Friday, March 27, 2009

மதவாதத்திற்கு விழுந்த மரண அடி!




சஞ்சய் காந்தி, மேனகா காந்தி தம்பதியினரின் ஒரே மகன் வருண்காந்தி. நேரு குடும்பத்தில் இருந்து மதவாதத்திற்கு தனி பாதை போட்டு வந்திருக்கிறார். உ.பி. பிலிபிட் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர். மேனகா காந்தி தன் மகனுக்காக விட்டுக் கொடுத்த அந்த தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்று முஸ்லிம்களுக்கு எதிராக பேசியிருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார். அவரது பேச்சு பதியப்பட்ட ஒலிப்பதிவை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. அதே கையோடு, வருணுக்கு கட்சியில் டிக்கெட் தரவேண்டாம் என்று பாஜகவுக்கு அறிவிக்கையும் அனுப்பியிருக்கிறது.


இதன்மூலம், அரசியல் ஆடுகளத்தில் பாஜகவுக்கு களமிறங்கிய நேரு குடும்பத்து விக்கெட்டை தேர்தல் ஆணையம் வீழ்த்தியுள்ளது. சீக்கிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மேனகா. இந்து மதவெறியராக வருணை வளர்த்திருப்பதில் ஒரு தாயாக மேனகா தோல்வி கண்டுள்ளார். மிருகங்கள் வதைபடுவதைக் கண்டு பதை பதைக்கும் மேனகா காந்தி தன் மகனின் வெட்டு பேச்சு பற்றி மௌனம் காப்பது இரக்க உணர்ச்சி பற்றிய அவரது மதிப்பீட்டை ஆய்வு செய்கிறது.

வருணின் தந்தையான சஞ்சய் காந்தி (இந்திரா காந்தியின் இளைய மகன்) அவசர நிலை காலத்தில் மேற்கொண்ட மனிதவிரோத செயல்களை இன்றைய தினத்தில் வரலாற்றுப் பக்கங்களே அறியும். சஞ்சய் காந்தியின் கோர மரணத்திற்குப் பின் மாமியாருடன் (இந்திரா காந்தி) நேர்ந்த மோதலால் குடும்பத்தை விட்டும், காங்கிரஸை விட்டும் வெளியேறினார் மேனகா. 90களுக்குப் பிறகு பாஜகவில் சீட் வாங்கி எம்.பி.யானார். அந்த தொடுதலில் இருந்து மதவெறி அரசியல் வருணுக்கும் தொற்றியிருக்கிறது. மோத்திலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று மிதவாதப் பாரம்பரியத்தில் இருந்து திசைமாறி இன்று பாஜகவின் மதப்பசிக்கு வருண் பலியாகி இருக்கிறார். வம்பில் மாட்டிக் கொண்டார் வருண் என்று தெரிந்ததும் அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று முத­ல் நழுவிக்கொண்டது பாஜக. பாஜக சொல் கேட்டு சொந்த கட்சிக்குள் தடுக்கி விழுந்தவர்கள் பலர் உண்டு. உதாரணம் அன்று கல்யாண் சிங், இன்று வருண் காந்தி.


வருண் காந்தி அரசியல் அரிச்சுவடியின் அறிமுகப் பக்கத்தையே இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. அதிரடியாகப் பேசி தடாலடியாக பிரபலப்பட அவர் விரும்பியிருக்கலாம். ஏற்கனவே விரித்துவைத்த வலையில் வருண் லாவகமாக வந்து சிக்கிக் கொண்டார் என்றும் சொல்லலாம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு பலருக்கும் எச்சரிக்கையாகவும் உள்ளது. முன்னர், மதவெறியைத் தூண்டி பேசினார் என்று 6 ஆண்டுகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய பால்தாக்கரேவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது

.
மதவெறி பேச்சாளர்கள் ஒரு கட்சிக்கோ, இயக்கத்துக்கோ தலைவராக, பொறுப்பாளராக நீடிக்கக் கூடாது என்றும் அவ்வாறு நீடிக்கும் கட்சி தடை செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் துணிச்சலுடன் அறிவிக்க வேண்டும்.ஒரு கட்சி அறிவிக்கும் வேட்பாளர் குறித்து கருத்துச் சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று பாஜக கூறியிருக்கிறது. இதில், வருணை காப்பாற்றுவதைவிட, இத்தகைய மதவெறிப் பேச்சுக்களைக் காப்பாற்றுவது பாஜகவுக்கு அவசியப்படுகிறது.


எடுத்துரைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கும் கூட உரிமை இல்லை என்றால் பின்னர் இவர்களை யார்தான் இடித்துரைப்பது? 2000 உயிர்களை பலி கொண்ட நரேந்திர மோடி மீண்டும் முதல்வராவதைத் தடுக்க இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கோ, நீதித்துறைக்கோ அதிகாரம் இருந்ததாகத் தெரியவில்லை. பாபர் பள்ளியை இடித்துவிட்டு ஆரத்தழுவி ஆழிங்கணம் செய்யும் அத்வானி, உமாபாரதியின் ஆனந்த தாண்டவத்தை, பளிங்கு திரைகளில் பார்த்த பிறகும் அவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தின் தூண்களுக்கு வலுவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்துக்கும் அனுமதி இல்லை என்றால் மதவெறியிடம் இருந்து மக்களாட்சியை யார், எப்படிக் காப்பாற்றுவது?


Thanks to TMMK

No comments: