன. வெறிக்கூச்சல் போட்டுச் சென்ற கூட்டத்தினர் மீதோ, வன்முறை தூண்டும் வண்ணம் மேடையில் பேசியவர்கள் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

பாஜக 90களின் இறுதியில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 80களின் இறுதியிலும், 92ஆம் ஆண்டு வரை வெறியாட்டம் போட்ட மதவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு எந்த ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கும் இல்லாமல் போனது ஏன்? என்ற வினாவை சமூகநல ஆர்வலர் எழுப்பி வருகின்றனர்.

சங்பரிவார் மதவாத சக்திகளை மட்டு மல்லாது மஸ்ஜித் இடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது மட்டுமே இந்திய மக்களின் ஆத்திரத்துக்கு அணை போடுவதாக அமையும்.அதுதான் வேதனை மிகுந்த சூழ்நிலையிலும் இந்த தேசத்தையும் தேச மக்களையும் நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலனத்தையும் மதித்து பொறுமை காத்து வரும் ஒரு உயர் சமூகத்தின் மனப்புண்ணுக்கு மருந்திடுவதாக அமையும்.

ஆதாரம்: த.மு.மு.க . இணையத் தளம் .
மேலும் இது தொடர்பான இன்னொரு சுட்டி; தேச துரோகம்

No comments: