Thursday, May 28, 2009

120 வது ஆண்டில் பாரிஸ் ஈஃபில் கோபுரம்



பாரிஸ் நகரத்தின் அழகு மகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் ஈபில் கோபுரம் 120 ம் ஆண்டின் கொண்டாட்டத்தில் உள்ளது. அலெக்சாண்டர் குஸ்தவ் ஈஃபில் என்ற பிரெஞ்சு கட்டிடக்கலை நிபுணரால் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. உலோகவியலில் ஆர்வங்கொண்டவரான இவர், இந்த கோபுரத்தை நிறுவ முயன்ற போது பெரிய எதிர்ப்புகளை எதிர்க் கொள்ள வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இதன் கட்டுமானத்திற்கு எதிராக கலைஞர்களும், எழுத்தாளர்களும்,மக்களும் போராடியிருக்கிறார்கள். ஆனால் அதுவே பின்னர் உலக அதிசயங்களுள் ஒன்றானது வேறு வரலாறு.

1887 ம் ஆண்டு ஜனவரி 26 ல் துவங்கிய இதன் நிர்மானப் பணி, இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், ஐந்து நாட்களில் நிறைவுப்பெற்றது.
முதல் தளம் 1888 ஏப்ரல் முதல் தேதியிலும், இரண்டாவது தளம் அதே ஆண்டின் ஆகஸ்ட் 14 லிலும், கோபுரம் முழுமையாக 1889 மார்ச் 31 லும் முடிவுற்றது.
இக்கோபுரத்தின் உயரம் 324 மீட்டராகும். சமீபகாலங்களில் ஆண்டு தோறும் 6 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் இதை, 10,100 டன் இரும்பினால் உருவாக்கியிருக்கிறார்கள்.

முதலாம்,மற்றும் இரண்டாம் உலக‌ப்போர் காலங்களில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.

ஏழு வருடத்திற்கு ஒரு முறை வர்ணம் பூசப்படுகிறது. தற்போது 19 வது முறையாக, கடந்த மார்ச் மாதம் தொடங்கியிருக்கும் வர்ணப்பூச்சு பணிகள் 18 மாதங்கள் நடைபெறும்.

இரவு நேரங்களில் கண்களைக் கவர, இக்கோபுரத்தில் 20,000 பல்புகள் மின்னுகின்றன. இதில் இருக்கும் மின்தூக்கி(லிஃப்ட்) வினாடிக்கு இரண்டு மீட்டர் வேகம் கொண்டது.

வெப்பநிலை மாற்றத்தில் இக்கோபுரம் விரிந்து சுருங்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

1985 ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும்,அப்போதைய பிரெஞ்சு அதிபரான ஃப்ரான்சுவா மித்ராந்த் இருவரும் இக்கோபுரத்திலிருந்து தான் அங்கு நடைப்பெற்ற கலாச்சார விழாவை பார்வையிட்டனர்.

எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மனதை கொள்ளைக் கொள்ளும் அழகும் பிரமாண்டமும் இதன் சிறப்பு. இரவு நேரங்களில் இதன் அழகும் வனப்பும் இரட்டிப்பாகி பாரிஸ் நகரை மிளிர வைக்கிறது. மெட்ரோ ரயிலிலும், படகிலும் பயணித்து இதனை ரசிக்கலாம்.

கட்டணம்: 13 யூரோ
ஒன்ஸ்மோர் போலாமா டாடி..

No comments: