Thursday, March 26, 2009

பாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்!






பொதுவாகவே இந்தியக் காவல்துறையும் உளவுத்துறையும் காவிமயமாக்கப்பட்டுள்ளது என்றதொரு குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையும் கிட்டத்தட்ட இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் மும்பைக் காவல்துறையின் செயல்பாடுகளை எடுத்துக் கூறமுடியும். அந்த அளவிற்கு மும்பைக் காவல்துறையின் பாஸிஸ, காவி முகம் 1992 பாபரி மஸூதி குண்டுவெடிப்பின்போது மும்பையில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் வெளிப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் மும்பைக் காவல்துறையின் முஸ்லிம் விரோதச் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தாலும் அவை ஊடகத்துறையில் ஊடுருவியுள்ள பாஸிஸக் கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் மக்களிடையே வெளிப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிலும் குண்டுவெடிப்பாக இருந்து விட்டால் உடனடியாகச் சில முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து, முஸ்லிம் சமுதாயத்தைக் கூண்டில் நிறுத்துவது இப்பாஸிஸக் காவல்துறையின் வாடிக்கையான செயல். அவ்வேளைகளில் காவல்துறைக்குப் போட்டியாக ஊடகங்களும் நான் முந்தி, நீ முந்தி என இல்லாத "இஸ்லாமியத் தீவிரவாதத்தை" முஸ்லிம் பெயர்களில் சந்தைப் படுத்துவது வழக்கம்.

மாறிவரும் வேக உலக நடப்புகளில் மாய்ந்து போகும் குண்டுவெடிப்புகளின் வடுக்களோடு, அதில் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டு "தீவிரவாதிகளாக்கப்பட்ட" முஸ்லிம் இளைஞர்களின் கதையையும் மக்கள் மறந்து விடுகின்றனர். மறந்து விட்ட மக்களுக்கு எதற்காக வீணாக நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, பல வழக்குகளிலும் 'அவசரமாக'க் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைகள் மூலம் அதிர்ஷ்டவசமாக நிரபராதிகள் எனத் தெளிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும்போது, ஆரம்பத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" எனவும் புதிய-புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லாத தீவிரவாத இயக்கங்களையும் காவிக் கூட்டணி அமைத்துள்ள பாஸிஸ ஊடகங்களும் மறைத்து விடுகின்றன.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, மும்பைத் தாக்குதலின்போது ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிமியின் புதிய தென்னகப் பதிப்பு என்று சொல்லப் பட்ட, "டெக்கான் முஜாஹிதீன்!". ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் செயல்பட்ட/படும் உண்மையான தீவிரவாதிகளால் உருவாக்கப்படும் இந்தப் புதுப்புது தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள், பிந்தைய காலங்களில் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதற்கு வசதியாக உளவுத்துறையின் தலைமையகங்களில் பதியப்பட்டு விடுவது வழக்கம்.

ஆனால், டெக்கான் முஜாஹிதீன் விவகாரத்தில் மட்டும் "மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் நாங்கள்தான்" என ரஷ்ய/கனடாவிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் பெயரில் மின்னஞ்சல் அனுப்பிய ஆசான்கள் தயவால் பிழைத்துக் கொண்டது. ஆரம்பத்தில் "டெக்கான் முஜாஹிதீன்" பெயரில் ரஷ்யாவிலிருந்து வந்த மின்னஞ்சலை மையப்படுத்தி விழாக் கொண்டாடிய பெரு ஊடகப் பணமுதலைகள், இப்பொழுது அதனைக் குறித்து வாயைத் திறப்பதே இல்லை.

அதனைப் போன்ற மற்றொரு பெயர்தான், மும்பைத் தாக்குதலுக்கு முன்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின்போது அறிமுகப்படுத்தப்பட்ட சிமியின் இல்லாத "இந்தியன் முஜாஹிதீன்" கிளை அமைப்பும். அத்தகையதொரு இல்லாத நிழல் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்தக் குண்டுவெடிப்புகளின்போது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலரை, அவ்வியக்கங்களின் நிறுவனர்களாகவும் துணை நிறுவனர்களாகவும் காவல்துறையும் ஊடகங்களும் அறிமுகப்படுத்தின. அவர்களைக் "கண்டு பிடித்த"க் காவலர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன.

அதில் ஒருவர்தான் சாதிக் ஷேக் என்பவர். இரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்ட இவரை, "இந்தியன் முஜாஹித்தீன் (IM) அமைப்பின் துணை நிறுவனராக" மும்பைக் காவல்துறை அறிமுகம் செய்தது. அப்போது இவரைக் குறித்துப் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடாத ஊடகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இறுதியாக, இந்த சாதிக் ஷேக் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர்தான் இந்தியன் முஜாஹிதீனின் துணை நிறுவனர் என அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் இத்தகைய செயலுக்கு அவர் வருந்துவதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் பாஸிஸ ஊடகங்கள் பொய்களைக் கடைபரப்பின.

