Tuesday, April 28, 2009

தும்மல், ஒவ்வாமை - சில மருத்துவக் குறிப்புகள்

டாக்டர். எம். ரமணிராஜ்
[தும்மலை வரும்முன் காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம்.]



தும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்... கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவது, நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள், நமது உடலுக்குள் குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.



தும்மலின் எஜமானன் ஒவ்வாமை
நமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில் அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் தான் உதவுகின்றன. ஒன்று தோல் பகுதி. இன்னொன்று மூக்கு. அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது. தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம். ஒரு சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது. அதேபோல் மூக்கானது ஒவ்வாமையை தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.



ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தும்மல் என்பதே பெரும்பாலும் வரக்கூடாது. தும்மல் வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனை, பூக்களின் மகரந்தத் துகள்கள், தூசி, வாகனப் புகை, நாய், பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோது, தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது.



தும்மலை நிறுத்த வேண்டுமெனில்..
தும்மலை நிறுத்த வேண்டுமெனில் உடனடியாக அந்த ஒத்துக்கொள்ளாத பொருள், நம் உடலை அண்டாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒவ்வாமை என்று வந்துவிட்டால், அதற்கு சரியான சிகிச்சை, அந்த ஒவ்வாமை பொருளை விட்டு அம்மனிதன் ஒதுங்கியிருத்தலே, மற்றபடி ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வென்பது கிடையாது. ஆங்கில மருத்துவத்தில் என்றில்லை... வேறு எந்த மருத்துவ முறையிலுமே ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது அரிதான விஷயம். ஆனால் சமீப காலங்களில் மருத்துவர்கள் ஒவ்வாமைக்கு ஒரு புதிய வகை ட்ரீட்மெண்ட்டை அளித்து வருகிறார்கள். அது கிட்டத்தட்ட வாக்ஸ'ன் போடும் முறையை ஒத்ததுதான். அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணியை கண்டறிந்து அதையே குறைந்த Concentration அளவை அதிகரித்து. ஒவ்வாமைக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்குகிறார்கள். ஆனால், இந்த மருத்துவ முறை இதுவரை வெறும் 50 சதவிகித வெற்றியையே தந்திருக்கிறது என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.



தும்மலால் உண்டாகும் நோய்கள்தும்மலை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் அது பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுத்துவிடும். மெல்ல மெல்ல ஆரம்பித்து அதன் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும். முதலில் Allergic Rhinitis எனப்படும் பிரச்னை உண்டாகிறது. அதாவது, மூக்கின் உள்சவ்வுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, மூக்கானது முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் இதை கவனிக்காமல் விட்டால் அடுத்த நிலையான பாலிப் என்னும் சதை வளர்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.



இதையும் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் பூஞ்சைக் காளான் தொற்று (Fungal Sinusitis) அபாயம் ஏற்படும். இந்த நிலையை ஒரு நோயாளி எட்டிவிடும் பட்சத்தில் அவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரிடலாம். இந்தப் பூஞ்சைக் காளான் தொற்றானது மெல்ல மெல்ல பரவி, மூளையைத் தாக்கும் பேராபத்து உள்ளது அத்தோடு நிற்காமல் ப்ரோப்டோசிஸ் (Proptosis) எனப்படும் கண் வெளித்தள்ளும் நோயை ஏற்படுத்தும். இந்நிலையில் நோயாளியின் கண்கள் உள்ளிருந்து வெளித்தள்ளப்பட்டுவிடும். நினைத்தாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் மோசமான நிகழ்வு இது. பாதிப்பு அத்தோடு முடிகிறதாவென்றால் அதுதான் இல்லை. மூளையிலுள்ள மிக முக்கிய 12 நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை நரம்பு செயலிழப்பு ஏற்படலாம். மேலும், மூளையில் கட்டி, சைனஸ் அறைகளில் வீக்கமேற்பட்டு சிழ் நிறைந்த கட்டி என... கவனிக்காமல் விடப்படும் தும்மலின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.



தும்மல் அடுத்தவருக்கு பரவுமா?
ஒருவருக்கு தும்மல் இருவகைகளில் ஏற்படலாம். ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மல், அடுத்தவரை தொற்றாது. தும்மும் நபர் தவிர, இந்த வகையால் பிறருக்கு பாதிப்பில்லை. ஆனால் கவனிக்காமல்விட்டால் பிரச்னைதான். ஆனால் ஜலதோஷம் போன்ற வைரஸால் உண்டாகும் நோய்களின்போது தும்மல் வரும் பட்சத்தில், அது அடுத்தவரை நிச்சயம் பாதிக்கும். ஆனால், இப்படி வைரஸால் உண்டான ஜலதோஷ தும்மலின் ஆயுட்காலம் வெறும் ஏழு நாட்களே. காரணம், ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் வாழ்நாள் வெறும் ஏழு நாட்கள் என்பதால்தான். அதனால் வைத்தியம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு வாரத்தில் தானாக அது சரியாகிவிடும்.



குழந்தைகளைத் தாக்கும் தும்மல்
சில குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே தும்மத் தொடங்கிவிடுகின்றன. உடனே அம்மாவின் ஒவ்வாமை பிரச்னையால்தான் இவ்வாறு உண்டானது என்று கூறுவது தவறு. ஏனெனில் ஒவ்வாமை பரம்பரை நோயன்று, இயல்பாகவே அக்குழந்தைக்கு ஒவ்வாமை பிறக்கும்போதே இருந்திருக்கலாம். இப்படி பிறக்கும்போதே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் பின்னாட்களில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். தும்மலை அலட்சியப்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருதூதுவர்களிடம் காட்டி, அவர்களின் எதிர்காலத்தை பிரச்னையில்லாததாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.



தும்மலுக்கான மருந்துகள்
பொதுவாக ஜலதோஷம் தொடர்பான வைரஸ் தும்மலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால், இன்னொரு வகையான ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலுக்குத்தான் பல நிலைகளில் வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டி அலர்ஜி மருந்துகளான அவில், செட்ரிசைன் (Cetrizine) போன்றவை அளிக்கப்படுகின்றன. அதுவே நோயாளி பாலிப் என்னும் நோய் நிலையை அடைந்திருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளை சிபாரிசு செய்கிறோம். இதனால் சில பின் விளைவுகள் உண்டென்றாலும் இதனைக் காட்டிலும் சிறப்பான மருந்துகள் வேறில்லை. அதிலும் நோய் கட்டுப்படாத பட்சத்தில் ஒரே வழி அறுவை சிகிச்சைதான்.



வரும்முன் காக்க...
தும்மலை வரும்முனை காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம். உதாரணமாக, ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலை, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம். இந்தத் தும்மலுக்கு நிரந்தரத் தீர்வே இல்லையா? என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பதிலாக, தீர்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில், தும்மல் ஒரு நோயல்ல, நோயின் அறிகுறி மட்டுமே. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அறிகுறி தெரிந்தால்தானே நோயை குணப்படுத்த முடியும்
நன்றி: கூடல்.காம்

No comments: