Thursday, January 27, 2011

தாராசிங்கிற்கு ஆயுள் தண்டனை-நீதிக்கு மரண தண்டனை



1998ல் சங்பரிவார் பயங்கரவாதி தாராசிங், பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றம் தாராசிங் மற்றும் 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தாராசிங் தரப்பு ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் உயர்நீதி மன்றம் தாராசிங்கிற்கான மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தும் இதர 11 பேரை விடுவித்தும் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் அநீதியை உச்சநீதிமன்றமும் வழிமொழிந்துள்ளது நிச்சயம் வேதனைக்குரிய ஒன்றுதான்.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை எரித்துக்கொன்ற கையோடு சபீக் ரஹ்மான் என்ற வியாபாரியையும் எரித்துக் கொன்றது தாராசிங் தலைமையிலான காவி தீவிரவாதிக் கும்பல். இந்தக் கொடூரம் உலகமே அறிந்த ஒன்றுதான். ஆனால் நீதிமன்றமோ, ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறி, அந்தக் கொடிய பயங்கரவாதியைக் காப்பாற்ற முயன்று, அதன் பின்னணியில் உள்ள அமைப்புகளுக்கும் புனிதர் பட்டத்தினைக் கொடுத்துள்ளது.

2005&ல் ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதியை எள்ளி நகையாடுவதைப் போன்றே உள்ளது. தாரா சிங்கின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 11 பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

தாரா சிங்கின் கொடிய குற்றங்களுக்காக அவர் மீது மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், ஆயுள் தண்டனை ரத்து செய்து விடுவிக்கப்பட்ட அனைவர் மீதும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நோக்கி முறையீடு செய்த சி.பி.ஐ.யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொடிய கொலைக் குற்றவாளி தாராசிங் வெறும் ஆயுள் தண்டனை மட்டுமே பெற்றுள்ள நிலையில் நீதி பரிபாலனத் துறையைக் கண்டு காவி பயங்கரவாதிகள் ஏளன சிரிப்பு சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பில் ‘அந்நிய மதமாற்றம் மலைசாதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால்தான் இந்தக்கொலை நடந்துள்ளது. ஒருவனை ஏமாற்றியோ, பொய் வாக்குறுதி கொடுத்தோ, பணம் கொடுத்தோ, அல்லது ஒருவன் சார்ந்திருக்கும் மதம் மோசமானது, எங்கள் மதமே உயர்ந்தது என மட்டமாகப் பேசியோ மதம் மாற்றுவது இறையாண்மைக்கு விரோதமானது’ என்றெல்லாம் கைதேர்ந்த சங்பரிவார் கொள்கை பரப்புச் செயலாளர் போன்றே நீதிபதி சதாசிவம் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களின் வேதனையை அதிகப்படுத்தி வருகிறது.

தாராசிங்கின் வாதங்களை நியாயப்படுத்தி இந்தியாவின் மதச்சார்பின்மை மாண்புகளை நிராகரிக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் மெச்சத்தகுந்தது அல்ல.

தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், காவி பயங்கரவாதிகளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிரூபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேநேரத்தில் பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளுக்கு அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்றபோதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்து வரும்நிலையில் இதுபோன்ற தீர்ப்புகள் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும் அரசியல் சாசன நெறிகளுக்கும் நிச்சயம் பெருமை சேர்க்காது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு அயோத்தி பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பினால் மனம் நொந்து போயுள்ள இந்திய மக்கள் நம்பிக்கை ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத்தையே நம்பியுள்ள நிலையில் ஒரிஸ்ஸா ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொடூரக் கொலையாளி தாராசிங் மீது மரண தண்டனை விதிக்கப்படாததோடு அவர் செய்த படுகொலை செயலையும் நியாயப்படுத்தும் அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்றிருப்பது நீதி நாடும் மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. அதிருப்தியினைக் களைந்து நம்பிக்கை ஏற்படுத்துவது நீதித்துறையின் கடமை.

என்ன செய்யப் போகின்றன மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் ?

-அபுசாலிஹ்

நன்றி: த.மு.மு.க .


காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

ஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பரில் தொடங்கி 2008 இறுதி வரை கிருத்தவர்கள் மீது இந்துவெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிருத்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்; பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர்; வீடுகள் கிராமங்கள் சூறையாடப்பட்டன் ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சடைந்தனர்.
இந்த வழக்குகளை விசாரிக்க இரு விரைவு நீதிமன்றங்கள் 2008இல் அமைக்கப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 123 வழக்குகளில் 63இல் தீர்ப்பு அளிக்கப்பட்டு 89 பேருக்கு தண்டனையும் 303 பேருக்கு விடுதலையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புகளின் இலட்சணத்தை சிறிது சுரண்டிப் பார்த்தால் நீதிமன்றங்களின் இந்துத்துவ பா(சி)சம் அப்பட்டமாகத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்கள் கொலை வன்புணர்வு தீயிட்டுக் கொளுத்துதல் போன்ற பயங்கரகுற்றங்களில் ஈடுபட்டவர்கள். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பிரதான் அவர்களில் முக்கியமானவன். இவன் மீதுள்ள 8 வழக்குகளிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளான்.

அந்த வழக்குகளில் ஒன்று பிரா என்ற பெண்ணின் கணவனைக் கொன்றது ஆகும். கட்டிய கணவனை பிரதானும் அவனது ஆட்களும் பிடித்து இழுத்துச் சென்றதைத் தடுக்க வழியின்றிக் கதறிய இந்த அபலைப் பெண் நீதி கிடைத்து விடுமென்றே கடைசிவரை நம்பியிருந்தார். ஆனால் சம்பவம் நடந்த அன்றுதான் பிரதானை முதல்முறையாக அந்தப் பெண் சந்திக்கிறாள் என்றும் எனவே அத்தனை பெரிய கும்பலில் அவள் சரியாக அவனை அடையாளம் கண்டுகொண்டாள் என்பது நம்பக்கூடியதாக இல்லை என்றும் கூறி விரைவு நீதிமன்ற நீதிபதி தாஸ் அவனை விடுதலை செய்துவிட்டார். இதன் நேரடிப்பொருள் எம்.எல்.ஏ.வின் முகம்கூட அந்தப் பெண்ணுக்குத் தெரியாது என்பதுதான். ""இன்னார்தான் ராகுல் காந்தி என அடையாளம் காட்டுவதற்கு நான் ராகுல் காந்தியை முன்பே சந்தித்திருக்க வேண்டுமா என்ன?'' என்று மனமுடைந்து போய் பிரா கேட்கிறார்.

வீடுகளைக் கொளுத்திய இன்னொரு வழக்கில் பிரதான்தான் வீட்டை எரித்தான் என்ற வீட்டு உரிமையாளர்களின் சாட்சிகளை நீதிபதி தாஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பவம் இரவிலே நடந்துள்ளதால் குற்றவாளிகளின் முகத்தை சாட்சிகளால் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்கிறார் நீதிபதி. எரியும் நெருப்பு வெளிச்சத்தில் முகங்கள் பளிச்சென்று தெரியுமென்பதைக்கூட நீதிமன்றங்களின் இந்துத்துவக் கொழுப்பு ஏற்க மறுத்துவிட்டது. ஒரு சாட்சியின் வயதை விசாரணை அதிகாரி தவறாகப் பதிவு செய்திருப்பது சாட்சிகள் எந்தப்புதருக்குப் பின்னே மறைந்திருந்தனர் என்ற விவரமின்மை போன்ற மிகவும் அற்பமான பிழைகளைக் காட்டியும் விடுதலை செய்துள்ளார் நீதிபதி.

போலீசுத் துறையானது வழக்குகளை பலவீனமாக்கும் சதிகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. பிராவின் கணவன் இழுத்துச் செல்லப்பட்டதை "காணாமல் போய் விட்டார்' என்றே பதிவு செய்துள்ளனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என்று முறையிடப்பட்டதை நீதிமன்றம் கண்டுகொள்ளவேயில்லை. பொடிமுண்டா கிராமத்தில் வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்த கிருத்துவர்களைத் தாக்கி அகதிகளாக அவலத்தில் உழன்ற அவர்களின் பிளாஸ்டிக் குடில்களை ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்கள் கிழித்தெறிந்துள்ளனர். அந்த ஊர் போலீசு ஆய்வாளரோ ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்று கூறி கையை விரிக்கிறார். இந்து வெறியர்கள் எதிர்பார்த்தபடியே பொடிமுண்டா கிராம வழக்குகள் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டன.

கந்தமால் இந்துவெறி பாசிசப் படுகொலை வழக்குகளின் நிலை இதுவென்றால் 1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸ{ம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது உச்சநீதி மன்றத்தில் பிணை கேட்டுள்ள தாராசிங்கிற்கு மேற்சொன்ன உயர்நீதி மன்றத்தின் கூற்று உதவக்கூடும்.

இந்திய நீதிமன்றங்கள் இந்துத்துவத்திற்குப் பக்கமேளம் வாசிப்பவையாகவே உள்ளன என்பதை இந்த வழக்குகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. நீதிமன்றங்களின் பாசிசத்தை வீதிகளில் இறங்கி முறியடிக்க வேண்டும்; மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு பாசிச பயங்கரவாதிகளைத் தண்டிக்க வேண்டும்; இல்லையேல் அநீதி மன்றங்களின் ஆசியோடு இந்துவெறி பாசிசம் வெளிப்படையாகவே கொட்டமடிக்கும் என்பதையே இவை எச்சரிக்கையாக உணர்த்துகின்றன.

• கந்தசாமி

நன்றி: தமிழரங்கம்


6 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.உதயம்.

உண்மைகளை படிக்க படிக்க உள்ளம் கனக்கிறது. துக்கம் கோபம் ஆற்றாமை இயலாமை... என்ன சொல்ல?

காந்தி,குஜராத் முஸ்லிம்கள், ஒரிஸ்ஸா கிருத்துவர்கள், மும்பை, கோவை என பல பல கலவரங்கள் குண்டுவெடிப்புகள் என ஹிந்துதுவாவின் தறிகெட்ட காவி பயங்கரவாதம்...

இதற்கு உறுதுணையாக ஆதரவாய் அநியாயமாய் அவ்வப்போது நீதியை //நீதிக்கு மரண தண்டனை// கொடுத்து கொல்லும் இந்திய அநீதி மன்றங்களின் "கருப்பு பயங்கரவாதம்"..!

இவை இரண்டும் ஒழிக்கப்படவேண்டியவை என்பது இனி காலத்தின் கட்டாயம்.

இன்று சென்னை / மதுரை ஆகிய இடங்களில் தமிழர்கள் ஆரம்பித்து விட்டார்கள். அநீதி மன்றங்களின் கருப்பு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட..!

ராஜ நடராஜன் said...

இன்னும் ஒருவர் கண்ணிலும் படவில்லையா?

ராஜ நடராஜன் said...

ஓ!தணிக்கையா? சரி தொடர்கிறேன்.

No one killed jessica என்ற இந்தி திரைப்படம் முன்பு Jessica murder case என்று பத்திரிகைகளில் வந்தன.நானும் இதன் பரிதாபத்தை,கொலைகாரன் சிறை வைப்பு,அரசியல் சூழ்ச்சிகள்,சாட்சிப்பிறல்,நீதிமன்ற குற்றம் தப்பித்தல் ஆணை என தொடர்ந்து கொண்டிருந்தேன்.பின் புவ்வா தேடும் வாழ்வில் மறந்தும் போய் விட்டேன்.

தாராசிங்கிற்கு வருவதற்கு முன்பாக ஜெஸிக்கா இந்தி படத்தை பாருங்கள் இந்தி புரிபவர்களும் இந்தி புரிய முயற்சி செய்பவர்களும்.இல்லன்னா நான் கதை சொல்லி தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

மேல்தட்டு வர்க்கத்தின் வார இறுதியில் நிகழும் தனியார் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த ஜெஸிக்காவிடமும்,ஷயன் முன்ஷியிடமும் காங்கிரஸ் அமைச்சர் வினோத் சர்மாவின் பொறம்போக்கு மகன் மனு சர்மா,நண்பர்களும் மது கேட்க மது முடிந்து விட்டதாக சொல்ல மனு சர்மாவுக்கும்,ஜெஸிக்காவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாய்ண்ட் பிளாங்க் ரேஞ்ச் என சொல்லப்படும் தூரத்தில் சுட்டு விட்டு தப்பி ஓட பின் நிகழ்வில் கழந்து கொண்ட 300 பேரில் 7 பேர் சாட்சி சொல்ல முன் வர அப்பன் தான் காங்கிரஸ் அமைச்சரச்சே! கையூட்டுக் கொடுத்து பிறல்சாட்சியம் சொல்ல வைக்க கேஸ் புட்டுகிட்டுப் போய் மனு சர்மா தண்டனையிலிருந்து தப்பித்து விட்டான்.

பின் மேல் முறையீடு,மக்கள் எதிர்ப்பு மெழுகுவர்த்தி தினம்,முக்கியமாக தெகல்கா செய்த பிறல்சாட்சிகளிடம் Candid camera வேலை என்று அழுத்தம் அதிகமாக காங்கிரஸ் வினோத் சர்மாவுக்கு பதவியில் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டது.

உச்சநீதிமன்றம் மனுசர்மா பொறம்போக்குக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

கொலையின் நீதி!பார்ல தண்ணி கிடைக்கலன்னா சுட்டு விடு.

இனி தாராசிங் தடியனுக்கு வருவோம்.

ராஜ நடராஜன் said...

தாராசிங்க் தடியனை விமர்சிப்பதற்கு முன் முடிந்தால் விக்கிபீடியாவின் ஜெஸிக்கா கொலைவழக்கின் சாரத்தை படித்து முடித்து விடுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Murder_of_Jessica_Lall

உதயம் said...

அன்பர்கள் ஆஷிக், ராஜ நடராஜன் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சங்பரிவாரினால் உற்பத்தி செய்யப்பட்ட நீதி அரசர்கள் நீதி வழங்கும் நீதி மன்றங்கள் இப்படித்தான் நீதி வழங்கும். இந்தியா இந்துமயமாகி வருகிறது. அது விவேகானந்தரும் காந்தியும் காட்டிய வழியல்லாமல் கோட்சேயும் சங்பரிவாரும் வழிகாட்டும் வழியில் வழிகேட்டிற்கு செல்கிறது. காந்தி தேசம் மெல்ல மெல்ல கோட்சேக்களின் கைகளுக்கு போக விடாமல் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிஜமான தேசப்பற்றாளனுக்கும் வரவேண்டும்.