தற்பொழுது, குற்றங்களை 'ஒப்புக் கொண்ட' அதே சாதிக் ஷேக் நிரபராதி எனவும் அவருக்கும் இரயில் குண்டுவெடிப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அப்பாவியான அவரை மும்பைக் காவல்துறை பொய்க் குற்றம் சுமத்தி குற்றவாளியாக்கியதாகவும் கூறி, மும்பைத் தீவிரவாதத் தடுப்புத் துறை (ATS) அவரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவரது விஷயத்தில் மும்பைக் காவல்துறை செய்த அநியாயத்தைக் குறித்துத் தீவிரவாதத் தடுப்புத் துறை கூறும் தகவல் இதோ:கடந்த 2006ஆம் வருடம் ஜூலை 11ந் தேதி நிகழ்ந்த இரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிப்பட்டு, மும்பைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சாதிக் ஷேக். அதன் பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைக்குப் பிறகு தற்போது "குண்டு வெடிப்பிற்கும் இவருக்கும் தொடர்புள்ள எந்தவோர் ஆதாரமும் கிடைக்காத காரணத்தினால் குற்றமற்றவர்" என்று நிருபணமாகியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

ATS விசாரணையின் ஒரு பகுதி!
"குற்றத்தை சாதிக் ஒப்புக் கொண்டார்!" என மும்பை குற்றப்பிரிவு இதுநாள்வரை கூறிவந்த தகவல் பொய்யானது என்பது வேறு வகையில் நிரூபணம் ஆகியுள்ளது.மும்பையின்
forensic science laboratory ஏ.டி.எஸ் இடம் சமர்ப்பித்துள்ள ஆய்வுகளான மூளையில் பதிவாகும் விஷயங்களைக் கண்டறியும் (brain mapping) மற்றும் பாலிகிராஃப் (polygraph) ஆகிய சோதனைகளின் மூலம் சாதிக், குற்றமற்றவர் என்று நிருபணம் ஆகியிருப்பதோடு, குற்றத்தினை ஒப்புக் கொள்ள வற்புறுத்தப் பட்டுள்ளார் என்பதையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

இந்தத் திடுக்கிடும் தகவல், இவ்வழக்கில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பாவி சாதிக்கைக் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திய மும்பை குற்றப்பிரிவு, அஹமதாபாத் காவல்துறையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் ஆகியோரின் கூற்று ஒட்டுமொத்தமான பொய் மூட்டைகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.




ATS இன் இந்த அறிவிப்பு மும்பையின் குற்றப்பிரிவுக் காவல்துறைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2008 செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மும்பைக் குற்றப்பிரிவு (Mumbai crime branch) காவல்துறையினர், 21 பேரைக் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்றும், விசாரணையின்போது குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக சாதிக் ஒப்புக் கொண்டதாகவும் மும்பைக் குற்றப்பிரிவு தகவல் வெளியிட்டது.மும்பைக் குற்றப்பிரிவு வெளியிட்ட அந்தத் தகவல் ATSக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில், இதே சம்பவம் தொடர்பாக ATS ஏற்கனவே தனது விசாரணையின் கீழ் பதிமூன்று பேரைக் கைது செய்திருந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சிமி உறுப்பினர்கள் என்ற சந்தேகக் கண்ணோடு பதினோரு ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ATS தயாரித்திருந்தது.
இச்சூழலில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமது விசாரணையை சாதிக் பக்கம் திருப்பிய ATS, இரண்டு வாரங்கள் கடும் விசாரணையை அவரிடம் மேற்கொண்டது. விசாரணையின் இறுதியில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு தமக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ATS அறிவித்துள்ளது. "முப்பத்தியொரு வயதான சாதிக்கைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கைது செய்து நாங்கள் விசாரணையைத் துவக்கினோம். இருவாரத் தொடர் விசாரணையில் ரெயில் குண்டுவெடிப்பிற்கும் சாதிக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவானது. மேலும் தொடர்புடைய ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை!" என்றார் ATS அதிகாரி ஒருவர். ATS தற்போது செய்வதறியாமல், நீதிமன்றத்தில் தனது தரப்பிலான புகாரைச் சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் சாதிக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுவார் என்று ATS அறிவித்துள்ளது.அதே சமயத்தில், தான் தவறு இழைத்துவிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் சாதிக் கூறியதாக, ஒரு செய்தி ஊடகம் திரித்து வெளிட்ட சிடி வெளியீட்டினை ATS கடுமையாகக் கண்டித்துள்ளது.

குண்டுவெடிப்புகளும் அசம்பாவிதங்களும் நிகழும் வேளைகளில் காவிமயமாக்கப்பட்டுள்ள காவல்துறையும் ஊடகங்களும் போட்டியிட்டுக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக்கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அதே வேளையில், தொடர் விசாரணைகளின்போது அதிர்ஷ்டவசமாக யாரையாவது நிரபராதி எனக் கண்டறியப்பட்டால், அவர் தொடர்பாக அவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதக் கட்டுக்கதைகளைக் குறித்தோ அவரது வாழ்க்கை சீரழிந்துள்ளதைக் குறித்தோ எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி, அச்செய்திகளைக் கண்டுகொள்வதையே இந்த ஊடகங்கள் தவிர்த்து விடுகின்றன. ஊடகத்துறையின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் காவித்துவம் ஆணிவேராக ஆகிவிட்ட ஊடகங்களிடமிருந்து நியாயங்களை எதிர்பார்ப்பதில் இனியும் எவ்வித அர்த்தமுமிருப்பதாகத் தெரியவில்லை.



Thanks to satyamargam

No comments: