"சார், என் பைக்கை நிறுத்திட்டு கடைக்குள்ள போயிட்டு வர்றதுக்குள்ள எவனோ திருடிட்டுப் போயிட்டான் சார். எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க.."
தில்லாலங்கடி திருடர்களின் திருவிளையாடல்களால் தினசரி போலிஸ் ஸ்டேஷன் வாசலைத் தட்டும் இது போன்ற புகார்கள் பல. சைடு லாக்கையும் உடைத்துத் திருடும் கும்பல்களிடம் இருந்து பைக்குகளைக் காப்பற்றத்தான் "ரிமோட் லாக்கை" அறிமுகம் செய்தார்கள். ஆனால், அதன் மூச்சையும் நிறுத்திவிட்டு, திருடும் கும்பல்களை என்ன செய்வது,?
இதை தடுக்க ஒரு கருவி கண்டுபிடித்திருக்கிறார், தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி. இவர் இங்குள்ள சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படிக்கிறார். " நான் வடிவமைத்திருப்பது மொபைல் போன் மூலமாகச் செயல்படும் ஒரு லாக். அதாவது, மொபைல் போன் மதர் போர்டில், லைப் டைம் சிம் கார்டு ஒன்றைப் பொருத்தி, அதனுடன் "ஆக்ஸிலேஷன் போர்டு" என்ற சர்க்கியூட்டையும் பைக்கின் சீட் அடியில் பொருத்தி இருக்கிறேன். இஞ்சினின் இயக்கத்தை எனது செல்போன் நம்பரில் இருந்து மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த போர்டிலிருந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் லாக் செய்த பைக்கை, சைடு லாக்கை உடைத்தோ அல்லது கள்ளச்சாவி மூலம் திருட முயன்றால், அடுத்த வினாடியே உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் வரும் வகையில் இந்த சர்க்யூட் அமைக்கப்பட்டிருக்குது. பைக் திருடப்படுகிறது என்பதைத் தெரிந்துக்கொண்டு, போன் இணைப்பை கட் செய்துவிட்டு காரியத்தில் இறங்கும் வரை தொடர்ந்து பல முறை தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கும். கிக்கரை உதைத்தோ வயரை கட் செய்துவிட்டோ தள்ளிவிட்டோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது. அதையும் மீறி தள்ளிக்கொண்டே சென்றுவிட்டால் சிம் கர்ட் மூலம் பைக் எந்த எல்லைக்குள் இருக்கிறது என்று காவல்துறை மூலம் தோராயமாகக் கண்டுபிடித்துவிடலாம். மேலும், லாக் செய்ய மறந்து நீண்ட தூரம் சென்றுவிட்டால் கூட, செல்போன் மூலம் லாக் செய்துகொள்ளலாம்" என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் முனியசாமி.
"சோதனை முயற்சி என்பதால் இதற்கு 1,100 ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. அதே நேரம், இந்த உபகரணத்தை தற்காலிகமாக பைக்கில் பொருத்தியிருப்பதால் இந்த நிலையில் திருடர்கள் இந்த உபகரணத்தையும் செயலிழக்கச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிலேயே, இதை சேதப்படுத்த முடியாத இடத்தில் பொருத்திவிட்டால், கண்டிப்பாக காலத்துக்கேற்ற சிறந்த பாதுகாப்பு கருவியாக இருக்கும்" என்கிறார்.
இந்த செல்போன் லாக் தயாரித்த பின்னணி பற்றி முனியசாமி கூறுகையில், " அப்பா மீன்பாடி வண்டி ஓட்டுறதால குடும்பம் வறுமையிலதான் ஓடுது. இந்த லாக் சிஸ்டத்தையே நண்பர்கள் தங்கமணி, கோமுசங்கர், ராபர்ட் மூணு பேரோட உதவியாலத்தான் செஞ்சேன்" என்று நண்பர்களின் உதவியை குறிப்ப்பிட்டவர்,"குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டும் லாக் செய்யக்கூடிய, நடைமுறையில் இருக்கும் ரிமோட் லாக்கைவிட இது மிகவும் சிறந்தது" என்கிறார் நம்பிக்கையுடன் முனியசாமி.
நன்றி: மோட்டார் விகடன்.
No comments:
Post a Comment