Wednesday, February 17, 2010

இடஒதுக்கீடு சட்டமும்-முஸ்லிம்கள் கடமையும்





இடஒதுக்கீடு சட்டமும்- முஸ்லிம்கள் கடமையும்


Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.
[ ஆந்திர அரசின் 4 சதவீத இட ஒதிக்கீட்டின் சட்டம் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.? அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்க்கும் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு செய்தது. அரசு எவ்வாறு முஸ்லிம்கள் ஆந்திர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடியாகியிருக்காது. தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத ஒதுக்கீட்டில் ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவினால் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு நமக்கு இருப்பது நியாயமே. ஆனால் தமிழக அரசு இடஒதுக்கீடு எவ்வாறு முஸ்லிம்கள் மற்ற பின்தங்கிய மக்களுடன் பின்தங்கியுள்ளார்கள் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985 ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி தனது அறிக்கையின் மூலமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்.]



என் இனிய சொந்தங்களே!
இட ஒதிக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்த வண்ணமுள்ளன.
நீதிபதி சச்சார் முஸ்லிம்கள், தலித் மக்களை விட படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் பின் தங்கி உள்ளனர் என்றும்,
அந்த முஸ்லிம் மக்களுக்கு 10சதவீத ஒதிக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வழங்கப் பட வேண்டும் என்றும்
முன்னாள் உச்ச மன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும்,
ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் முஸ்லிம்களுக்கு அந்த மாநில அரசு வழங்கிய நான்கு சதவீத ஒதுக்கீடு செல்லாது என்றும்,
மேற்கு வங்க முதல் அமைச்சர் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழக்கப்படும் என்றும்
ஏற்கனவே கர்னாடகா மற்றும் மணிப்பூர் அரசுக்கள் 4 சதவீத ஒதுக்கீடும்
கேரளா அரசு 10-லிருந்து 12 சதவீதம பல் வேறு ஒதுக்கீடு முறையில் இடம் ஒதுக்கி அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறது.



இந்திய குடியுரிமைச் சட்டத்தில் இட ஒதுக்கீடு பற்றி என்ன சொல்கிறது என்பதைப்பற்றியும் அந்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒதுக்கீடு பெற்று சமூகத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் முன்னேற என்ன செய்யலாம் என இந்தக் கட்டுரையில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.



அரசமைப்புச் சட்டம் பிரிவு 14ன் படி, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்றும், ஒத்த தகுதி நிலையில் உள்ளவர் அனைவரும் சட்டத்தால் ஒரே சீராக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.




சட்டப்பிரிவு 15(1) ஒத்த தகுதி நிலை கொண்ட எவரையும் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதாவது காரணத்தால் அரசு வேற்றுமை பாராட்டுவதைத் தடை செய்கிறது, ஆனால் வேறுபட்ட நபர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி சட்டம் இயற்றுவது தவறாகாது என்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கை. பிரிவு 15(3)ன் படி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வகை முறைகள் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு.



அதே போல் பிரிவு 15(4)ன் படி சமூகம் மற்றும் கல்வி வழி பின்தங்கிய குடிமக்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு வகைமுறை செய்வதற்குத் தடையில்லை என்று சொல்கிறது. ஆகவே தான் தலித் மக்கள், பழங்குடியினர் ஹிந்து மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஹிந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டு பின் தங்கியிருந்ததால் அவர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.



ஏன் ஹிந்து மதத்தில் சில நலிந்த ஹிந்து மதத்தினவருக்கும் பிற்பட்டவகுப்பினர் என்ற தகுதி சட்டத்தில் வழிவகுக்கப்பட்டது?

சட்டப்பிரிவு 16(4)ன் படி அரசின் கவனத்தில் எந்த பிற்பட்ட சமூகமும் அரசு நிறுவனங்களில் சரியாக பணியமர்த்தப்படவில்லையென அறிந்தால் அவர்களுக்காக தனிச்சட்டம் இயற்றலாம் என்று சொல்கிறது.



பின் ஏன் ஆந்திர அரசின் 4 சதவீத இட ஒதிக்கீட்டின் சட்டம் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.?

அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்க்கும் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு செய்தது. அரசு எவ்வாறு முஸ்லிம்கள் ஆந்திர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடியாகியிருக்காது.



தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத ஒதுக்கீட்டில் ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவினால் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு நமக்கு இருப்பது நியாயமே. ஆனால் தமிழக அரசு இடஒதுக்கீடு எவ்வாறு முஸ்லிம்கள் மற்ற பின்தங்கிய மக்களுடன் பின்தங்கியுள்ளார்கள் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985 ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி தனது அறிக்கையின் மூலமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள். அந்த அறிக்கையில் இஸ்லாமிய சிறுபான்மையினரைச் சார்ந்த 27,05,960 மக்களில் பிற்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் 25,60,195 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் கிறித்துவ சிறுபான்மை 31,91,989 மக்களில் 24,69,519 பேர் பிற்பட்ட மக்களின் பட்டியலிலும் , 78,675 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் பிற்பட்ட வுகுப்பபில் யாரையும் சேர்க்கவில்லை. இத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலித் மக்களைவிட கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்pறார்கள் என்று அறிந்தும் கூட.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டம் 45, 1994 படியும், அதன் பின்பு தமிழிநாடு சட்டம் பிரிவு 12, 2006 ன் படியும் பிற்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும், அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களில் தனி ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதன் பின்பு கிறித்துவரும், இஸ்லாமியரும் மற்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலுள்ள பிற சமூகத்தினருடன் போட்டியிட இயலவில்லை என்பதால் தங்களுக்கென்ற தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது.



அவர்களின் கோரிக்கையினை பிற்பட்டோர் கமிஷனிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன் அறிக்கையில் இரு சமூகத்தினரின் கோரிக்கை சரியானதுதான் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனை எற்று அரசு 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிரிவு 4, 2007 ன் படி கிறித்துவ மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் கல்வி நிலையங்கள்(தனியார் கல்வி நிலையம் உள்பட) அரசு நியமனங்களில் அல்லது பதவி ஒதுக்கீடுகளில் கிறித்துவர்களுக்கு 4 சதவீதமும், முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



ஆனால் அதன்பின் வருங்காலங்களில் அதிகம் படித்த கிருத்துவ மக்கள் தொகையினைக் கொண்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் படித்த இளைஞர்கள் அதிகமாக கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியவில்லையென அறிந்து அந்த நான்கு சதவீத ஒதுக்கீடு தேவையில்லை என்றும் தாங்கள் பிற்பட்போருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் அதிக பயன் பெற முடியும் என அரசிடம் சொல்லி அதனை ரத்துச் செய்ய சொல்லி விட்டார்கள். அந்த கிறித்துவ மக்கள் கூற்றுப்படிப் பார்த்தால் அதிகம் படிக்காதவர்கள், கல்வி, அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற முடியாதவர்கள் முஸ்லிம் பிற்படுத்தப்பட்டபவர்கள் தான் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிதல்லவா நண்பர்களே!



இந்திய நாட்டில் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 41 விழுக்காடு ஆகும். ஆனால் பிற்பட்டோருக்கு இட ஒதிக்கீடுக்கு இந்திய நாட்டில வழிவகுத்த முன்னோடி மண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தனது 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கையின் படி பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை 52 விழுக்காடு ஆகும். ஆகவே தான் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கி சட்டம் வகுத்தது மத்திய அரசு.



இந்த பிற்படுத்தப்பட்ட மக்களில் 78 விழுக்காடு கிராமப் புறத்திலும், 22 விழுக்காடு நகரப் பகுதியிலும் வசிக்கிறார்கள். ஆனால் முற்பட்ட மக்கள் ஊரக, நகரப் பகுதி இரண்டிலும் 37.7 விழுக்காடு வாழ்கின்றனர். ஆகவே தான் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தால் முற்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் கூடிய இடத்தினை பெற்று விடுகின்றனர் இந்தியாவிலே தமிழகத்தில்தான் 74.4 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமான (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வின் கூற்றாகும். ஆகவே தான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு மூன்றரை விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் கிறித்துவ மக்கள் நான்கு சதவீத ஒதுக்கீடு போதாது நாங்கள் பிற்பட்டோர் ஒதுக்கீடுகளில் அதிக ஒதுக்கீடு பெற வாய்ப்புண்டு என்று சொல்லி அதனை அரசும் ரத்து செய்தபோது, தமிழகத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெரியவர் மட்டும் முஸ்லிம் மக்கள் ரிசர்வேஷன் பெறாது முன்னேற வேண்டுமென்றும் சொன்னதோடு மட்டுமல்லாமல் புனித ஹஜ் செய்ய அரசின் சலுகையினைப் பெறாது செல்ல வேண்டுமென்றும் சொன்னதாக அனைத்து பத்திரிக்கையிலும் வெளி வந்து அதனை கண்டித்து நோட்டீசும் சில அமைப்பினர் வெள்ளிதோறும் பள்ளிவாசலில் கொடுக்கப்பட்டது.




அவர் யார் என்று கேட்கிறீர்களா?
அவர் தான் பிரிட்டிஷ் அரசின் எடுபடியாக இருந்து, வட மாவட்டங்களில் அவர்களுக்கு வரிவசூல் ஏஜெண்டாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தினை எதிர்த்த மதுரை மருதநாயகம் என்ற அஹமது கான், சிவகங்கை மன்னராக இருந்த சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், ஊமைத்துரை போன்றவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் படையினருடன் தன் கூலிப்படையையும் அனுப்பியதின் பயனாக பிரிட்டிஷ் இந்திய நாட்டினை விட்டு வெளியேறியபோது அவருக்கு மட்டும் இந்தியாவில் தனி கொடியுடன் உள்ள அந்தஸ்து கொடுத்து, தனது சமஸ்தான சொத்தினையும் அநுபவிக்க உரிமை வழங்கப்பட்டுள்ள ஆற்காடு நவாப்பின் சந்ததி ஆவார்.



ஆனால் பிரிட்டிஷாரல் தன் மகன்கள் கொல்லப்பட்டாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை எதிர்த்த டெல்லி முகலாய கடைசி சக்கரவர்த்திக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? பர்மாவிற்கு கடத்தப்பட்டு சொந்த இந்திய மண்ணில் கூட தனது கடைசி வாழ்வினை கழிக்க முடியாத நிலை பரிதாபமாகத் தெரியவில்லையா உங்களுக்கு?


அந்த நவாப் தான் சொல்கிறார் முஸ்லிம்கள் அரசில் விசேஷ சலுகை பெறக்கூடாது என்று. பின் என்ன செய்வது ஏழை, எளிய மக்கள் வாழ்வினுக்கு ஒளியேற்ற! அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது? அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது ஏழை முஸ்லிம்கள். ஆற்காடு நவாப் போன்ற பெரியவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருந்தால் ஏழை, எளிய முஸ்லிம்கள் சலுகை பெற வாய்ப்பாக அமையும்.





[ தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் ஆனால் முஸ்லிம்கள் தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள்.
அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படி பெருவதின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும்.



ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.]



இந்தியாவில் இட ஒதிக்கீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்க பரிசீலனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே முஸ்லிம் அதற்கு நமது கடமை என்ன என்பதை விளக்கலாம் என கருதுகிறேன்.



இதற்கு 12.2.2010 டெல்லியில் நடந்த என்.எம்.எம்.ஆர் (நேஷனல் ரிசர்வேஷன் ஃபார் முஸ்லிம் ரிசர்வேஷன்) அதாவது முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெற வேண்டி முஸ்லிம் இயக்கம் முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி செய்யது சகாபுதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நீதிபதி சச்சார் கமிட்டியில் இடம் பெற்ற செயலர்-உறுப்பினர் அஃப்சாலே ஷரீஃப் அவர்கள், ''சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலுள்ள முஸ்லிம்கள் பிற்பட்ட முஸ்லிம் மக்கள் முன்னேற வழிதேட வேண்டும்'' என சொல்லியுள்ளார். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மேன்பட்ட மக்கள் என்ன என்ன செய்ய வேண்டுமென விளக்க ஆசைப்படுகிறேன்.




1) 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓட்டுரிமை உண்டு. மக்கள் தொகை கணக்கெடுக்க வரும்போது கண்டிப்பாக வீட்டிலுள்ள அனைவரையும் சேர்க்கச் செய்ய வேண்டும். கண்டிப்பாக ஓட்டர்ஸ் லிஸ்ட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடையாள அட்டைக் கேட்டுப் பெறவேண்டும். வெளி நாட்டில் வாழும் முஸ்லிம்களையும் அதனில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய நாட்டில் 13 விழுக்காடு உள்ள முஸ்லிம்களுக்கு மக்கள் பிரதிநித்தவ அடிப்படையில்(புரப்போஷனல் ரெப்பரசென்டேஸன்) இட ஒதிக்கீடு வந்தால் அது நிச்சயமாக பலனளிக்கும்.



2) கல்வியில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என் அறிய ஒவ்வொரு ஊரிலும் 1) பள்ளி இறுதி வரை படித்தவர் 2)பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர் 3)கல்லூரி வரை படித்தவர் 4) தொழில் கல்லூரி கல்வி படித்தவர் 5) டிப்ளமோ பட்டம் பெற்றவர் 6) பள்ளிப்பக்கம் தலை காட்டாதவர் என்ற கணக்கெடுப்பு வேண்டும். அப்போது தான் நாம் எவ்வளவு அளவிற்கு கல்வியில் முன்னேறியிருக்கிறோம் என அறியலாம்




3) டவுண் பஞ்சாயத்து, தாலுகா, முனிசிபாலிடி, மாநகரங்கள் தோறும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் அரசு வேலைக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும். அதேபோன்று பள்ளி மேல் படிப்பிற்கு மேல் என்ன படிக்கலாம், மேலை நாடுகளில் எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கலாம், இந்தியாவில், வெளிநாட்டில் திறமை வாய்ந்த மாணவர்கள் மேல் பட்டப்படிப்பு படிக்க என்னன்ன ஸகாலர்ஷிப் கிடைக்கிறது, விசாவிற்கு எப்படி மனு செய்யலாம் போன்ற தகவல் மையம் அமைக்கவும், இந்திய நாட்டில் அரசு வங்கிகளில் மாணவர்கள் மேல்படிப்பிற்கான அரசு லோன் பெறுவதிற்கு உதவியும் செய்யலாம்.



4) தோல், கட்டிட அமைப்பு, ஷிப்பிங் போன்ற பெரிய தொழில் முனைவர்களை அனுகி வேலை வாய்ப்பு முகாம்களில் முஸ்லிம்களுக்கு ''ஹிந்து'' பத்திரிக்கை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது போல ''ஜாப் பேர்ஸ்'' நடத்தலாம்.



5) கிராமங்களில், நகர பஞ்சாயத்துகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து அருகில் உள்ள பிளாக் டெவலப்மெண்ட்(பி.டி.ஓ) அவர்களின் அரசு உதவி வாங்கிக் கொடுத்து சிறு கைத்தொழில் தொடங்க உதவி செய்யலாம்.




6) அரசுக் கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்ஸி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே வேலை வாய்ப்பினைப் பெற அவர்களுக்கான ஆறுமாத அல்லது ஒரு வருட தொழில் கல்விசான்றிதழ் படிப்பை படிக்க உயர்கல்வித்துறை அரசு கடந்த 8.2.2010 வகை செய்துள்ளது.



அந்தப்படிப்பில்
1. மல்டி மீடியா, 2. டேலி,
3. ஏ.சி.டெக்னாலஜி, 4. கம்ப்யூட்டர் கார்டுவேர்,
5. டொமஸ்டிக் ஒயரிங், 6. நெட் ஒர்க்கிங்,
7. வெப் டிசைனிங் மற்றும் அனிமேசன், 8. இ.காமர்ஸ்,
9. டிரைவிங், 10. பியூட்டிசியன்,
11. கார்மென்ட் குவாலிடி இன்ஸ்பெக்சன் அண்டு; எக்ஸ்போர்ட்மெர்கண்டிசிங் 12. கம்யூனிகேஷன் ஸ்கில்,
13. ஆபிஸ் ஆட்டோமேசன்,
14. சர்வேஈ 15. டி.டி.பி
ஆகியவை உள்ளன. அந்த படிப்பிற்கான சான்றிதழ் உயர்கல்வித்துறை வகை செய்ய வழிவகுத்துள்ளது.



அந்தப்படிப்பிற்கு ஆறு மாதத்திற்கு கட்டணமாக ரூபாய் 1500, வருடக் கட்டணமாக ரூபாய் 3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நமது மாணவர்களை அந்தப் படிப்பில் சேர்ந்து வாய்ப்பினைத் தேடிக்கொள்ளச் செய்ய வேண்டும்.
அதே போன்ற படிப்புகளை 20க்கு மேல் முஸ்லிம் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செல்ஃப் பைனான்ஸிங் வழியில் தொடங்கவேண்டும்.
அதேபோன்ற படிப்புகளை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஜஸ்டிஸ் பஷீர் அஹமது மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.




7) மத்திய அரசின் மைனாரிடிக்கான 15 அம்ச திட்டத்தின் படி முஸ்லிம்களின் வேலை வாய்ப்பு ரயில்வேயிலும், அரசுத்துறையிலும் 2006-2007 6.92 சதவீதத்திலிருந்து 2008-2009ல் 9.19 விழுக்காடு அதிகரித்தாலும் முஸ்லிம்களின் ஜனத்தொகை 13 விழுக்காடுகளுக்கு அது குறைவே எனலாம்.



ஆனால் பொது நிறுவனங்களிலும், அரசு வங்கிகள், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு வெறும் 2008-2009ல் 7.9 விழுக்காடிலிருந்து 8.87 விழுக்காடு 48,070 வேலைகளில் தானே இருக்கிறது. இன்னும் முஸ்லிம்கள் அரசு வங்கிகளுக்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் வேலை வாய்பபிற்கு மனு செய்து வேலை வாய்ப்பினைப் பெற முஸ்லிம் கல்வி நிலையங்களும், தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களை தயார் படுத்த வேண்டும்.
அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளில் முஸ்லிம் மாணவர்கள் படிப்பு கடன் பெற எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதினை ஏழை பெற்றோர்களைக் கேட்டால் தெரியும். முஸ்லிம்கள் அந்த வங்கிகளில் இருந்தால் நமது மாணவர்களுக்கு அரசு படிப்பு லோன் வழங்க உதவி செய்வார்களல்லவா? இது போன்று தான் மற்ற பொது நிறுவனங்களிலும் வேலை கிடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, மற்றவர்களுக்கும் உதவி செய்வார்களல்லவா?




8) தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் ஆனால் முஸ்லிம்கள் தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படி பெருவதின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும். ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.



மேற்கூறிய யோசனைகள் நமது சமூதாயம் முன்னேறுவதிற்கான கடல் போன்ற யோசனைகளில் சிறு துளி நீர் போன்றதே. துடிப்பான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சழூக அமைப்புகள் நமது சமூதாயத்தில் இல்லாமலில்லை. அந்த இளைஞர்கள், நிறுவனங்கள் நமது சமூதாய மக்கள் பின்தங்கிய சழூதாயத்திலிருந்து முன்னேறிய சமூதாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் அரசு சலுகைகளை நாம் நழுவ விடக்கூடாது என வேண்டுகிறேன்.


நன்றி : நீடூர் இன்போ

1 comment:

Siraj said...

மிக மிக அருமையான கட்டுரை, அனைத்து முஸ்லிம்களுக்கும், தாங்கள் குடும்பம் மற்றும் ஜாமாத் இஸ்லாமிய அமைப்புகள் இதனை எடுத்து சென்று விழிப்புனர்வு செய்ய அல்லா துணை செய்யவேண்டும்